தினமணி கொண்டாட்டம்

கசக்கும் கணிதமும் இனிக்கும்

3rd Jan 2021 06:00 AM | -பிஸ்மி பரிணாமன்

ADVERTISEMENT

 

தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த வால்பாறைக்கு அருகில் அமைந்துள்ளது "உருளிக்கல்' ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.

நான்கு ஆசிரியர்கள் பணி புரியும் இந்தப் பள்ளியில் சுமார் 85 மாணவ மாணவியர்கள் படித்து வருகிறார்கள். இங்குப் பணி ஆற்றிவரும் கணிதப் பட்டதாரி ஆசிரியரான கா. வசந்தகுமார் கசக்கும் கணிதத்தை இனிக்கும் கரும்பாகச் சொல்லித் தருகிறார்.

ஆடல், பாடல், புது யுக்திகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக் கணிதத்தைப் புரிய வைப்பதால் வசந்தகுமாரின் கல்விச் சேவையைப் பாராட்டி தன்னார்வ அமைப்புகள் மற்றும் அறக்கட்டளைகள் வானமாமலை விருது, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, கல்வி ரத்னா விருது, ஆசிரியர் சிற்பி விருது, ஆளுமை ஆசிரியர் செம்மல் விருது, தமிழறிஞர் அண்ணா விருது, அறிவுச்சுடர் காந்தி விருது, கனவு ஆசிரியர் விருது, அருட்ஜோதி விருது, தமிழ் விஞ்ஞானி விருது, கலாம் அறிவு மாமணி விருது, கலாம் கனவு நாயகன் விருது 2020, சர்தார் வல்லபாய் படேல் தேசிய விருது 2020,ஆசிரியர் மாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை வழங்கி கெüரவித்துள்ளனர்.

ADVERTISEMENT

வசந்தகுமார் தனது கல்விப் பயணத்தை விளக்குகிறார்:

"நான் தொடக்கப்பள்ளி ஆசிரியராகத்தான் எனது கல்விச் சேவையைத் துவங்கினேன். அதனால் பிஞ்சு சிறார்களின் மனநிலை குறித்து நன்கு அறிவேன். பிறகு எனது கல்வித் தகுதியை உயர்த்திக் கொண்டு பட்டதாரி ஆசிரியராக மாறிவிட்டேன். கல்வியால் நான் உயர்ந்துள்ளதை மாணாக்கர்களிடம் உதாரணமாகச் சொல்லி, "படித்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் நிச்சயம் ஏற்படும்' என்று விளக்குவேன்.

பொதுவாக மாணவர்களுக்குக் கணிதம் என்றாலே கசக்கும். பல மாணவர்கள் கணக்கு வகுப்பு என்றாலே வெறுப்பார்கள். கணக்கு ஆசிரியர் அடிப்பார்... திட்டுவார் என்று அச்சப்படுவார்கள். அந்த மனநிலையை மாணவர்களிடத்திலிருந்து அப்புறப்படுத்துவதற்கு அவர்கள் விரும்பும் வகையில் துணைக்கருவிகளைப் பயன்படுத்தி விளையாட்டு முறையில்
"எண்கள் நமது கண்கள்' என்று கணக்குகளைச் சொல்லிக் கொடுப்பேன்.

கணித உண்மைகளை மாணவர்களுக்கு விளக்க துணைக்கருவிகள் தயார் செய்து கணித ஆய்வகம் ஒன்றையும் பள்ளியில் உருவாக்கியிருக்கிறேன். கணித ஞானத்தைப் பாடல்களாக எழுதி திரைப்படப் பாடல்களின் மெட்டுகளில் ஆயத்தப் பாடல்களாக (பாடி மாணவர்கள் மனதில் பதிய வைப்பதும்தான் எனது குறிக்கோள். இந்த முயற்சிகளை நான் பணிபுரியும் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றிப் பிற பள்ளி மாணவர்களும் பார்க்க வேண்டும்.. கேட்க வேண்டும்.. பயன்பெற வேண்டும் .. என்ற எண்ணத்தில் காணொளிகளாக யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளேன். இத்தகைய காணொளிகளை மாணவர்களும், ஆசிரியர்களும் பார்த்து வருகின்றனர்.

வகுப்பில் நடத்தும் பாடங்களைக் காணொளிகளாகத் தயார் செய்து "விரைவுக் குறியீடு'களாக மாற்றி முகநூலிலும் வாட்ஸ் ஆப்பிலும் பதிவேற்றம் செய்கிறேன். தேவையானவர்கள் விரைவுக் குறியீடுகளை ஸ்கேன் செய்து காணொளிகளைப் பார்க்கலாம். ‘சிறப்பான கற்பித்தல்' பணியினைப் பாராட்டி தமிழ்நாடு ஆசிரியர் வலைதளம் எனக்கு சான்றிதழ்களை வழங்கியுள்ளன. பாடம் சொல்லிக் கொடுப்பதும், காணொளியில் விளக்கம் சொல்வதும் தமிழில்தான்.

மத்திய அரசு நடத்திவரும் "திக்ஷô' (Diksha) வலைதளம் எனது தமிழ் மொழியிலிருக்கும் மூன்று காணொளிகளைப் பதிவேற்றம் செய்து சிறப்பித்
துள்ளது.
வருங்கால சந்ததியினருக்கு "மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்' என்ற கருத்தினைப் மாணவர்களிடம் பரப்ப, குடியரசு, சுதந்திர தினங்கள் அன்று மரம் நடுவிழா பள்ளியின் சார்பில் நடத்தி வருகிறேன்.

"ஏழாம் வகுப்பில் சராசரியாக 50 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் எட்டாம் வகுப்பில் தமிழக அரசு நடத்தும் தேசிய திறன் அறியும் தேர்வு எழுதலாம். இந்தத் தேர்வில், SAT, MAT என்ற இரு பிரிவுகளில் தலா 90 மதிப்பெண்களுக்கு (மொத்தம் 180) தேர்வு எழுத வேண்டும். SAT தேர்விற்கு ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்புப் பாடங்களைப் படிக்க வேண்டும். இந்தத் தேர்வு முறை அறிமுகப்படுத்தி 5 ஆண்டுகள் ஆகின்றன. இந்தத் தேர்வில் தமிழகத்திலிருந்து அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.

MAT தேர்விற்கு மனத்திறன் சார்ந்த வினாக்கள் கேட்கப்படும். (Objective Type Questions). நான் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சியளித்தன் விளைவாக எனது பள்ளியில் ஆண்டு ஒன்றுக்கு ஒரு மாணவன் வீதம் 3 மாணவர்கள் தேசிய திறன் அறியும் தேர்வில் (NMMS) வெற்றி பெற்று தமிழக அரசிடமிருந்து ரூ. ஆயிரம் மாதந்தோறும் பெற்று வருகின்றனர். இந்த உதவித் தொகை ஐந்து ஆண்டுகள் அதாவது பிளஸ் டூ வகுப்பு வரை, தேர்வு பெற்ற மாணவருக்குக் கிடைக்கும். பொருளாதார ரீதியாக இந்தத் தொகை ஐந்து ஆண்டு காலத்திற்கு மாணவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் பயன்படும்.

தமிழக அரசு வழங்கி யாரும் "கனவு ஆசிரியர்' விருதினைப் பெற வேண்டும் என்பது எனது லட்சியம். மாணவர்களை வற்புறுத்தி பள்ளிக்கு வரச் செய்யக் கூடாது. மாணவர்கள் விரும்பி பள்ளிக்கு வர வேண்டும். பள்ளியை.. கல்வியை மாணவர்கள் விரும்பச் செய்கிற விதத்தில் ஆசிரியர்கள் பாடம் சொல்லித் தரவேண்டும். அதை நான் மனதார செய்து கொண்டிருக்கிறேன்'' என்கிறார் ஆசிரியர் வசந்தகுமார்.

Tags : தினமணி கொண்டாட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT