தினமணி கொண்டாட்டம்

வாழ்க்கைதான் யோசிக்க முடியாத சினிமா!

DIN

""புதிய இலக்கியத்தை, சினிமாவை, அரசியலை எளிய மனிதர்கள்தான் நமக்கு காட்டுகிறார்கள்.... அப்படி ஒரு படம்தான் இது. யாரோ ஒரு கடைக்கோடி மனிதனுக்கு நான் தரப்போகும் சின்ன சிரிப்பும் கண்ணீரும்தான் இது. ஒரு சொல்லை, புன்னகையை, கண்ணீரை உங்களிடம் கொடுக்கவோ, பெறவோ நான் உங்களை பின் தொடர்கிறேன்.'' கைக் கொடுத்து அரவணைக்கிறார் இயக்குநர் கணேஷ் விநாயகன்.  கமர்ஷியல் சினிமாக்களில் இதுவரை பயணித்தவர், இந்த முறை மாற்று களத்தில் தமிழ் ரசிகர்களை சந்திக்க வருகிறார். மலைவாழ் பின்னணியில் அவர் இயக்கியிருக்கும் படம் "தேன்.'


"தேன்'... தலைப்பே தித்திக்குதே...

வாழ்க்கையில் சில பாடங்கள் உண்டு. அதை எல்லோரும் உணரும் கட்டம் வரும். சிலருக்கு வந்து போகும். பலருக்கு ஆறாத ரணங்கள் தரும். இங்கேயும் ஒரு சாதாரணமான மனிதனை சூழல் மாற்றி வைக்கிறது. நாம் ஒன்று நினைத்தால் வாழ்க்கை விளையாட்டில் போய்ச் சேருகிற இடம் வேறு ஒன்றாக இருக்கிறது.  அரசியலை விட தனி மனிதனுக்கான உரிமை, அதிகாரம், ஜனநாயகம் எல்லாவற்றையும் பேசும் படம் இது. நிச்சயமாக சூழ்நிலை ஒருவனை மாற்றும். அப்படி ஒருவனை மாற்றி எங்கெங்கோ கொண்டு போய் வைக்கிற கதைதான் இது.  இங்கே கதைக்காகவோ களத்துக்காகவோ அலைய வேண்டிய அவசியமே இல்லை. ஒருவனை, அவன் வாழ்க்கையை ஆழமாகப் பார்த்தாலே கதை. அவனோடு ஊர் வரைக்கும் தேடிப் போனால் அது களம். அப்படி நான் சந்தித்த ஒரு வாழ்க்கை, அந்த வாழ்க்கையில் நடந்த சம்பவத்தின் புனைவு எல்லாமும் இந்த கதை.  அதிகாரம் என்ற ஒன்று நம்மை எப்படி எல்லாம் துரத்தி அடிக்கிறது... நாம் ஒவ்வொருவரும் இந்த அதிகாரத்துக்கு முன்பாக, ஒன்றும் செய்ய இயலாதவர்களாக வாழ்க்கை முழுக்க நமக்கே தெரியாமல் போராடித் தவிக்கிறோம். வாழ்க்கை நம்மை புரட்டிப் போட்டால் எல்லாமே மாறும். அப்போது மனிதர்களையும், ஆட்சி, அரசாங்கத்தையும் தெரிந்துக் கொள்கிற விந்தையும் நடக்கும். அப்போது நிகழ்கிற அற்புதங்களும் அபத்தங்களும்தான் இந்தக் கதை என்று ஒரு வரையறைக்குள் நாம் எல்லோரும் வரலாம். 

அரசியல் விமர்சனம்தான் பிரதான களமா...

மனித வாழ்வுதான். எந்த ஒரு கதைக்கும் மனித வாழ்வுதான் அடிப்படை. நேர்மை, நியாயம், கோபம், அன்பு என மாறிக் கொண்டே இருக்கும் வாழ்வின் மாயங்களைக் கடந்த சினிமா எங்கேயும் இல்லை. அனுதினங்களின் எதார்த்தங்களில் இருந்து இந்தக் கதையைப்  பிரிக்கவே முடியாது. ஒரு வாழ்வின் மணமும் குணமும் நிரம்பியிருந்தால், அது நல்ல சினிமா. இந்த இலக்கணத்தைக் கொண்டே இதை எழுதியிருக்கிறேன். மனிதர்களுக்குச் சமூகத்தின் மேல் பொறுப்பு வேண்டும் என்கிற நேரத்தில், இந்தச் சமூகத்தின் மீது அவர்களுக்கு வெறுப்பு இருக்கிறது என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு தேசம் அதன் எளிய மனிதர்களை அனுசரிக்க முடியாததுதான் இங்கே பிரச்னை. சுதந்திரத்துக்கும் கனவுக்கும் இடையில் சிக்கிக் கொண்டு திண்டாடும் எளியவர்கள் எத்தனை பேர்.  ஒரு கட்டத்தில் நிராகரிப்புகளும், புறக்கணிப்புகளும் மலிந்து விட்ட இந்தச் சமூகத்தின் மேல் எளியவர்களுக்குக் கோபம் வருவது இயல்புதான். மற்ற பிரச்னைகள் எல்லாவற்றையும் விட, கல்வியால், ஜாதியால் எழுகிற பாகுபாடுகள் இங்கே பெரிய பிரச்னை. ஒரு சினிமா இரண்டு மணி நேரம்தான். ஆனால், ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் இங்கே 24 மணி நேரம். இங்கே சந்திக்கும் முகங்கள், சம்பவங்கள், தத்துவம், துயரம், சந்தோஷம் இப்படி எத்தனையோ இருக்கின்றன. வாழ்க்கைதான் நாம் யோசிக்கவே முடியாத சினிமா. கற்பிக்கப்பட்ட கல்வி, அதன் நியாய, தர்மங்கள் எல்லாமும்தான் இந்த வாழ்க்கை. பல யோசனைகளில் இருக்கும் போது, திடீரென்று ஒரு உணர்வு எழும். அதை மனசும் ஆமோதிக்கும். சில நேரங்களில் அந்த உணர்வு எந்த எல்லைக்கும் எடுத்துச் செல்லும். அப்படியான உணர்வுதான் இந்தச் சினிமா.  
 
மலை,  வனம், நதி, அருவி என மெனக்கெடல்கள் அதிகம் போல....

எளிய கதையை அப்படித்தான் தேடிப் போக வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குறிஞ்சி கொடி எனும் மலைக் கிராமத்தில் தேன் எடுத்துப் பிழைப்பு நடத்துகிற  ஒரு சாமானியன் ஒருவன். அங்கேயே கூலிக்கு வேலைக்குப் போகும்  ஒருத்தி. இந்த இரண்டு பேருக்கும் காதல். அவர்களுக்குள் நிரம்பி கிடப்பது எல்லாமே அன்பு, நேசம்.  அன்பின் அடையாளமாக ஒரு குட்டி தேவதை.  அப்போது திடீரென்று ஒரு சூழல் . அந்த சூழலில் அந்த அன்பு, பாசம், குட்டி தேவதை,   அந்த எளிமையான காதல் எல்லாமும் கதை. இதைப் பார்க்கிற  ஒவ்வொருவருக்கும் சட்டத்தின் மேல் இருக்கிற நம்பிக்கை போகும். இன்னும் எத்தனை காலம்தான் எதற்கும் ஆகாத இந்தச் சட்டங்களை வைத்துள்ளீர்கள் என கேள்வி கேட்கத் தோன்றும். அதை விட வாழ்க்கையின் மேல் நம்பிக்கை வரும். சக மனிதர்கள் மேல் இன்னும் அன்பு கூடும். அப்படி வாழ்க்கையில் நடக்கிறதை, நடந்ததைத்தான் எடுத்திருக்கிறேன். நேர்மை ஜெயிக்குமா என்று தெரியாது. ஆனால், நியாயம் கண்டிப்பாக உலகத்துக்குப் புரியும். நேர்மை நமக்கே புரிய கொஞ்ச நேரம் பிடிக்கும். அந்த நேரத்திற்குள் நடக்கிறதை ஒரு படமாக எடுத்திருக்கிறேன். 

இன்னும் தெரிந்த முகங்களை வைத்திருக்கலாமே...

கதைதான் இங்கே எல்லாம்...  சினிமாவுக்குப் பழக்கமான முகமாக இருந்தாலும் எனக்கு சரியாகப்பட வேண்டும் அந்த முகம். அந்த முறையில் கதைக்குள் வந்து சேர்ந்தார் தருண்குமார்.  சினிமா வேட்கை உள்ள இளைஞன்.  முட்டி மோதி வெற்றியை ருசிக்காதவன்.  எதற்கும் தயாராக வந்து சேர்ந்தான்.  உயர்ந்த மரங்கள் ஏறி தேன் பறிப்பது, பாறைகளில் செருப்பு இல்லாமல் நடப்பது என எல்லாவற்றுக்கும் பயிற்சி எடுத்து நடித்துக் கொடுத்தான்.  

அற்புத காதலி அபர்ணதி.  ஏற்கெனவே தொலைக்காட்சி அறிமுகம் உண்டு அவருக்கு. மற்ற கதாபாத்திரங்களிலும் வெகுவாகப் புதுமுகங்களே. பாவா லெஷ்மணன் கதையை நகர்த்திச் செல்லும் பங்கில் இருக்கிறார்.  எனக்கு ஒரு கதை சொல்ல வேண்டும். அவ்வளவுதான். அதற்கு இந்த நடிகர்களே எனக்கு போதுமானவர்கள். எல்லோரும் இயல்பான நடிப்பில் ஈர்ப்பார்கள். கதையின் உண்மைத்தன்மைக்குப் பக்கத்தில் இருப்பவர்களை மட்டுமே இந்தப் படத்தில் பயன்படுத்திக் கொள்ள விரும்பினேன். வசனப் பகுதியில் ராசி தங்கதுரை எல்லோரையும் ஈர்ப்பார். காடு,மலைகளில் பயணப்பட்ட சுகுமார்தான் காமிரா.   படத்தைப் பார்த்த  ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் சார் படத்தை வேறு தளத்துக்குக் கொண்டு போய் சேர்க்க இருக்கிறார்.  இந்த நேரத்தில் நமக்குக் கிடைக்கிற நண்பர்கள், நாம் தேடிக்கிற சந்தோஷம், நம்ம உலகம் எல்லாமே அழகு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT