தினமணி கொண்டாட்டம்

பத்தரை அடி உயர சிலை..!

3rd Jan 2021 06:00 AM | -பனுஜா

ADVERTISEMENT

 

மலையாள நடிகர் மோகன்லாலுக்காக திருவனந்தபுரத்தில் பத்தரை அடி உயரமுள்ள மரத்தினாலான "விசுவரூபம்' சிலை ஒன்று கடந்த இரண்டரை ஆண்டுகளாக உருவாகி வருகிறது.

2021 பிப்ரவரி மாதத்தில் சென்னையில் உள்ள மோகன்லாலின் இல்லத்தில் இந்தப் பிரம்மாண்ட சிலை ஒப்படைக்கப்படும்.

"விசுவரூபம்' சிற்பத்தின் உயரம் பத்தரை அடி என்றாலும், சிலையின் பீடம் அமையும் போது சிலையின் உயரம் இன்னும் ஓரடி அதிகமாகி பதினொன்றரை அடி உயரத்தைத் தொடும். சிலையின் அகலம், சுற்றளவு, எடை முதலானவை சிலை வேலைகள் நிறைவு பெறும்போது கணக்கிடப்படும்' என்கிறார் தலைமை சிற்பி நாகப்பன்.

ADVERTISEMENT

சிற்பி நாகப்பனைத் தொடர்பு கொண்டபோது கூடுதல் தகவல்களைத் தந்தார்.
"பகவத் கீதையின் 11-ஆவது அத்தியாயத்தின்படி "விசுவரூபம்' என்பது "நல்லது கெட்டது' அனைத்தும் சேர்ந்த கலவையாகும். "தேவரும் நானே.. அரக்கர்களும் நானே...புல்லும் நானே.. பூதமும் நானே.. ... ஆக பிரபஞ்சமே நான்தான்' என்று மகாவிஷ்ணு காட்டியதுதான் "விசுவரூபம்'. மகாபாரத யுத்தத்தில் நெருங்கிய சொந்தங்கள், குருமார்கள் எல்லாம் எதிர் அணியில் போருக்காகத் தயாராகி நிற்க... அவர்களை எதிர்த்துப் போரிட மனம் இல்லாமல் கலங்கி நிற்கும் அர்ஜுனனுக்கு ஆறுதல் சொல்லி தைரியம் கொடுக்கவே விஷ்ணு ஆகிய கிருஷ்ணன் "விசுவரூபம்' எடுத்தார். அந்த காட்சியைத்தான் நான் உருவாக்கியிருக்கிறேன். பொதுவாக மகாவிஷ்ணு கடவுளின் பின்னால் இருக்கும் நாகப்பாம்பின் தலைகள் ஐந்து அல்லது ஏழு ஆக இருக்கும். விஸ்வரூப சிலையில் இருக்கும் 11 கடவுள் முகங்களுக்குப் பொருத்தமாக குடை பிடிக்கும் நல்ல பாம்பிற்கு 11 தலைகளை வைத்தேன்.

விசுவரூபம்.சிலையை ஒன்பது கைவினைக் கலைஞர்களுடன் இரண்டரை ஆண்டுகளாகச் செதுக்கி வருகிறேன். ராவணனின் பத்து தலைகள் வரிசையாக இருப்பது போல இந்தச் சிலையில் முன் பக்கம் பெரிதாக இடது புறத்திலிருந்து வலது பக்கமாக 11 முகங்கள் உண்டு. அந்த முகங்கள் , பிரகஸ்பதி, நரசிம்மம், கணபதி, ஸ்ரீ ராமன், சிவன், விஷ்ணு, கிருஷ்ணன், இந்திரன், அனுமான், கருடன், சுக்ராச்சாரியாரின் உருவங்கள் ஆகும். ஆயுதம் தாங்கிய 22 கரங்களும் சிலையில் அமைந்துள்ளன. "விசுவரூபம்' சிலையில் இன்னொரு சிறப்பு விஷ்ணுவின் கழுத்தில் தொங்கும் கைவினை வேலைப்பாடுள்ள மாலை. இந்த மாலையில் "தசாவதார' ரூபங்களைச் செதுக்கியுள்ளோம்.

சிலையில் சிறிதும் பெரிதுமாக சுமார் 400 உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கீதா உபதேசம், மகாபாரதத்தை எழுத கணபதியை வியாசர் சமீபிப்பது, பாண்டவர்கள் கெüரவர்களுக்கிடையில் நடக்கும் சூதாட்டம், பாஞ்சாலியை துகில் உரிவது போன்ற புராண நிகழ்வுகளைப் பிரதிபலிக்கின்றன. சிலையின் பின்புறம் குருசேத்திர போரில் வெற்றி முழக்கத்தைப் பாஞ்சஜன்யம் சங்கின் மூலமாக முழங்கும் ஸ்ரீ கிருஷ்ணன் உருவமும் சற்று பெரிதாகவே செதுக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், விசுவரூபச் சிலையில் இந்திய புராணங்களைச் சுருக்கமாகச் சித்திரித்துள்ளோம்.

நடிகர் மோகன்லாலுக்கு சில ஆண்டுகள் முன்பு ஆறு அடி உயரமுள்ள இதே விசுவரூபம் சிலையைச் செதுக்கி வழங்கியுள்ளேன். அந்தச் சிலையின் கலைவடிவிலும் கலை நுணுக்கத்திலும் பெரிதும் கவரப்பட்ட மோகன்லால் "யாரிடமும் இல்லாத, பார்ப்பவர்கள் அதிசயிக்கும் விதத்தில் அதிக உயரம் உள்ள விசுவரூப சிலை ஒன்றை மரத்தில் செதுக்கித் தர வேண்டும்' என்று வேண்டுகோள் விடுக்க இந்த பிரம்மாண்டச் சிலை தயாராகியுள்ளது. கடைசி நேர வேலைகள் துரித கதியில் நடந்து வருகின்றன. கரோனா காலம் என்பதால் சிலை வேலைகளை நாங்கள் நினைத்த வேகத்தில் நிறைவேற்ற முடியவில்லை. சிலையின் விலை குறித்து இன்னமும் முடிவாகவில்லை'.

"எனக்குத் தெரிந்து மரத்தில் இவ்வளவு உயரமான சிலை இத்தனை கலை வேலைப்பாடுடன் செதுக்கப்படவில்லை.. அதனால் கின்னஸ் புக் பொறுப்பாளர்களுக்குத் தகவல்களைத் தெரிவித்துள்ளோம். அவர்கள் வந்து ஆய்வு செய்து தங்கள் முடிவைத் தெரிவிப்பார்கள்.

கடந்த 40 ஆண்டுகளாக சிறியதும் பெரியதுமாக சிலைகளை, தந்தம், சந்தனம், தேக்கு, தோதகத்தி தொடங்கி அனைத்து மரத்துண்டுகளில் செதுக்கி வருகிறேன். "விசுவரூபம்' சிலையைச் செய்ய "குமிழ்' மரத்தின் பெரிய துண்டுகளை (ப்ர்ஞ்ள்) இணைத்து செதுக்கியுள்ளோம். குமிழ் மரங்கள் கேரளத்திலும் இந்தியாவின் இதர மாநிலங்களில் கிடைத்தாலும், இந்தோனேஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட குமிழ் மரத்தைப் பயன்படுத்தியுள்ளோம்.

மலையாளத் திரைப்பட நடிகர்களின் சங்கமான "அம்மா'வின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருவனந்தபுரம் வந்த நடிகர் சூர்யாவுக்கு "சயனிக்கும் விநாயகர்' மரச்சிலையை மோகன்லாலும் மம்மூட்டியும் இணைந்து அன்பளிப்பாக வழங்கினார்கள். நான்கு அடி நீளமுள்ள அந்த விநாயகர் சிலையைச் செதுக்கியது நான்தான்.' என்கிறார் அறுபது வயதாகும் நாகப்பன்.
வலைதளத்தில் ஆறரை அடி உயர விசுவரூப மரச் சிலையின் விலை என்னவாக இருக்கும் என்று தேடிப் பார்த்தபோது கிடைத்த தகவல் ; 17 லட்சம் ரூபாய்.

Tags : தினமணி கொண்டாட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT