தினமணி கொண்டாட்டம்

ரோஜா மலரே! - 70: புகழை பெற்று தந்த பாடல் - குமாரி சச்சு

சலன்


"காதலிக்க நேரமில்லை' படப்பிடிப்பிற்கு ஒரு நாள் தான் இருந்தது. பாட்டியும், அம்மாவும் பல்வேறு வகையான வைத்தியம் செய்து பார்த்தார்கள். வலி குறைந்த பாடில்லை. பின் எப்படி நடனம் ஆடினேன் தெரியுமா?. இந்த நடனத்தை சிறப்பாக ஆடக் காரணமாக இருந்தது என்னுடைய ஆர்வம் தான். சொல்லப்போனால் நடனம் என்றால் எனக்கு உயிர். கால் உடைந்தால் கூட எழுந்து நடனம் ஆடும் அளவுக்கு நடனத்தின் மீது விருப்பம். அதனால் கால் வலி தெரியவில்லை. வலி இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் அந்தப் பாடலுக்கு நடனம் ஆடினேன். எனக்குப் பெரும் பெயரையும், புகழையும் அள்ளித் தந்தது "மலரென்ற முகம் இன்று சிரிக்கட்டும்' பாடல்.

இந்தப் படத்தில் நான் நடித்ததற்கு எம்.ஜி.ஆருக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். அவர் "காத்திருங்கள்' என்று சொன்னதால் தான் இந்தப் படத்தில் நடித்தேன். இந்த முடிவு நான் சினிமாவில் தொடர்ந்து இருப்பதற்கு அடித்தளமாக அமைந்தது. இன்னொரு காரணம் சித்ராலயா கோபு."" நகைச்சுவை நாயகி வேடம் வேண்டாம்'' என்று சொன்ன பிறகும் கூட, என்னை மீண்டும் மீண்டும் அழைத்தது சித்ராலயா நிறுவனம்.

அதில் மிக முக்கியமானவராக இருந்த கோபுவுக்கு, எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. தொலைபேசி மூலம் எங்களைத் தொடர்பு கொண்டது மட்டுமல்லாமல், நேராக எங்கள் வீட்டிற்கே வந்து, பாட்டியையும், என்னையும் சம்மதிக்க வைத்தவர். அவர் இல்லா விட்டால் "காதலிக்க நேரமில்லை' படத்தில் நான் நடித்திருக்கவே மாட்டேன்.

கோபு சார் தான், "நீ கதாநாயகியாக நடித்தால் தான் நடிப்பா? வேறு பல பாத்திரங்களில் நடித்து நல்ல நிலைக்கு வருவாய்', என்று சொன்னவர். நான் இந்த நேரத்தில் கோபு சாரை நினைத்துப் பார்க்க வேண்டும். அவர் மட்டுமல்ல, "காதலிக்க நேரமில்லை' படத்தில் நடித்த போது, நான் நல்லா வருவேன் என்று என் உள் மனது கூறியது. அது தான் இன்று வரை நடந்து வந்திருக்கிறது. இன்று நான் பலதரப்பட்ட வேடங்களை ஏற்று நடிக்கக் காரணம் "காதலிக்க நேரமில்லை' என்ற படம் தான் . இந்தப் படத்தில் நான் நடிக்காமல் இருந்திருந்தால், பல்வேறு வகையான கதாபாத்திரங்களை நடிக்காமல் மிஸ் பண்ணி இருப்பேன்.

"காதலிக்க நேரமில்லை' படத்தில் பாலையா அண்ணனைத் தவிர்த்து, நடித்த ரவிச்சந்திரன், ராஜஸ்ரீ, காஞ்சனா, நாகேஷ் கூட அன்று புகழ்பெறத் துவங்கி இருக்கும் நடிகர், நடிகையர் தான். அதன் கதை இன்று கூடப் புதிதாக தோன்றும். அதனால் ரசிகர்கள் பலர், இந்தப் படத்தின் காட்சிகள், வசனங்களைக் கூட மனப்பாடமாகச் சொல்லுவார்கள். இயக்குநர் ஸ்ரீதரின் பல படங்களில் நடித்துப் புகழ் பெற்று இருக்கிறேன். அந்தப் படத்தில் எல்லாம் எனது பெயர் சச்சு, சரசு, சரஸ்வதி என்று தான் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் தான் எனக்கு வசனத்திலேயே எனது பெயர் வரும்படி காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

இப்படிப் பல்வேறு விஷயங்கள் இந்தப் படத்தில் அழகாக அமைந்தன. இன்று விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறி இருக்கிறது. இன்று வரும் படங்களின் வண்ணம் மிகச் சிறப்பாக உள்ளது. ஆனாலும் - இன்றும் "காதலிக்க நேரமில்லை' படத்தைப் பார்க்கும் போது, ஒவ்வொரு காட்சியும் வண்ணக்களஞ்சியமாகவே காட்சித் தரும்.

அதற்குக் காரணம், ஒளிப்பதிவாளர் ஏ. வின்சென்ட். இந்தப் படத்தில் பாதி ஸ்டுடியோவில் எடுத்தது. மீதி வெளிப்புறப் படப்பிப்பு. முதன் முதலாக "ஆழியார் டாம்' என்று ஒன்றை மக்களுக்குத் தெரியப்படுத்தியதும் இப்படமே பொள்ளாச்சி அருகில், வால்பாறை போகும் வழியில் இருக்கும் இந்த "ஆழியார் டாம்'. ஒரு சுற்றுலாத் தலமாக மாறி உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் "காதலிக்க நேரமில்லை' படம் தான். நாங்கள் படப்பிடிப்பு நடத்திய பிறகு பல படங்களுக்கு இந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்தினார்கள்.

அந்த அளவிற்கு அந்த இடம் மிகவும் பிரபலமாகி விட்டது. இதற்கு எல்லாம் காரணம், ஒரு படம் எல்லோரையும் கவரும் விதத்தில் இருந்தது தான். கவர்ந்தது மட்டும் அல்ல, இன்றும் எங்குத் திரையிட்டாலும் மக்கள் சென்று பார்க்காமல் இருக்கமாட்டார்கள். காரணம் கதை, வசனம், திரைக்கதை அமைப்பு, வண்ணம், பாடல்கள், இசை அனைத்தும் நேர்த்தியாக அமைந்திருக்கும். அதுமட்டுமல்லாமல்; ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, நடிகர், நடிகைகள் தேர்வு. சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், இப்படி எல்லாம் இதில் முழுமையாக அமைந்ததனால், இந்தப் படம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுவிட்டது. அதில் நான் நடித்து இருக்கிறேன் என்று சொல்லும் போது எனக்கு மகிழ்ச்சி ஏற்படாமல் இருக்குமா என்ன?

சமீபத்தில் "ஆழியார் டாம்' அருகே ஒரு படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அங்குப் படப்பிடிப்பில் இருந்த போது ஒரு வயதான மனிதர் என்னிடம் பேசவேண்டும் என்று நினைத்து வந்திருந்தார். ஆனால் அங்கிருந்த காவலாளி, அந்த மனிதரை வரவிடாமல் தடுப்பதை நான் பார்த்தேன். உடனே காவலாளியிடம் அவரை அனுமதிக்கும் படி கூறினேன். அவர் மெதுவாக என்னிடம் வந்து கூறியது என்ன தெரியுமா?

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

டி20 உலகக் கோப்பைக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறாரா? சுனில் நரைன் பதில்!

சிவில் சர்வீஸ் வினாத்தாள்: ஏஐ மூலம் மாநில மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரை!

நெஞ்சம் மறப்பதில்லை..

பள்ளிக்கரணையில் இளைஞர் ஆணவப்படுகொலை: மனைவி தற்கொலை

SCROLL FOR NEXT