தினமணி கொண்டாட்டம்

கடைத் தெருவின்  கதை சொல்லி

கண்ணம்மா பாரதி


தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளத்தில் பிறந்து வளர்ந்து திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மூத்த எழுத்தாளரான நீல பத்மநாபனுக்கு 2007-ஆம் ஆண்டும், மூத்த எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு 2015-ஆம் ஆண்டும் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

மாதவன் சிறுநிலை வணிகராக வாழ்ந்தவர். படிப்பு ஒன்பதாம் வகுப்பைத் தாண்டவில்லை. மலையாள வழியில் படித்தவர். எழுத்தில் திருவனந்தபுர வட்டார வார்த்தைப் பிரயோகங்களைக் கதையின் களம், நுட்பம், நயம் கருதி பதித்து வந்தார். அதனால் "கடைத் தெருவின் கதை சொல்லி' என மாதவன் அடையாளப்படுத்தப்பட்டார்.

திருவனந்தபுரத்தின் பெரிய வணிக அங்காடியான சாலைக் கம்போளத்தில், "செல்வி ஸ்டோர்ஸ்' என்ற பாத்திரக்கடையை மாதவன் நடத்தி வந்தார். "இலக்கியச்சுவடுகள்' என்ற திறனாய்வு நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது மாதவனுக்கு அறிவிக்கப்பட்டபோது அவரைச் சந்தித்தோம்:

"எனக்கு பூர்விகம் செங்கோட்டை. எனது தாத்தா பெரிய செல்வந்தர். அப்பா ஆவுடைநாயகம் பிள்ளை, முதல் தாரம் இறந்ததும், என் அம்மா செல்லம்மாளை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து கொண்டது தாத்தாவுக்குப் பிடிக்கவில்லை. "நீ எனக்குப் பிள்ளையும் இல்லை.. நான் உனக்கு அப்பாவும் இல்லை... உனக்கு தம்பிடி காசு தரமாட்டேன்.. எங்காவது ஓடிப் போ' என்று அப்பாவை விரட்டி அடித்தார்.

அப்பாவுக்கு பஸ்ஸில் நடத்துனர் வேலை. ஆனால் அவரால் வாழ்க்கையை நடத்த முடியவில்லை. அண்ணன்மார்கள் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டுக் கடைகளில் வேலைக்கு அமர்ந்தார்கள்.. நான் திருவனந்தபுரம் சாலை தொடக்கப் பள்ளியில் சேர்ந்தேன்.

1944-இல் இரண்டாம் உலகப் போர். எத்தனை பணம் கொடுத்தாலும் கஞ்சிக்கு நாற்றம் அடிக்கும் அரிசி கூட கிடைக்காது. "வலியசாலை' கோயிலில் விநியோகிக்கப்படும் சூடான கட்டிச்சோறு வாங்கி வந்து வீட்டில் கொடுத்துவிட்டு அவசர அவசரமாகப் பள்ளிக்கு ஓடுவேன். முதல் வகுப்பு முடிந்திருக்கும். என் வறுமை நிலை தெரிந்ததால் ஆசிரியர் வகுப்பில் அமர அனுமதிப்பார். பள்ளி வாழ்க்கை பல படிப்பினைகளைத் தந்தது. பஞ்சைக் குடும்பம் போலவே, நட்பு வளையங்களும் பிய்ந்து தொங்கும் நூலாம் படைகளாகவே அமைந்து போனது.

அண்ணன்மார்கள் தமிழ் இதழ்களை வீட்டிற்குக் கொண்டு வருவார்கள். தொடக்கத்தில் அவற்றைப் பிரித்துப் படம் பார்ப்பேன். ஆண்டுகள் கடக்க... தமிழ் இதழ்களை (கலைமகள், கல்கி, ஆனந்தவிகடன், சுதேசமித்திரன், அமுதசுரபி) வாசிக்கத் தொடங்கினேன்...சந்தேகங்களை அப்பா அம்மாவிடம் கேட்டுக் கொள்வேன்... பள்ளியில், மலையாளம் பாடம் மூலம் மலையாளக் கவிஞர்கள், எழுத்தாளர்கள் என்னை மயக்கினார்கள்.

பதினாலு வயதில் கல்கியின் "அலை ஓசை', தேவனின் "துப்பறியும் சாம்பு', லட்சுமியின் "மிதிலாவிலாûஸ'யும் வாசித்துத் திக்கு முக்காடினேன். பற்றாத குறைக்கு, மலையாள மாபெரும் எழுத்தாளர்களான தகழியும், கேசவதேவும் பொற்றைக்காடும் வைக்கம் முகம்மது பஷீரும், தங்களது அற்புத நவீனங்களால் புதிய உலகுக்கு அழைத்துச் சென்றார்கள். தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை என்னை விடாமல் துரத்தியது. எனது எழுத்து நர்த்தனங்களுக்கு அப்போதைக்கு சலங்கை போடாமல் விலங்கு போட்டேன். மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்ட வெளிநாட்டுப் புதினங்களை வெறியுடன் விழுந்து விழுந்து வாசித்தேன்.'

"இருபத்திரெண்டாம் வயதில் தரமான மலையாள சிறுகதைகள், மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்ட ஆங்கிலக் கதைகளைத் தமிழில் மொழி பெயர்த்து, சென்னையிலிருந்து பிரசுரமாகிக் கொண்டிருந்த இதழ்களுக்கு அனுப்பினேன்.. பிரசுரமாயின... பத்து வாரங்களுக்குத் தொடர்கதைகளையும் எழுத வாய்ப்புகள் கிடைக்க சந்தோஷம் தாங்க முடியவில்லை. அண்ணன்மார்களும் நண்பர்களும், "காப்பியடித்து மாதவன் எழுதிய கதைகள் பிரசுரமாகின்றன.. இனி மாதவனைப் பிடிக்க முடியாது. அவன் தமிழ் எழுத்தாளன் ஆயிட்டான்' என்று கேலி செய்வார்கள்.

சாலைத் தெருவில் விற்பனைப் பொருள்கள் தமிழ்நாட்டிலிருந்துதான் வர வேண்டும். அங்கு வரும் தமிழ் வர்த்தகர்கள், மலையாள வர்த்தகர்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக மலையாள வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். பதிலுக்கு மலையாள வணிகர்கள் தமிழ் வணிகர்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காகத் தமிழ் சொற்களைப் பேச்சில் பயன்படுத்துவார்கள். இதன் காரணமாக மலையாளம் தமிழ் கலந்த "சாலை பாஷை' உருவாகிப் போனது.

பள்ளியில் மலையாளமும், சொந்தமாகத் தமிழும் படித்த அனுபவம், அந்த சாலை பாஷையை எனது படைப்புகளில் பயன்படுத்திக் கொள்ள உதவியது. நான் வெளிச்சத்திற்கு அதிகம் வராதது தமிழகத்திலிருந்து விலகி திருவனந்தபுரத்தில் வாழ்ந்ததும் ஒரு காரணம். வாழ்க்கையின் விளிம்பில் நின்று வாழ அல்லோலப்படும் சாலைத் தெருவின் அடித்தட்டு மக்களைக் கதைகளில் வார்த்த நான் "தூவானம்' நாவலின் நாயகன் மூலமாக என்னைப் பங்கு வைத்தேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒசூா் அரசு மருத்துவமனையில் மருத்துவத் துறை இயக்குநா் ஆய்வு

அதிமுக- திமுக நிா்வாகிகளிடையே மோதல்: போலீஸாா் விசாரணை

கோடை மழையில் குளிா்ந்தது ஒசூா்

வாக்குப் பதிவுக்குப் பின் தோ்தல் விதிமுறைகளை தளா்த்த கோரிக்கை

தீத்தொண்டு வார விழா: துண்டுபிரசுரங்கள் விநியோகம்

SCROLL FOR NEXT