தினமணி கொண்டாட்டம்

வாழ்வாங்கு வாழ்ந்த விஸ்வநாதன் செட்டியார்!

3rd Jan 2021 06:00 AM | -நல்வி குப்புசாமி செட்டியார்

ADVERTISEMENT

 

நூறு வருடங்களுக்கு மேலாக ஒரு வியாபார ஸ்தாபனம் நடந்து வருகிறது என்றால் அதன் பலம் சரக்குகளின் தரமும், வாடிக்கையாளரின் நல்லுறவுமே. அதிலும் மொத்த விற்பனைக்கடை 115 வருடத்தைத் தாண்டி வெற்றி நடைப் போட்டுவருகிறது என்றால் அதன் ஸ்தாபகர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த நிறுவனம்தான் சேலத்தில் உள்ள "ராமவிலாஸ்' என்ற மொத்த ஜவுளி வியாபாரக் கடை . அதன் ஸ்தாபகர்கள் எஸ்.என். ராமசாமி செட்டியார் மற்றும் அவரது இளைய சகோதரர்எஸ்.என். சதாசிவம் செட்டியார். சதாசிவம் செட்டியாரின் புதல்வர் ஸ்ரீ விஸ்வநாதன் செட்டியார். நோய் நொடியில்லாமல் வாழ்ந்து வந்தார். தன் 97-ஆவது வயதில், 21.12.2020இல் காலமானார். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு கூட நன்றாகத்தான் இருந்தார். பேரனிடம் பேசிவிட்டுதான் தூங்கச் சென்றிருக்கிறார். தூக்கத்திலேயே உயிர்பிரிந்தது என்பதுதான் விசேஷம். அப்படி ஒரு அனாயாச மரணம்.  அது ரொம்ப ரொம்ப நல்லவர்களுக்கே வாய்க்கும். வாழ்விலும் மரணத்திலும் ஒரு பெரிய மனிதர் என்பதை நிரூபித்தவர் விஸ்வநாதன் செட்டியார்.

அவரது தகப்பனார் எஸ்.என். சதாசிவம் செட்டியார் எனக்கு முதன் முதலாக பழக்கம் ஆனது 1955-இல் ஆவடி காங்கிரஸ் மாநாட்டின் போது. அப்போது எனக்கு வயது 15. அந்த மாநாட்டிற்கு சென்று வந்தது நன்றாக நினைவிருக்கிறது. அவரது ஒரே மகன்தான் எஸ். எஸ். விஸ்வநாதன் செட்டியார். அவர் என்னைவிட 17 வயது பெரியவர்.

அவரைப் பொருத்தவரை எனக்கு பிடித்த விஷயம் ஓய்வு என்பதையே அறியாதவர். கடைசிநாள் வரை தன் கடை வேலையைப் பார்த்து வந்திருக்கிறார். தன் கடையின் அன்றாட வேலைகளை தகப்பனாரைப் போலவே அன்றன்றே முடித்துவிடுவார். இப்படித் தன் வாழ்வில் தொழிலின் ஒழுக்கத்தை, குடும்ப பெரியவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டவர் விஸ்வநாதன் செட்டியார். இவர்களது ராமவிலாஸ் நிறுவனத்தில் சரக்குகளை விற்பவர்கள் நான்கு மணி நேரத்தில் தொகையைப் பெற்றுக் கொண்டு செல்லலாம். அந்த அளவிற்கு விரைவாகச் செயல்பட்டவர் எஸ்.என். சதாசிவம் செட்டியார்.

ADVERTISEMENT

அவரிடம் இருந்து சரக்குகளை வாங்கிச் செல்பவர்கள் தேவையான சரக்குகளை எப்போதும் பெற்றுச் செல்லலாம் என்கிற அளவிற்கு தன் மொத்த கொள்முதல் கடையில் தரமான சரக்குகளை வைத்திருப்பார். அவரது குடும்பத்திற்கு ஒரு சில்லறை வியாபார கடையும் இருந்தது. அதையும் அவ்வப்போது பார்த்துக்கொள்வது வழக்கம். இப்படி உழைப்பது எல்லோருக்கும் சாத்தியமில்லை. 

வியாபாரத்தில் எல்லாமே நேர்கோடு போட்டது போல் நடந்து கொள்வார். கணக்கு வழக்குகளைக் கச்சிதமாக வைத்திருப்பார். தொழில் சம்பந்தமான எல்லா விஷயங்களும் அவருக்கு மனப்பாடம். இன்ன தேதியில் இன்ன சரக்கை இன்னாரிடம் இருந்து இன்ன விலைக்கு வாங்கினேன் என்பதை துல்லியமாகச் சொல்வார். 

சரக்குகளுக்கு ஆர்டர் கொடுத்தால் அந்த ஆர்டர் படிவத்தை ஒரு முறை பார்க்கும் பொழுதே அவரது கண்கள் கேமிரா பதிவு போல் அவரது மூளைக்குள் செலுத்திவிடும். இன்னொரு முறை அந்த காகிகத்தை பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. கம்ப்யூட்டர் வராத காலத்திலேயே அவரது மூளை ஒரு கம்ப்யூட்டராகவே செயல்பட்டது.

சதாசிவம் செட்டியாரை நான் என் தகப்பனார் போலவே பாவித்திருக்கிறேன். வெறும் பாவனை மட்டுமல்ல, அவர் அப்படித்தான் என்னிடம் நடந்துகொண்டார். என் தந்தை நல்லி நாராயணசாமி செட்டியார் 1953-இல் திடீர் என்று காலமான போது எஸ்.என். சதாசிவம் செட்டியார் சென்னைக்கு வந்து எங்கள் குடும்பத்தின் துயரத்தில் பங்குகொண்டு இரண்டு நாட்கள் எங்களுடனேயே தங்கியிருந்தார்.

ஒரே ஆண்வாரிசான நான் 1956-இல் கடையின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்த போது, என் சித்தப்பா ரங்கசாமி செட்டியாரை அணுகி, பையன் குப்புசாமி 18 வயதை நிறைவு செய்யும்வரை அவனுடன் இருந்து தொழில் கற்றுக்கொடுத்து, பிறகு கடையை  ஒப்படைக்கவும் என்று உத்தரவு போடுவது போல் சொல்லிவிட்டுச் சென்றார். அதன்படியே என் சித்தப்பாவும் தொழிலில் எனக்கு பயிற்சி கொடுத்தார். பொதுவாக குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் தான் இப்படிச் சொல்லுவார்கள். அந்த உரிமையை எடுத்துக்கொள்ள சதாசிவம் செட்டியாருக்கு எங்கள் மீது அக்கறை இருந்தது.

சக தொழிலாளர்களையும், தனக்கு சரக்கு தருபவர்களையும் ஒரு குடும்பத்தார் போல ஸ்நேகபாவத்துடன் நடத்தி வந்தார். இவருக்கு சரக்கு தந்துகொண்டிருந்த ஒரு நபர் சில சமயங்களில் கொடுத்ததற்கு மேலாக சரக்குகளை கொடுத்ததாக ஒரு ஊழியரை உட்கையாக வைத்துக்கொண்டு பட்டியல் எழுதி கூடுதல் பணம் பெற்று வந்தார்.  இந்த விஷயம் சில காலம் யாருக்கும் தெரியாமல் இருந்தது. இவரோ இவர் சகோதரரோ இதை கவனிக்க வில்லை. ஒரு கட்டத்தில் இவரது மகன் விஸ்வநாதன் செட்டியாருக்கு சந்தேகம் வந்தது.  சரக்கையும், பட்டியலையும் பார்த்து இந்த முறைகேட்டை கண்டுபிடித்துவிட்டார்.  அதற்கு சதாசிவம் செட்டியார் பெருந்தன்மையுடன் தவறு என் மீதுதான் நான் கவனித்திருக்க வேண்டும், என் தவறுக்கு பாவம் அவரை ஏன் தண்டிக்க வேண்டும்என்று கேட்டார்.  இதை தெரிந்துகொண்டதில் இருந்து அந்த நபர் ஒழுக்கமாக நடந்துகொண்டார்.

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்.

என்ற குறள் நெறியின் படி ஒருவர் வாழ்ந்தார் என்றால் அதற்கு சதாசிவம் செட்டியாரை உதாரணமாகச் சொல்லலாம். 

இவரது மகன் விஸ்வநாதன் ரொம்பவும் அமைதியான சுபாவம், அதிகம் பேசமாட்டார் ஆனால் பேசுவதில் அன்பும், அக்கறையும் தொனிக்கும். அந்த காலத்தில் சென்னைக்கு வரும் போதெல்லாம் உட்ஸ் ரோடில் உள்ள ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோமில் தான் தங்குவார். தன் வசூல் வேலை முடிந்ததும் சேலத்திற்கு திரும்பிவிடுவார். எவ்வளவு சம்பாதித்தாலும் எளிமையான வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். முதன் முதலில் நான் நாடகங்களுக்குச் சென்றது அவருடன்தான். காலையில் சென்னைக்கு வரும் அவர் மாலை 5 மணிக்குள் தன் வசூல் வேலையை முடித்துக்கொண்டு ஆறு மணிக்கு முன்னதாக எங்கள் கடைக்கு வந்து என்னை சந்திப்பார்.

அவருக்கு நாடகங்கள் பார்ப்பதில் ஆர்வம் அதிகமுண்டு. ஒருமுறை மனோகரின் "துரோணர்'  நாடகம் நடக்கிறது பார்க்கலாம் வாருங்கள் என்று அழைத்தார். உடன் சென்றேன், பிறகு சோவின் நாடகம் நடக்கிறது வாருங்கள் என்பார். சென்று வந்திருக்கிறேன். என் முதல் வெளிநாட்டு பயணத்தின் போது உடன் வந்தார். அந்த நிகழ்வையும் நான் மறக்கமாட்டேன். எங்கள் குடும்ப விசேஷங்களில் அவர் கலந்துகொள்வதும், அவர் குடும்ப விசேஷங்களில் நான் கலந்துகொள்வதும் வாடிக்கை.

விஸ்வநாதன் செட்டியார் தன் 17-ஆவது வயதில் கடையில் தகப்பனாருக்கு உதவியாக சேர்ந்து கொண்டார். தொடர்ந்து 80 வருடங்கள் அந்த கடையை நிர்வகித்து வந்திருக்கிறார். அவரது கணக்கு வழக்கு முறைகள் மிகவும் சீராக இருக்கும்.  அவரிடம் இருந்து நான் சில வியாபார வழிமுறைகளைக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

ஸ்ரீ விஸ்வநாதன் செட்டியாரின் மகன் பத்ரி ஆடிட்டராக தொழில் செய்து வந்தார். தகப்பனார் தன் தொழிலுக்காக ஏதாவது பணம் தேவைப்பட்டால் மகனிடம் சொல்வார். மகன் உடனே அந்த தொகையைப்  பெற்றுத் தந்துவிடுவார். தந்தையை விட மகனுக்கு நட்பு வட்டாரம் பெரியது. தந்தைக்கும் மகனுக்கும் குடும்ப முறையிலும், தொழில் முறையிலும் நல்ல இணக்கம் இருந்து வந்தது. திடீர் என்று மகன் காலமானார். புத்திர சோகம் வாட்டியபோதும் அதை ஒருவித மனோ பக்குவத்துடன் எடுத்துக் கொண்டார். சோகம் இல்லாமல் இருக்குமா? ஆனால் அதை அவர் வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒரு ரிஷி போல நடந்துகொண்டார்.

பிறகு மகன் வயிற்று பேரனான கார்த்திக்கை எம்.பி.ஏ படிக்க வைத்து தன் தொழிலுக்கு அழைத்துக்கொண்டார். தொழில் நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தார். ஆரம்ப காலத்தில் எங்கள் கடைக்கு வரும்போது பேரனையும் அழைத்து வருவார். பிறகு பேரனை தனியாக வந்துசெல்ல அனுமதித்தார். அதன்மூலம் அனுபவம் பெறச்செய்தார்.

வாழ்ந்தால் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்கு ஒரு வர்த்தகத் துறை உதாரணம் சேலம் ஸ்ரீ விஸ்வநாதன் செட்டியார். அவரது வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டால் அது இளைஞர்களுக்கு வழிகாட்டுவதாக அமையும். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT