தினமணி கொண்டாட்டம்

தீராத உறவுகளின் அற்புதம் !

DIN

உணர்ச்சியாக, சந்தோஷமாக அதே நேரத்தில் சிந்திக்க கூடிய படமாகவும் "ராஜ வம்சம்' வந்திருக்கிறது. திரைக்கதை எழுதும்போது என்ன சந்தோஷம் இருந்ததோ, அதையே சினிமாவாக மாற்றும் போதும் அனுபவித்தேன். அடிமட்டத்திலிருந்து சினிமா பார்த்து முன்னேறி இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். மக்களின் அவலம் புரியும். துயரம் தெரியும். நமது இயலாமை, இல்லாமைகளை உணர்ந்திருக்கிறேன். என் சினிமா உணர்வுபூர்வமாகவும், இயல்பாகவும் அமைய என் அனுபவங்களே உதவுகிறது. தொட்டு உணர்கிற மாதிரி உணர்வுகள் என் சினிமாவில் வந்தால் அதை விட கொடுப்பினை வேறு இல்லை...'' புன்னகைக்கிறார் அறிமுக இயக்குநர் கதிர்வேலு. சுந்தர்.சி யின் மாணவர்.

மற்றுமொரு குடும்பப் படமாக இருக்கும் போல....?

மனதில் ஊறிப்போய் இருந்ததுதானே. எல்லாவற்றுக்கும் முன் மாதிரி உண்டு. எதுவும் தானாக உருவாக முடியாது என்பதுதான் இந்த உலகத்தின் சட்டம். படித்தது, பார்த்தது, கேட்டது, உணர்ந்ததுதான் படைப்பாக வருகிறது. இந்த கதை, உறவுகள் கூட பழையதுதான். ஆனால், அதை எனக்கான உணர்வாக, மனிதனாக காட்சிப்படுத்தியதுதான் புதிது. வசதி மட்டுமே சந்தோஷம் இல்லை. எங்கே நிம்மதி, எப்போது சந்தோஷம் என்று எதையும் எளிதாக அர்த்தப்படுத்திட முடியாது. உறவுகளுக்குள் உள்ள புரிதல், அந்த அற்புதம் பதிவாகியுள்ளது. அதற்கும் முன்னாடி நாம் விவசாயத்தை மறந்து நிற்கிறோம்.

எல்லாவற்றுக்கும் கால சூழல் மாற்றம், பருவத்தின் மாற்றம் என சொல்லிக் கொள்கிறோம். விஞ்ஞானம் எல்லாவற்றிலும் இருந்து நம்மை வெளியேற்றி விடுகிறது. இப்போது பார்த்தால் விவசாயம் நலிவடைந்து கிடக்கிறது. இருக்கிற ஒரே உண்மை அதுதான். இதில் வருகிற ஹீரோ சசிகுமார் கூட கிராமத்திலிருந்து பெருநகரத்தில் வேலை பார்ப்பவர்தான். அப்போது அவர் தவறவிடுகிற மன நிலையை குடும்பம், உறவுகள் என வகைப்படுத்தியிருக்கிறேன். இது உறவுகளை முன்னிறுத்துகிற கதை. நான் உங்களிடம் அன்பு செலுத்துகிறேன்என்றால், அதற்குப் பதிலாக வருகிற அன்பு இன்னும் நேர்த்தியாக இருந்தால்தான் மனதை அள்ளும். தீராத உறவுகளின் அற்புதம் இது. உறவுகளை மீறி இங்கே எதுவுமே இல்லை. எங்கே போனாலும் இங்கேதான் வந்து சேர வேண்டும்.

கதையை நகர்த்தும் கரு எது...?

எனக்குள் உருவான ஒரு அம்சம்தான் இதன் கரு. இன்றைக்கு சென்னை போன்ற பெரு நகரங்களில் சுற்றிக் கொண்டிருப்பவர்களில் முக்காவசி பேர் கூட்டுக் குடும்பத்தின் பிள்ளைகள்தான். அவர்களுக்கு உறவுகள்தான் ஆதாரம். அன்பு, காதல், பரிவு... கதையை நகர்த்தும் கரு. விஞ்ஞானம், விவசாயம் என்பது கதையின் நெகிழ்வான பின்னணிதான். மனித உறவுகளும் முதன்மையானது. மண்ணை, உறவின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை. நாம் பெரிதாக இழந்தது கூட்டுக் குடும்பம். சில மனிதர்களின் அன்பில் சுருங்கி, வேறு முகம் பார்க்க ஆளில்லாமல் கிடக்கிறோம். இந்தக் கதையைச் சொன்னதும் சசிகுமார் சாருக்கு அவர் கிராமத்தின் அழகு, உறவுகள் ஞாபகத்திற்கு வந்திருக்கலாம். இப்போதுமே அவர் தமிழ் மண்ணின் முகம்.

இதில் வருகிற மச்சான், மாமனை நாமும் பார்த்திருக்கலாம். ராதாரவி , தம்பி ராமைய்யா, விஜய குமார், சதிஷ், மனோபாலா, ரமேஷ் கண்ணா, சிங்கம் புலி, யோகி பாபு, கும்கி அஸ்வின் ,ஆடம்ஸ் , சரவணா சக்தி, மணி , சிலம்பம் சேதுபதி, ரமணி, ராஜ் கபூர் இப்படி கண்ணுக்கு நெறைஞ்சி பார்க்கலாம். கிராமங்களில் பார்த்து ரசித்து உணர்ந்த கேரக்டர்களையெல்லாம் கொண்டு வந்து இங்கே வைத்து விட்டேன். சசிகுமார் கதை கேட்டதும் நெகிழ்ந்தார். வாழ்ந்து பார்க்க ஆசைப்பட்டார். அது நடந்திருக்கிறது.

பெரிய நடிகர் பட்டாளம் அனுபவம் எப்படி..?

படத்தில் ஒவ்வொரு கேரக்டரும் ஒவ்வொரு மாதிரி. நடிக்கிற நடிகர்களும் ஒவ்வொரு விதம். பல முகங்களை ஒன்று கூட்டி ஒரு முகமாகக் கொண்டு வர வேண்டும். ராதாரவி சார் ஒரு விதம். சசிகுமார் வேறு வடிவம். மாமா, மச்சான், வில்லன் என நாற்பது பேருக்கு மேல் இருக்கிறார்கள். இவங்க கேரக்டர்களை எல்லாம் சேர்த்து இருத்தி, நிறுத்தி, பொருத்தி கொண்டு வருவது சாதாரண வேலையில்லை. ஆறு மணிக்கு மேல் கால்ஷீட் கிடையாது. அப்படி எந்த விதிமுறையும் இங்கே இல்லை. இந்தக் கதையை உள்வாங்கி எல்லோரும் அப்படி நடித்துக் கொடுத்தார்கள். இது சினிமாவில் பெரும் ஆச்சர்யம். இப்படி மறக்க வைத்தது இந்த திரைக்கதை. அதுதான் பெரும் அழகு.

நிக்கி கல்ராணி எப்படி...

அருமை. இத்தனைக்கும் அவருக்கு கிராமம் தெரியாது. அதே கிராமத்து அழகும், சிரிப்புமா... லைட்டா இன்னும் மெருகேத்தி அழகு கூடி வந்திருக்கிறார். யாரும் இதில் ஹீரோ, ஹீரோயின்னு கிடையாது. மாரத்தான் ஓட்டம் மாதிரிதான் படம். ஒரு சமயம் ரேகா கையில் கதை இருக்கும். பிறகு அதை ராதாரவி ஏந்திக்கொண்டு போவார்.

ஒரு கட்டத்தில் எல்லோரும் பயங்கரமாக நடித்துக் கொண்டு இருப்பார்கள். அதே நேரம் சசிகுமார் சார் கையைக் கட்டிக்கிட்டுத்தான் நிற்பார். இப்படி ஒவ்வொருத்தரும் கதையை ஏந்தி கொண்டு போகிற விதம்தான் பலம்.

சித்தார்த் ஒளிப்பதிவு. , சாம்.சிஎஸ் இசை. படத்தொகுப்பினை சபு ஜோசப் மேற்கொண்டுள்ளார். தொழில்நுட்பக் கலைஞர்களும் அப்படித்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

SCROLL FOR NEXT