தினமணி கொண்டாட்டம்

ரோஜா மலரே! - 71: படப்பிடிப்புக்கு தேடி வந்த அமெரிக்க மருத்துவர் - குமாரி சச்சு

சலன்

அந்த வயதான மனிதரை என்னைப் பார்க்க அனுமதிக்கும் படி காவலாளியிடம் சொன்னேன். அந்த முதியவர் என்னிடம் வந்து  வணக்கம் கூறி விட்டு ""அம்மா உங்களுக்கு நினைவிருக்கிறதா? "காதலிக்க நேரமில்லை' படப்பிடிப்புக்கு இங்கு வந்து இருந்தீர்கள். அந்த இடம் எங்கு இருக்கிறது என்று எனக்குத் தெரியும். எனக்கு இன்றும் அந்தப் படமும் படப்பிடிப்பு நடந்த இடமும் நன்றாக நினைவில் இருக்கிறது. நீங்கள் பார்க்க விரும்பினால்  அந்த இடங்களை எல்லாம், உங்களுக்குக் காட்டுகிறேன்''என்று சொன்னார்.

நான் சொன்னேன் ""சார், இங்கு வேறு ஒரு படப்பிடிப்பிற்காக   வந்திருக்கிறேன். நான் சென்று விட்டால் அவர்களுக்குப் படப்பிடிப்பு தடைப்படும். அப்படி எல்லாம் அவர்களுக்குக் கஷ்டம் கொடுக்க விரும்பவில்லை. என்னால் வரமுடியாது  நன்றி'' என்று சொன்னேன். அவர் தொடர்ந்து சொன்னார். ""இன்று பலவும் மாறி விட்டது. அன்று இருந்த நிலையிலே இன்று எதுவும் இல்லை. நான் அன்று இளைஞனாக இருந்தேன். அது மட்டுமல்ல. "காதலிக்க நேரமில்லை' படத்தை நான் பலமுறை பார்த்து இருக்கிறேன். காரணம், எங்கள் ஊரில் இந்தப் படம் எடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் இதன் நகைச்சுவை காட்சிகள் இன்றும் எங்களைச் சிரிக்க வைக்கின்றன'' என்று சொன்னார்.

சமீபத்தில் ஒருநாள் என்னுடைய தோழி ஒருத்தி என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டாள். ""அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு டாக்டர் அவருக்குத் தெரிந்தவராம். அவர் சென்னை வந்து இருக்கிறாராம். எனக்கு உங்களைத் தெரியும் என்று சொன்னவுடன் என்னைப் பார்க்க விரும்பினாராம். ""நாளை எங்கே நீங்கள் இருக்கிறீர்கள், அவரை அழைத்து வரட்டுமா?'' என்று என்னைக் கேட்டார். படத்தின் ஷுட்டிங்கில் தான் இருப்பேன் என்று சொன்னேன். அடுத்த நாள் அவர்கள் வரப் போகிறார்கள் என்று என் நினைவில் இல்லை. நான் அதை அடியோடு மறந்து விட்டேன்.

படப்பிடிப்பில் என்னுடைய காட்சிகள் முடிந்தவுடன், இயக்குநர் என்னிடம் வந்து, ""நீங்கள் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்'' என்று கூறியவுடன், நான் படப்பிடிப்பு தளத்தை விட்டு நடக்கத் தொடங்கினேன். வெளியே வந்தவுடன் "மீனா மீனா' என்று அழைப்பது கேட்டது. யாரோ யாரையோ, அழைக்கிறார்கள் என்று நான் பேசாமல் நடக்கத் தொடங்கினேன். திரும்பவும் "மீனா, மீனலோசனி'  என்று கூப்பிட்டவுடன், நான் நின்றேன். காரணம், அழைக்கும் குரல் எனக்கு மிக அருகில் கேட்டது.  யார் அழைக்கிறார்கள் என்று திரும்பிப் பார்த்தேன்.

ஒருவர் என்னைப் பார்த்து கூப்பிட்டுக் கொண்டு இருந்தார். நான் அவரைப் பார்த்து ""என் பெயர் மீனா இல்லை'', என்று சொன்னவுடன், "காதலிக்க நேரமில்லை' படத்தில் உங்கள் பெயர் மீனா தானே? அதற்குள் நீங்கள் மறந்து விட்டீர்களே. எவ்வளவு நல்ல கதாபாத்திரம்  அந்த கதாபாத்திரத்தின் பெயர் மீனா தான். அதனால் தான் நான் மீனா என்று கூப்பிட்டேன்'' என்று கூறினார். அவருக்குப் பதிலாக, ""நான் பல வருடங்களுக்கு முன் அந்தப் படத்தில் நடித்தேன். அப்புறம் பல திரைப்படங்களில் நடித்து விட்டேன். நீங்கள் அந்தப் படத்தை நினைவில் வைத்து கொண்டு இருப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை. அப்படி நினைவில் கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது'', என்று சொன்னேன்.

அவரும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் தான் என் தோழி சொல்லிய அமெரிக்க வாழ் இந்திய மருத்துவரான டாக்டர் பால் . அவர்  100 முறைக்கு மேல் "காதலிக்க நேரமில்லை' படத்தைப் பார்த்திருக்கிறார்.  அந்த அளவிற்கு அந்தப் படத்தின் மீது அவருக்கு  ஈடுபாடு. 

"காதலிக்க நேரமில்லை' 1964 -ஆம் ஆண்டு வெளியான படம். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்தது இத்திரைப்படம் "பிரேமின்ச்சி சூடு' (1965) என்ற பெயரில் தெலுங்கிலும், "ப்யார் கியே ஜா' என்ற பெயரில் ஹிந்தியிலும் திரும்ப எடுக்கப்பட்டு வெளிவந்தது. இத்திரைப்படம் கன்னட மொழியில் "பிரீதி மாடு தமாஷே நோடு' (1979) மற்றும் மராத்தி மொழியில் "தூம் தடகா'  என்ற பெயரில் (1985) வெளிவந்துள்ளது.

இந்தப் படத்தின் வெளிபுறப் படப்பிடிப்பில் நான் நடித்த முதல் காட்சி என்ன தெரியுமா? எனக்கு நாகேஷ் நடிப்பு சொல்லி கொடுக்கும் காட்சி. அதில் உள்ள வசனங்களை எப்படி சொல்ல வேண்டும் என்று கோபு சார் முன்பே சொல்லிக் கொடுத்திருந்தார். ""அத்தான், உங்களைப் பார்த்தவுடன், இந்த உலகத்தையே மறக்கிறேன், என்று சொல்லியபடி அவரைப் பார்க்கவேண்டும். அப்புறம் வெட்கப்படவேண்டும்.'' 

இந்தக் காட்சியை எடுக்கும் போது எனக்குச் சிரிப்பு வந்து விட்டது.

எனக்கு மட்டும் இல்லை, காமிராவிற்குப் பின்னால் இருக்கும் இயக்குநர் ஸ்ரீதர், கோபு, உதவி இயக்குநர்கள் என்று எல்லோரும் சிரிக்கிறார்கள். சப்தமாக சிரிக்கவில்லை. நான் அவர்களைப் பார்க்கும் போது எனக்குத் தெரிகிறது அவர்கள் சிரிக்கிறார்கள் என்று. அன்று எங்கள் யூனிட்டில் சிரிக்காதவர் ஒருவர் இருந்தார் என்றால் அவர் தான் நாகேஷ். அவர் வசனத்தைச் சொல்லும் முறை, அதன் டைமிங், எங்கள் எல்லோருக்கும் சிரிப்பை வரவழைத்தது. ஆனால் நாகேஷ் மட்டும் நடித்துக் கொண்டிருந்தார்.

இயக்குநர் ஸ்ரீதர் என்னிடம் வந்து, ""நீ சிரிக்கக் கூடாது. நாகேஷ் கண்டிப்பாகப் பேசுவாரு. ஆனால் நகைச்சுவை அந்த வசனங்களில் இருந்து கொண்டே இருக்கும். எப்படி இருந்தாலும், நீ சிரிக்கக் கூடாது'' என்று சொல்லிவிட்டுக் காமிரா பின்னால் போய்விட்டார். ஆனால் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரிப்பை அடக்க, முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு சமாளிக்க முயற்சி செய்தேன். இன்றும் அந்தக் காட்சியைக் கவனித்தால் நான் சிரிப்பது உங்களுக்குத் தெரியும். பல்வேறு ரசிகர்கள் என்னிடம் வந்து, ""நீங்கள் எப்படி சிரிக்கலாம். நாங்கள் தானே சிரிக்கணும்'' என்று என்னிடம் நேரடியாகவே கேட்டார்கள். உண்மை என்று எனக்குத் தெரிகிறது, ஆனால் எனக்குச் சிரிப்பை அன்று அடக்க முடியவில்லையே என்ன செய்வது? இதே பதிலைத்தான் அவர்களுக்கும் சொன்னேன்.

இங்கு ஒரு ரகசியத்தை நான் உங்களுக்குச் சொல்லப்போகிறேன். இதற்கு முன்பே ஒரு படத்தை இயக்குநர் ஸ்ரீதர் எடுத்தார். ஆனால் பாதி எடுத்த நிலையில் அந்தப் படம் சரியாக வரவில்லை என்று தோன்றியதோ என்னவோ, அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமோ, தான் எடுத்த படத்தை இயக்குநர் ஸ்ரீதர் தொடராமல் நிறுத்தினார். ஏன் நிறுத்தினார் என்ற காரணம் இன்று வரை யாருக்கும் தெரியாது. அந்தப் படத்தின் பெயர் என்ன தெரியுமா? 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT