தினமணி கொண்டாட்டம்

தலை சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

3rd Jan 2021 06:00 AM | -பா. சுஜித்குமார்

ADVERTISEMENT

 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)யின் 10 ஆண்டுகள் நட்சத்திர அணிகளில்  எம்.எஸ். தோனி, விராட் கோலி , ரோஹித் சர்மா, ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும்  தமிழகத்தின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் ஆகியோர் இடம் பிடித்த சிறப்பைப் பெற்றுள்ளனர். மேலும் மகளிர் பிரிவில் மிதாலி ராஜ், ஜுலான் கோஸ்வாமி, ஹர்மன்ப்ரீத் கெளர், பூனம் யாதவ் உள்ளிட்டோர் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கால்பந்து, ஹாக்கி, வாலிபால், கூடைப்பந்து, டென்னிஸ் உள்பட பல்வேறு விளையாட்டுகள் இந்தியாவில் கோலோச்சினாலும், கிரிக்கெட் ஆட்டமே பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உலகிலேயே பணபலம் மிக்க விளையாட்டு அமைப்புகளில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது.

இந்திய ஆடவர் அணி இருமுறை ஒரு நாள் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தையும், தலா ஒரு முறை டி20, சாம்பியன்ஸ் கோப்பை பட்டங்களையும் கைப்பற்றியுள்ளனர். ஆடவர் அணிக்கு இணையாக மகளிர் அணியும் கிரிக்கெட் உலகில் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. குறிப்பாக 2020 மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டம் வரை தகுதி பெற்றது.

ADVERTISEMENT

கிரிக்கெட் ஆட்டத்தை சர்வதேச அளவில் துபையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐசிசி நிர்வகித்து வருகிறது. வீரர்கள், வீராங்கனைகளின் சிறப்பான ஆட்டம், செயல்பாடுகளை வைத்து, ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, டி20, ஒருநாள், மற்றும் டெஸ்ட்  உள்ளிட்டவற்றின் 10 ஆண்டுகள் அணிகளையும், விருதுகளையும் அறிவித்து வருகிறது ஐசிசி.

வாக்கெடுப்பில் 15 லட்சம் ரசிகர்கள்: கடந்த 10 ஆண்டுகளில் உலகின் சிறந்த வீரர்களைத் தேர்வு செய்து கெளரவிக்கிறது. ரசிகர்களும் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்று விருதுகளுக்கான வீரர்களைத் தேர்வு செய்தனர். குறிப்பாக உலகம் முழுவதும் 15 லட்சம் ரசிகர்கள் பங்கேற்று 53 லட்சம் வாக்குகளை பதிவு செய்தனர். சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுபவருக்கு சர் கேரிஃபீல்ட் சோபர்ஸ் விருதும், சிறந்த வீராங்கனைக்கு ரேச்சல் ஹென்ஹொ பிளின்ட் விருதும் வழங்கப்படுகிறது. 2011-ஆம் ஆண்டில் இருந்து இந்நடைமுறை தொடர்ந்து வருகிறது.

3 அணிகளிலும் இடம் பெற்ற ஒரே வீரர் விராட் கோலி: ஐசிசி டி20, ஒருநாள், டெஸ்ட் என 3 வகையான கனவு அணிகளிலும் இடம் பெற்ற ஒரே வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் விராட் கோலி. கடந்த 10 ஆண்டுகளாக அதிக ரன்களைக் குவித்த வீரர், இந்திய அணிக்கு குறிப்பிடத்தக்க வெற்றிகளை தேடித் தந்தவர் என்ற பெருமைக்கு உரியவர் கோலி.

தோனி, கோலி கேப்டன்களாக தேர்வு: 10 ஆண்டுகள் ஐசிசி டி20, ஒருநாள் அணிகளுக்கு இந்திய முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான எம்.எஸ். தோனி கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே வேளையில் டெஸ்ட் அணிக்கு தற்போதைய கேப்டன் விராட் கோலி கேப்டனாகத் தேர்வு பெற்றுள்ளார்.

டி20, ஒரு நாள் அணிகள்: ஆடவர் டி20 அணியில் தோனி, ரோஹித் சர்மா, கோலி, பும்ரா போன்ற இந்திய வீரர்களும், ஒரு நாள் அணியில் தோனி, கோலி, ரோஹித் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

டெஸ்ட் அணியில் அஸ்வின்:  ஐசிசி 10 ஆண்டுகள் டெஸ்ட் அணியில் விராட் கோலி, தமிழக வீரர் அஸ்வின் ஆகியோர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர இந்திய வீரர்கள் கோலி, அஸ்வின் ஆகியோர் 10 ஆண்டுகளில் சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலிலும் தேர்வாகினர்.

தோனி, கோலிக்கு சிறப்பு விருதுகள்: கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள் ஆட்டங்களில் சிறந்த வீரர் விருதுக்கு கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் 10 ஆண்டுகளில் சிறந்த வீரருக்கான சர் கேரி பீல்ட் சோபர்ஸ் விருதையும் அவர் தட்டிச் சென்றுள்ளார்,.  அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களிலும் கோலி 20,396 ரன்களை விளாசியுள்ளார். மேலும் 2017, 2018 ஆண்டுகளில் ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை பெற்றார்.

தோனியின் மனிதநேய செயல்: முன்னாள் கேப்டன் தோனிக்கு, 10 ஆண்டுகளில் சிறந்த ஊக்கம் தரும் வீரர் என்ற விருது கிடைத்துள்ளது. கடந்த 2011-இல் இங்கிலாந்து-இந்தியா இடையே டிரென்ட்பிரிட்ஜில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் இயான் பெல் சர்ச்சைக்குரிய வகையில் ரன் அவுட்டாகி சென்றார். எனினும் அவரை மீண்டும் திரும்ப ஆட வருமாறு தோனி அழைத்து ஆட அனுமதித்தார். அவரது இந்த சிறப்பான செயலுக்காக 10 ஆண்டுகளில் சிறந்த ஊக்கமிகுந்த வீரர் என்ற விருது தோனிக்கு கிடைத்துள்ளது.

தமிழகத்தின் சென்னை நகரில் கடந்த 1986-இல் பிறந்த அஸ்வின், வலது கை சுழற்பந்து வீச்சாளர் ஆவார். துரிதமாக 200 மற்றும் 300-ஆவது டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமை அவர் வசம் உள்ளது.

70 டெஸ்ட் ஆட்டங்களில் மொத்தம் 362 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 13/140 ஆகும். பேட்டிங்கில் அதிகபட்சமாக 124 ரன்களுடன், மொத்தம் 2385 ரன்களை விளாசியுள்ளார்.

111 ஒரு நாள் ஆட்டங்களில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய அவரது சிறந்த பந்துவீச்சு 4/25 ஆகும். பேட்டிங்கில் அதிகபட்சமாக 65 ரன்களை விளாசியுள்ளார். 46 டி20 ஆட்டங்களில் மொத்தம் 52 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவரது சிறந்த பந்துவீச்சு 4/8 ஆகும். ஐபிஎல் தொடரில் மொத்தம் 125 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் 9-ஆவது இடத்திலும், ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் 6-ஆவது இடத்திலும் உள்ளார் அஸ்வின். 

கோலி நெகிழ்ச்சி:

12 ஆண்டுகளுக்கு முன்பு 2008-இல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகம் ஆன கோலி, 2011-இல் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்றார். ஆஸி. அணிக்கு எதிரான தனது 8-ஆவது டெஸ்டில் முதல் சதத்தை 116 ரன்கள் விளாசினார். தனது கிரிக்கெட் வரலாற்றில் 2012, 2017, 2018 என மூன்று முறை ஐசிசி சிறந்த ஒருநாள் வீரர் விருதையும், 2018-இல் சிறந்த டெஸ்ட் வீரர் விருதையும், 2017, 2018-இல் சர் கேரி பீல்ட் சோபர்ஸ் விருதையும் வென்றார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்: எனது குடும்பத்தினர், பயிற்சியாளர், அணி வீரர்கள், பிசிசிஐக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அணியின் குறிக்கோளுடன் தனிநபர் திறமையும் ஒருங்கிணைந்தால், அது சிறப்பானது. எவ்வளவு ரன்களை குவித்தாலும், அணியை வெல்லச் செய்வதே எனது விருப்பம்.  நாட்டுக்காக ஆட வாய்ப்பு தந்தது பெரிய கெளரவமாகும். இவ்விருதை வழங்கிய ஐசிசி மற்றும் வாக்களித்த அனைவருக்கும் நன்றி என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் கோலி.

Tags : தினமணி கொண்டாட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT