தினமணி கொண்டாட்டம்

மேம்பாலத்தின் வயது 134!

பிரதீப் சக்கரவர்த்தி

மதுரையின் முக்கிய அடையாளம் மீனாட்சி அம்மன் கோயில். துணை அடையாளங்கள் பல உண்டு. அதில் ஓன்றுதான் "ஏ.வி மேம்பாலம்' என்று அழைக்கப்படும் "ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம்'. இந்த மேம்பாலத்திற்கு 133 வயது நிறைவாகி 134 -ஆவது வயதில் நுழைகிறது.

மதுரை நகரை வட மதுரை, தென்மதுரையாக வைகை ஆறு பிரித்திருந்தது. நடுவில் ஓடும் வைகையைக் கடக்க பாலம் ஒன்று கட்டலாம் என்று அன்றைய ஆங்கிலேயே ஆட்சியாளர்களுக்குத் தோன்றவே மதுரையின் முதல் பாலம் உருவானது. மதுரை பாரம்பரியமாகப் பாண்டியர்கள் ஆண்டனர்... வெள்ளையர்களுக்கு முன்பு திருமலை நாயக்கர், ராணி மங்கம்மாள் ஆண்டனர். பிறகு வெள்ளையர்கள் மதுரையை ஆட்சி செய்தனர்.

மதுரையின் முதல் ஆட்சியர் மைக்கேல் லியோ. 1790 செப்டம்பர் 6-இல் மதுரை நகரின் முதல் ஆட்சியராக மைக்கேல் பதவி ஏற்றார். 1837-இல் ஜான் ப்ளாக் கெயில் என்பவர் மதுரையிலுள்ள கோட்டைச் சுவர்களை இடித்துத் தள்ளி நகர விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்தார்.

மதுரை நகரை ஆளுமை செய்ய மதுரை நகரின் வடக்கு, தெற்கு பகுதிகளை இணைக்க 300 மீட்டர் நீளத்தில் வைகை ஆற்றின் குறுக்கே தூண்கள் அமைத்துப் பாலம் ஒன்றைக் கட்ட தீர்மானம் ஆகியது. 1884-இல் மதுரை ஆட்சியராக இருந்த ஆல்பர்ட் விக்டர் பாலத்தின் கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார். பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவேற இரண்டரை ஆண்டுகாலம் பிடித்தது. பாலத்தில் 14 தூண்கள், 14 வளைவுகள். மேலும் கணக்கற்ற பாறை கற்களால் கட்டப்பட்டுப் பாலம் முழுமை பெற்றது. கோரிப்பாளையத்தையும் எதிர் கரையில் இருக்கும் நெல்பேட்டையையும் இந்த மேம்பாலம் இணைத்தது.

1886 டிசம்பர் 8-இல் பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது. மதுரையின் முதல் மேம்பாலம் உருவாக ஆட்சியர் ஆல்பர்ட் விக்டர் முயற்சி எடுத்ததால் பாலத்திற்கு அவரது பெயர் இடப்பட்டது. பொது மக்கள் "ஏ.வி பாலம்' என்று அழைக்கத் தொடங்கினார்கள். அன்று முதல் ஏ.வி பாலம் மதுரையின் அடையாளமாக மாறிவிட்டது.

இந்த 133 ஆண்டுகளில் "ஏ.வி பாலம்' வைகை நதியின் பல வெள்ளப் பெருக்குகளைப் பார்த்துவிட்டது. ஆங்காங்கே சில விரிசல்கள் ஏற்பட்டிருந்தாலும், பாலம் இன்றைக்கும் பலமாகவே நிற்கிறது. முன்பு பாலத்தில் இருவழிப் போக்குவரத்து இருந்தது. சில ஆண்டுகளாக ஒரு வழி போக்குவரத்தாக மாறியுள்ளது. பாலத்தைப் பலப்படுத்தும் பொறியியல் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கூடிய விரைவில், கோரிப்பாளையம் பகுதியில் கட்டப்பட இருக்கும் புதிய பாலத்துடன் ஏவி பாலத்தை இணைக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மதுரை மாநகரை இரண்டாகப் பிரிக்கும் வைகை ஆற்றின் தடம் கோச்சடை முதல் விரகனூர் வரை நீண்டுள்ளது. நதித் தடத்தின் நீளம் 12 கி.மீ. 2 தரை மட்ட பாலங்களும் வைகை நதித்தடத்தில் உள்ளன. நகரின் வட தென் பகுதிகளை இணைக்க ஏ.வி மேம்பாலம் போக மேலும் ஒன்பது மேம்பாலங்கள் பல்வேறு கால இடைவெளிகளில் வைகை வழித் தடத்தில் கட்டப்பட்டாலும் போக்குவரத்து நெரிசல் நகரில் குறைந்தபாடில்லை. ஏ.வி மேம்பாலத்தின் முக்கியத்துவமும் குறைந்து போகவில்லை..!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT