தினமணி கொண்டாட்டம்

திரையரங்குகளை விலை பேசும் அமேசான்!

3rd Jan 2021 06:00 AM | -ஜி.அசோக்

ADVERTISEMENT


""நீங்கள் திரையரங்கத்தின் இருக்கையில் இருப்பதை மறக்கச் செய்வதே உண்மையான சினிமா''

- ரோமன் போலன்ஸ்கி

ரயில் நிலையத்தில் ஒரு ரயில் வந்து நிற்பதை படம் பிடித்திருந்தனர் லூமியர் சகோதரர்கள். கருப்பு வெள்ளையில் வெறும் 50 விநாடிகள் மட்டுமே ஓடக்கூடிய மெளனப் படமான அதுதான் உலகின் முதல் சலனப் படம். 1895-ஆம் ஆண்டு டிசம்பர் 28-இல் பாரிசில் அதைத் திரையிட்டபோது பார்த்தவர்களில் பலர் அலறித் தெறித்து ஓடினார்கள். தங்களை நோக்கி வந்த ரயில் தங்கள் மீது மோதிவிடாமல் இருக்க உயிர் பிழைக்க ஓடிய ஓட்டம் அது.

நிழலை நிஜமென்று நம்பிய ஆதி சினிமா ரசிகனின் மயக்கம் ஒரு நூற்றாண்டு கடந்து இன்றும் தொடர்கிறது. "எக்ஸ்னோரிஸ்ட் ' பேயைப் பார்த்து தியேட்டரிலேயே அவன் ஆவி பிரிகிறது. "ஜூராசிக் பார்க்' டைனோசர்கள் எவரையோ துரத்த இவனுக்கோ இதயத் துடிப்பு எகிறுகிறது. அம்மன் படம் ஓடும் தியேட்டர்களில் பெண்மணிகளுக்குச் சாமி வந்து விடுகிறது.

ADVERTISEMENT

இத்தனைக்கும் திரைப்படம் இன்று எவ்வித ரகசியமும் அற்றுத் திறந்த புத்தகமாய் இருக்கிறது.

அதன் உருவாக்கம், தொழில்நுட்பம், நுணுக்கம், நடிகர் நடிகையர்களின் அந்தரங்கம் அனைத்தும் கடைநிலை ரசிகனுக்கும் இன்று அத்துபடி. "யாரிடமும் உதவியாளனாக இருந்ததில்லை; எவரிடமும் தொழில் கற்றுக்கொள்ளவில்லை' என்று நிறைய முதல்பட இயக்குநர்கள் பேட்டியில் பெருமைப்படுகின்றனர். விட்டால் ஒவ்வொரு ரசிகனும் தன் திரைப்படத்தைத் தானே எடுத்து தயார் செய்து தந்துவிடுவான். இப்படி அம்பலப்பட்ட பிறகும் சினிமாவின் வசீகரம் துளிக்கூடக் குறையாமல் இருப்பதுதான் ஆச்சர்யம். இன்றைக்கும் ரசிகனை இருக்கை நுனிக்கு தள்ளவும், சிரிக்க வைக்கவும், அழ வைக்கவும் சினிமாவால் முடிகிறது. சினிமா பார்ப்பது மனித வாழ்வின் தவிர்க்கமுடியாத அங்கமாக.. நியதியாக ஆகிவிட்டது. அதனால்தான் எல்லா நாட்டிலும் அரசாங்கமே முன்னின்று திரைப்பட விழாவை நடத்துகிறது. நம்மூர் மாரியம்மன் கோயில் திருவிழா போல திரைப்பட விழாவும் கலாசார அடையாளமாகிவிட்டது.

மாற்றுத் தளத்தில் சினிமா

கரோனா பொது முடக்கத்தில் சிக்கி கொண்ட சினிமா வர்த்தகம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 8 மாதங்களுக்குப் பின் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், இன்னும் சகஜ நிலைக்கு திரும்பவில்லை. கரோனா முடக்கம் காரணமாக மார்ச் 24-ஆம் தேதியிலிருந்து இந்தியாவில் உள்ள திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் மக்களின் பார்வை ஓடிடி தளங்கள் மீது திரும்பியது. ஆரம்பத்தில் அவற்றில் உள்ள படங்களைத் தேடித்தேடிப் பார்க்க ஆரம்பித்தவர்களின் கவனம் மெல்லவே வெப் சீரிஸ்களின் பக்கம் திரும்பியது. சமூக வலைதளங்களில் வெப்சீரிஸ்கள் குறித்த விமர்சனங்கள் பலராலும் எழுதப்பட்ட நிலையில் அவற்றின் மீதான கவனம் மேலும் அதிகரித்துப் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் கூடியது.
வெப் சீரிஸ்களை தொடர்ந்து திரைப்படங்களும் தற்போது நேரடியாக இத்தளங்களில் வெளியிடப்படுகின்றன. ஜோதிகாவின் "பொன்மகள் வந்தாள்' நேரடியாக ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியிடப்பட்டது. மேலும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான "பென்குயின்' படமும் அத்தளத்தில்தான் வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது சூர்யா தயாரித்து, நடித்திருக்கும் "சூரரைப் போற்று' திரைப்படமும் அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது.

வருகிறது பேரதிர்ச்சி...

இப்போது இன்னும் ஒரு பேரதிர்ச்சி காதுகளுக்கு வந்திருக்கிறது. தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தலால் சுமார் 8 மாதங்களுக்குத் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால், திரையரங்கு உரிமையாளர்கள் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளானார்கள். பின்பு, நவம்பர் 10-ஆம் தேதி 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுத் திரையரங்குகள் திறக்கப்பட்டன. ஆனால், முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவுமே வெளியாகாத காரணத்தால், திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டம் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை. இதனால் தமிழகமெங்கும் ஒற்றைத் திரையரங்குகள் மூடப்பட்டு வருகின்றன. பிரபல நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது, திரையரங்குகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளனர்.

திரையரங்குகளை வாடகைக்கு வாங்கும் அமேசான்

இதனிடையே இந்த ஊரடங்கால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை மனதில் வைத்துக்கொண்டு, ஒற்றைத்திரையரங்குகளை அமேசான் நிறுவனம் வாடகைக்கு எடுத்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

படங்கள் திரையிட்டால் என்ன பணம் கிடைக்குமோ, அதைவிட அதிகப்படியான பணத்தைக் கொடுத்து அமேசான் நிறுவனம் கைப்பற்றி வருவதாகத் தெரிகிறது. ஹைதராபாத்தில் இதுவரை 7 திரையரங்குகளை வாடகை மற்றும் சொந்தமாக அமேசான் வாங்கி விட்டதாக செய்திகள் வருகின்றன.

பொருள் வைப்பகமாக மாற்றம்:

அமேசான் தனித் திரையரங்குகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு பொருள் வைப்பகமாக மாற்றப் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அமேசான் நிறுவனம் இணைய தளங்கள் மூலம் எல்லா விதமான பொருள்களையும் விற்று வருகிறது. குண்டூசி முதல் கார் உதிரி பாகங்கள் வரை அமேசான் இணையத்தில் கிடைக்காத பொருள்களே இல்லை.

கடைகளுக்குச் செல்ல நேரம் ஒதுக்கி பொருள்களை வாங்க முடியாதவர்கள் இந்த இணையத்திலேயே பொருள்களை ஆர்டர் செய்து எளிதாக வாங்கி விடுகின்றனர். நேரம், பயண செலவு எதுவுமில்லாமல் பொருள்கள் எளிதாக கிடைப்பதால், இந்த அமேசான் பொருள்களுக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு நிலவி வருகிறது. இதனால் அந்த நிறுவனம் ஆங்காங்கே பொருள் வைப்பகங்களை வைக்க விரும்புகிறது. இதன் மூலம் இன்னும் விரைவாக மக்களை சென்று சேர முடியும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகின்றன. இதற்கு வசதியாக மூடப்பட்டு கிடக்கும் திரையரங்குகளை விலை பேசி வருகிறது அந்த நிறுவனம்.

தமிழகத்திலும் கால் பதிக்கத் திட்டம்

இதன் தொடர்ச்சியாகத் தற்போது அந்த நிறுவனம் தமிழகத்திலும் கால் பதிக்கிறது. முதல் கட்டமாக சிறு சிறு நகரங்களில் மூடப்பட்டுக் கிடக்கும் திரையரங்குகளை விலை பேசத் தொடங்கியுள்ளது. ஒரு பெரிய படம் திரையிட்டால் கிடைக்கும் லாபத்தைப் போல இரண்டு மடங்கு வாடகை தரத் தயாராக இருக்கிறார்கள். இப்படி மாறினால் திரையரங்குகள் லாபகரமாக மாறும். ஆனால், திரைப்படங்கள் திரையிடத் திரையரங்குகள் இருக்காது.

தமிழ் சினிமா தப்பிக்க...

கார்ப்பரேட் கம்பெனிகளின் மல்டிபிளக்ஸ் மட்டுமே இருக்கும். அப்போது தயாரிப்பாளர்கள் வி.பி.எஃப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்க வேண்டியதுதான். நடக்கப்போவது ஒன்றுமில்லை. திரையரங்கு உரிமையாளர்களின் கஷ்டத்தை உணர்ந்து தயாரிப்பில் கவனம் செலுத்தி, செலவுகளைக் குறைப்பதில் ஆர்வம் காட்டி, திரையரங்கு உரிமையாளருடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுத்தால் மட்டுமே சினிமா தப்பிக்கும்.இல்லையேல் திரையரங்கில் திரையிடாமல் வேறு தளத்தில் படங்கள் வெளியானால் நடிகர்களுக்கு எந்த ஸ்டார் பட்டமும் போட முடியாது. இந்தச் சம்பளமும் வாங்க முடியாது. ஆகவே, அனைவரும் ஒன்றுசேர்ந்து திரையரங்குகளைக் காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டும்.

உலகெங்கும் வாழும் மனிதர்கள் இடையே கலாசார வேறுபாடுகள் எத்தனையோ இருந்தாலும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அது.. அனைவருக்கும் சினிமா பிடித்திருகிறது. சினிமாவை உலகப் பொது மதம் என்று தாராளமாகச் சொல்லலாம். திரையரங்கத்துக்கு சென்று படம் பார்க்கும் ரசிகனுக்குத் தியேட்டர்தான் குடியிருந்த கோயில். அந்த ரசிகனையும்.. அவன் கோயிலான திரையரங்கையும் கொண்டாடி கெளரவப்படுத்த வேண்டும். என்ன செய்யப் போகின்றன திரை அமைப்புகள்!

ADVERTISEMENT
ADVERTISEMENT