இந்திய வான், தரை, கடல் படைகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர் இந்திய குடியரசுத் தலைவர் ஆவார். இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் 29 டிசம்பர் 2019 வரை இந்த மரபு கடைப்பிடிக்கப்பட்டது. 30 டிசம்பர் 2019- இல் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் இந்திய குடியரசுத் தலைவருக்கும், மூன்று படைத்தலைவர்களுக்கும் இடையில் "இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைவர்' என்ற புதிய பதவியை இந்திய அரசு உருவாக்கியதுடன், அந்தப் பதவிக்கு முன்னாள் இந்தியத் தரைப்படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் என்பவரை நியமித்தது.
பொதுவாகப் படை வீரர் அல்லது படை அதிகாரி தான் சேரும் படையிலிலேயே தொடர்ந்து பணி புரிந்து ஓய்வு பெறுவார். இது எல்லாப் படைப்பிரிவுகளுக்கும் பொதுவான விதி.
இந்தியாவில் எந்தப் பாதுகாப்புப் படை வீரருக்கும், அதிகாரிக்கும் இல்லாத சிறப்பு கர்னல் பிரிதிபல் சிங்கிற்கு இருக்கிறது.
இந்திய தரைப்படை, வான்படை, கடல் அல்லது கப்பல் படைகளில் பணி புரிந்த பெருமை பிரிதிபல் சிங்கிற்கு மட்டுமே உள்ளது. இப்போது இந்திய பாதுகாப்பு படைகளின் தலைவர் பொறுப்பு ஏற்றிருக்கும் ஜெனரல் பிபின் ராவத்திற்குக் கூட இந்தியாவின் மூன்று பிரிவு படைகளில் பணி ஆற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கர்னல் பிரிதிபல் சிங் 11 டிசம்பர் 2020 அன்று நூறு வயதை நிறைவு செய்தார்.
பிரிதிபல் சிங் இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு முன் இந்திய விமானப்படையில் சேர்ந்தார். பிறகு கப்பல் படையில் சேர்ந்தார். அதற்குப் பிறகு தரைப்படையில் இணைந்தார். இரண்டாம் உலகப் போரிலும், இந்தியா-பாக் யுத்தத்திலும் பங்கு பெற்றுள்ளார். பணியிலிருந்து ஓய்வு பெறும் போது மணிப்பூரில் அஸ்ஸôம் ரைபிள் பிரிவின் தலைமைப் பொறுப்பாளராக இருந்தார்.
பிரிதிபல் சிங் நூறு வயதை நிறைவு செய்திருப்பதையொட்டி அவரது ஓய்வு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. பணியிலிருந்து ஓய்வு பெறும் போது அவரது அன்றைய சம்பளம் எவ்வளவோ அதை ஏழாம் ஊதிய கமிஷன் பரிந்துரையின் படி மாற்றப்பட்டு, அந்த புதிய முழு சம்பளம் எந்தப் பிடித்தமும் இன்றி மாத ஓய்வு ஊதியமாக வழங்கப்படும். இந்தியாவில் இப்படி முழுச் சம்பளத்தை ஓய்வு ஊதியமாக வாங்கியவர்கள் மிக மிக அபூர்வம். அந்தப் பெருமையும் பிரிதிபல் சிங் பெற்றுள்ளார்.
சண்டிகரில் வாழும் பிரிதிபல் டிசம்பர் 24 அன்று தனது 70-ஆவது திருமண நாளை 93 வயதாகும் மனைவி பிரமிந்தர் கவுருடன் கொண்டாடியுள்ளார்.1920-இல் பிறந்த சிங் 1970-இல் இந்திய ராணுவத்திலிருந்து பணி ஓய்வு பெற்றார்.