தினமணி கொண்டாட்டம்

பெரும் பயணத்தின் அத்தாட்சி!

DIN


"பிறப்பால் உயர்வு தாழ்வு கருதுதல் தவறு' என்பார்கள். ஆனால், ஒவ்வொரு முறையும் இவர்களைப் பார்க்கும்போதெல்லாம் நம்மையும் அறியாமல் ஒதுங்கிச் செல்கிறோம். நம் வாழ்க்கையைப் போன்று அவர்களின் வாழ்க்கைப் பயணம்,

நாற்புற சாலையைப் போல இருப்பதில்லை. இந்தச் சமூகம் இவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் குண்டும் குழியுமான, இருட்டுச் சாலைகள். ஆனாலும், அந்த இருளையும் கிழித்துக்கொண்டு வெளிச்சத்துக்கு வருகிறார்கள். இன்று சமூகத்தின் தவிர்க்கமுடியாத ஆளுமைகளாகத் தங்களை நிலைநிறுத்தி வருகிறார்கள். இவர்கள் தடம் பதியாத இடமே இல்லை. அவர்கள்தான் திருநங்கைகள் எனச் சொல்லப்படும் ஆளுமைகள். தங்களது வெற்றியின் மூலம், சமூகத்தின் பார்வைக்கு விடை சொல்லியதோடு, பலரின் நம்பிக்கை வாழ்வுக்கான விதையை விதைப்பவர்கள். அவர்களுக்கான முழு முதல் சினிமா இது. கைக் கொடுத்து தூக்கி விடுங்க... பளீச்செனச் சிரிக்கிறார் இயக்குநர் விஜயபாஸ்கர். விளம்பர படத்துறையில் இயங்கி வந்தவர். முதல் முறையாக "ஃபில்டர் கோல்டு' படத்தின் மூலம் கோடம்பாக்கம் வருகிறார்.

திருநங்கைகளின் உலகம் ரொம்பவே விசித்திரமானது... தெரியாத பக்கங்கள் நிறைய உண்டு....

அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த படம். காரணம், நூற்றாண்டு கண்ட இந்தியத் திரைப்பட வரலாற்றில், அதிலும் தமிழ்த் திரைப்படங்களில் திருநங்கையருக்கான பங்கு மிகச் சொற்பமே. பெரும்பாலும் நகைச்சுவை அல்லது ஆபாசம் என்ற அளவிலேயே திருநங்கையரின் பாத்திரப் படைப்பு இருந்தது. இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது அசலான திருநங்கையர் வாழ்க்கை. இதுதான் திருநங்கைகளின் உலகம் என்று சொல்லாமல், அவர்களின் கொண்டாட்டம், வருத்தம், வறுமை, ஈகோ என எல்லாவற்றையும் கமர்ஷியல்படுத்தியிருப்பதுதான் இங்கே சிறப்பு. இது அவர்களின்அசலான வாழ்க்கை.

அவர்களைக் குறித்த கற்பிதங்கள், அவர்களது ஏக்கம், காதல், உறவு நிலை என அனைத்தையும் பேசக்கூடிய கதை. இதை விட இன்னும் ஒரு படி போய், அவர்களின் உலகத்தில் உள்ள ஆக்ஷன் எபிசோட்டை படம் பிடித்திருக்கிறேன். இது ஆவணப்படம் அல்ல. முழுக்க முழுக்கக் கமர்ஷியல் சினிமா. திரைக்கதைக்காக திருநங்கைகளோடு வருடக்கணக்கில் பயணப்பட்டேன். ஒருவன் எப்படி திருநங்கை ஆகிறான். அவன் மன நிலை என்ன என்பது வரை ஆராய்ந்து, பயணமாகி திரைக்கதை எழுதினேன். நீங்கள் இதுவரை திருநங்கைகளைப் பற்றி அறியாத பல விஷயங்கள் இங்கே காணக் கிடைக்கும்.

எப்படியிருந்தது அவர்களுடன் பழகிய நாள்கள்...

பகல் - இரவு, வெயில் - மழை, ஆண் - பெண் மாதிரி தனிமை - தாய்மை இரண்டும்தான் மனதின் இரு பக்கங்கள் எனத் தோன்றுகிறது. ஒரு விதத்தில் பார்க்கப் போனால் எல்லோரும் தனிமையின் பிள்ளைகள்தான். பசி, துயரம், கூச்சம், காதல், காமம், சிநேகம், பிரிவு... துரத்தத் துரத்தத் தனிமை தாய்மையாகப் பூப்படைகிறது. அந்தத் தாய்மைதான் திருநங்கை எனும் பரிணாமம் என்பேன். அதை எனக்கு கற்று தந்தது ஏராளமான திருநங்கை அக்காக்கள். பசியையும் காமத்தையும் உணரும் தருணத்தைப் போல இந்த மனிதர்களை உணர்ந்து கொண்டே இருக்கிறேன். "மானுட சமுத்திரம் நானென்று கூவு' என்ற வார்த்தைகளைத்தான் வெவ்வேறு உதடுகளில் இருந்து வாங்கிக்கொண்டே இருக்கிறேன். புதிய இலக்கியத்தை, சினிமாவை, அரசியலை எளிய மனிதர்கள்தான் தருவார்கள் என்பார்கள். இந்த சினிமாவை அவர்கள்தான் தந்தார்கள். அந்த உலகத்தில் இருந்து பார்த்தால், இந்த சமூகம் எவ்வளவு வேடிக்கையானது என்பது புரியும். இதில் நானும் ஒரு திருநங்கையாக நடிப்பதற்கு அதுதான் காரணம்.

இருந்தாலும், திருநங்கைகளின் செயல்களை எதிர் விமர்சனம் செய்துதான் நம் சினிமா பழக்கப்பட்டிருக்கிறது....

ரத்தம் வழிய வழிய.. நான்கு பேர் அடித்துக் கொள்ளும் போது ஒதுங்கி ஒளியும் போலீஸ்காரர்கள் எப்படி உருவாகிறார்கள். சாலைகளிலும் கடைகளிலும் அனுதினம் பார்க்க நேரிடும் போலீஸ்காரர்களைக் கேவலமாகத் திட்டும் நமக்கு, பெரும் அரசியல் பேரங்களிலும் கலவரங்களிலும் கொலைகளிலும் பங்கு போட்டு நடத்தும் காவல் அதிகாரிகளைத் தெரிவதே இல்லை. அது போல்தான் இது. ஒரு சில திருநங்கைகளைக் கடந்து போகும் போதுதான் இப்படி நாம் பேசிக் கொள்கிறோம். அதைத்தாண்டிய சாதனையாளர்கள் இங்கே இருந்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு குற்றம்தான் இந்த கதையின் பிரதானம். குற்றத்தின் உருவாக்கம் தொடங்கி, அதன் சம்பவங்கள் வரை எல்லாமே இதில் இருக்கும். ஆக்ஷன் கதைகள் 80 சதவீதம் வெற்றி அடைந்திருக்கிறது. . அதை ரிப்பீட் செய்ததில் சில படங்கள் தோற்றிருக்கலாம். திரைக்கதை எழுதும் போதே, சேகரித்த கதைகளே எக்கச்சக்கம் இருக்கும். நானே ஆக்ஷன் படங்களைப் பார்த்துப் புதிதாகப் பத்துக் கதை இயக்க முடியும். ஒரு ஆளை நாம் சந்திக்க மட்டும்தான் செய்வோம். சினிமாதான் அந்த ஆளை ஊடுருவிப் பார்க்கும். கண்காணிக்கும். விட்டுட்டு வேடிக்கை பார்க்கும். விட்டுத்தான் பிடிக்கும். நீங்கள் திருநங்கைகளில் நல்லவரையும், கெட்டவரையும் பார்த்திருக்கலாம். இது அப்படி இரண்டு பக்கமும் இருக்கிறது.

நடனம், பாடல் வரிகள் என அனைத்திலும் தனித்துவம் வேண்டுமே...

ஒளிப்பதிவாளர் ஏகாம்பரத்தின் உதவியாளர் பரணிகுமார் இந்தப் படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை ஏற்றுள்ளார். ஒரு காட்சிக்காக 4 ஆயிரம் திருநங்கைகளைக் கொண்டு வந்தோம். இந்தியா முழுமைக்கும் தொடர்பு கொண்டு அவர்களையெல்லாம் ஒன்று சேர்த்து பெரும் திட்டமிடலோடு அந்தக் காட்சியைப் படமாக்கினோம். ஒரு திருநங்கைக்கு அறுவை சிகிச்சை முடிந்ததும் பால் நிகழ்ச்சி என்ற வைபவம் உண்டு. அதை நிஜமாகவே படமாக்க எண்ணினோம். தொடக்கம் முதல் இறுதி வரை அந்த நிகழ்ச்சி நிஜத்தில் எப்படி நடக்குமோ, அப்படியே காட்சியாகக் கொண்டு வந்திருக்கிறோம். புதுச்சேரியில் பிரத்யேக அரங்குகளுடன் படமாக்கி வந்தோம். பாடல்களும் தனித்துவமாக வந்துள்ளன. சு.பா. முத்துக்குமார் பாடல் வரிகளுக்கு உமர் எழிலன் உயிர் தந்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை கிங் டேவிட் கவனித்துள்ளார். திருநங்கைகளின் நடனம் என்பது தனித்துவமானது. அதை கொண்டு வரக் கூடிய ஒரே ஆள் நம்ம சிவசங்கர் மாஸ்டர்தான். அவர் முழுப் பொறுப்பேற்றுப் படத்தை வேறு இடத்துக்குக் கொண்டு சென்றுள்ளார். பெரும் பயணத்தின் அத்தாட்சியாக இது இருக்கும். லட்சக்கணக்கான மக்களைச் சென்று சேரக் கூடிய சினிமாவுக்கான பொறுப்பை உணர்ந்து உழைத்திருக்கிறேன். எல்லாம் ரசிகர்களின் கையில்தான் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT