தினமணி கொண்டாட்டம்

உன்னத இந்தியக் கவிதை

ஷைஜா

சத்யஜித்ரே என்னும் மாபெரும் சாதனையாளர் நூற்றாண்டு இப்போது நிகழ்ந்து வருகிறது. அவரது திரைப்படச் சாதனைகளுக்கு அப்பால் விரிந்த உலகில் எழுத்தாளராகவும், ஓவியராகவும், கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு வாழ்ந்தவர். ஆங்கிலம் தவிர ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலியன் ஆகிய அயல் மொழிகளிலும், பல இந்திய மொழிகளிலும் அவரது படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டன. சிறுகதைகள், குறுங்கதைகள், நாவல்கள், கவிதைகள் என்று கிட்டத்தட்ட ஐம்பது புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

சத்யஜித்ரே இயக்கிய படங்களின் எண்ணிக்கை 51. அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் என்ற கெளரவ விருதை ஆஸ்கர் வழங்கியது. அவர் உடல் நலமின்றி வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் மருத்துவ மனையில் இருந்த போது, ஆஸ்கர் பரிசுக்குழு கல்கத்தாவிற்கு வந்து அவரை மருத்துவமனையில் சந்தித்தது. அவருக்குப் பரிசு வழங்கியதை படம் பிடித்து வெளியிட்டது மட்டுமில்லாமல், அவரது விருது ஒப்புதல் உரையை ஆஸ்கர் திரைப்பட விழாவில் ஒளிபரப்பினார்கள். இந்திய அரசு அவருக்குப் பாரத ரத்னா விருதை வழங்கித் தன்னைக் கெளரவித்துக் கொண்டது.

சத்யஜித்ரேயின் முதல் படமான "பதேர் பாஞ்சாலி' 1956-இல் நடைபெற்ற கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் சிறப்பு விருது பெற்றது. கூடவே பதினான்கு உலகப் பரிசுகள் இப்படத்திற்குக் கிடைத்தன. கைவசம் பதினைந்தாயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு சத்யஜித்ரே எடுக்க ஆரம்பித்த அந்தப் படத்தை எடுப்பதற்குப் பல வருஷங்கள் பிடித்தன. காசு வாங்கிக் கொள்ளாமல் நடித்த முன் அனுபவம் இல்லாத நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்களை வைத்துப் படம் எடுக்கப்பட்டது. தன் வசமிருந்த பொருட்களை விற்று, மனைவியின் நகைகளை அடகு வைத்துப் படம் பிடித்தாலும், மேற்கொண்டு பணம் இல்லாமல் தயாரிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டி வந்தது. அப்போது அமெரிக்காவின் பிரபல இயக்குநர், பதினெட்டு மாதங்கள் எடுத்து நிறுத்தப்பட்டு விட்ட படத்தின் கச்சாப் பிரதியைப் பார்த்துப் பிரமித்து விட்டார். படத்தைப் பற்றி அவர் சொன்ன புகழ் வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு அன்றைய மேற்கு வங்க அரசு எடுத்த படத்தின் பிரதியைக் கூடப் பார்க்காமல் சத்யஜித்ரேக்கு ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் ரூபாய் கொடுத்தது. படம் முடிந்ததும் அதைக் காண வந்த அரசு அதிகாரிகள் "இந்தப் பயண நூல் படத்துக்காக உதவி செய்தோம்?' என்று அதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால் அதன் பின்பு படம் வெளிவந்து வங்காளத்திலும், உலக அரங்கிலும் வெற்றி கொடியை ஏற்றியது சரித்திரம்.

அவரது இரண்டாவது படமான "அபராஜிதோ' வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதால் அவர் அங்கே சென்றார். ஒரு நாள் தன் நண்பருடன் சத்யஜித்ரே வெனிசிலிருந்த ஒரு கஃபேயில் காப்பி குடிக்கச் சென்றார். அப்போது அவர்களுக்குப் பின்னால் இருந்த ஒரு பத்திரிகையாளர் "சிங்கம் கர்ஜிக்கிறது' என்று சத்தமாகச் சொன்னார். ஒன்றும் புரியாமல் அவரை ரே பார்த்த போது ஒரு பெண் பத்திரிகையாளர் அவரை நெருங்கி அவரைப்பற்றிய விவரங்களைக் கேட்டார்."எதற்காகக் கேட்கிறாய்?' என்று சத்யஜித்ரே அவரை கேட்ட போது அவருடைய படத்துக்கு முதல் பரிசான "கோல்டன் லயன்' கிடைத்திருப்பதாகக் கூறினார். உணர்ச்சி வசப்பட்ட ரே அந்தப் பெண்ணை முத்தமிட்டுத் தன் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தார் !அவர் இந்தியா திரும்பிய பின் இதைப் பற்றிக் கேட்ட போது "ஆமாம். இது அங்கே நடந்தது. இங்கே நடக்க சான்úஸ இல்லை!' என்று சிரித்தார்.

1962-இல் வங்காளப் பத்திரிகையான "சந்தேஷி'ல் அவர் "பங்குபாபுவின் நண்பன்' என்ற சிறுகதையை எழுதினர்.சற்றுக் காலம் கழித்து இதை "ஏலியன்' என்ற திரைப்படமாகத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார். அமெரிக்காவின் கொலம்பியா பிக்சர்ஸ் இதை எடுக்க முன் வந்தது. மார்லன் பிராண்டோவும், பீட்டர் செல்லர்சும் தேர்வு செய்யப்பட்டார்கள். ஆனால் சில நாட்களில் திரைக்கதை பற்றிய கருத்து வேறுபாடு எழுந்தது, கொலம்பியா பிக்சர்ஸ் விலகிக் கொண்டது. மார்லன் பிராண்டோவும் விலகிச் செல்ல, சத்யஜித்ரே படத்தை கிடப்பில் போட்டு விட்டார்.

இந்தக் கதைதான் "ஈ. டி' என்ற படமாக ஸ்பீல்பெர்க்கால் எடுக்கப்பட்டு உலகெங்கும் புகழ் பெற்றது. அதன் மொத்த வசூல் 80 கோடி டாலர். (இன்றைய இந்திய மதிப்பில் 5840 கோடி ரூபாய்). ரே தன்னுடைய கதையை ஸ்பீல்பெர்க் திருடி விட்டார் என்ற போது பின்னவர் அதை மறுத்தார். உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானக் கதைகளின் ஆசிரியரான ஆர்தர் சி.கிளார்க் ஸ்பீல்பெர்க்கின் திருட்டை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறினார். ஆனால் அதை ரே மறுத்து விட்டார். "ஸ்பீல்பெர்க் நல்ல டைரக்டர். சில நல்ல படங்களை இயக்கியவர். அவரைக் கோர்ட்டுக்கு இழுக்க எனக்கு விருப்பமில்லை' என்று கூறி விட்டார்!

மார்ட்டின் ஸ்கார்ச்சீஸி என்னும் அமெரிக்க இயக்குநர் திலகம் ரேயைப் பற்றிக் கூறுகையில் "உலகின் நான்கு முக்கியமான இயக்குநர்களில் சத்யஜித்ரேயும் ஒருவர்' என்றார். (மற்ற மூவர்: குரேசவா, பெர்க்மன், ஃபெலினி) குரேசவா ரேயைப் பற்றிக் கூறுகையில் "யாராவது ரேயின் படங்களைப் பார்க்காதவர்களாக இருந்தால் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சூரியனையோ, நிலவையோ பார்க்காமல் வாழ்ந்தவர்களாக இருப்பார்கள்' என்றார்.

ஒரு படத்தின் காட்சியை எப்படி எடுப்பது என்று ரே இவ்வாறு கூறினார்: "ஒரு வங்காள கிராமத்தில் அழுத்தமாகவும் மெளனமாகவும் நிற்கும் அந்திமாலையை எப்படிப் படம் பிடிக்க வேண்டும் என்று ஒருவர் அறிந்திருந்தால் நல்லது. வீசும் காற்றில் மர இலைகள் வீழ்ந்த கண்ணாடிப் பாளமென குளத்து நீர் தென்பட வேண்டும். வீடுகளிலிருந்து வெளியேறி வரும் புகை விரிந்த நிலங்களின் மீது படுகைகளெனக் காட்சி அளிக்க வேண்டும். அருகிருந்தும், தொலைவிலிருந்தும் உருண்டு வரும் சங்குகள் சுவர்க்கோழிகளின் இரைச்சலுடன் இணைந்து இரவு படருகையில் வெளிச்சம் படிப்படியாய்க் குறைவதை ஒலித்துக் காட்ட வேண்டும் வானில் ஒளிரும் தாரகைகள், முட்புதர்களில் சிக்கிக் கொண்டது போல் ஆட வேண்டும்.'

ரேயின் படங்கள் வெளிநாடுகளில் பலத்த வரவேற்பைப் பெற்றன. இந்தியாவில் அப்படியிருக்கவில்லை. "இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. என் படங்களைத் தில்லியில் காலை எட்டு மணிக்குப் போட்டுக் காண்பிப்பார்கள்' என்றார் ரே. "நான் ஜீவிப்பது அயல்நாடுகளில் ஓடும் என் படங்களினால்தான். அவை இல்லாவிட்டால், இந்நேரம் நான் சினிமாவை விட்டுவிட்டு எனது முதல் வேலையான விளம்பரத் துறைக்குச் சென்றிருப்பேன்.'

அவர் கல்கத்தாவை மிகவும் நேசித்தார். "நியூயார்க் டைம்ஸ்' இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ""கல்கத்தா என்னை விரும்பும், அதே சமயம் என்னை வெறுக்கும் நகரம். ஆனால் அதை விட்டு விட்டுப் போய் வேறெங்கும் என்னால் இயங்க இயலாது. என் வேர்கள் இங்கே ஆழமாக ஊன்றியவை. இந்த நகரம் சில நேரம் மனச் சோர்வை அளிக்கும் இடமாக இருக்கலாம். ஆனால் தனது முக்கியத்துவத்தை இழக்காத நகரம். இந்தியாவை விட்டு வேறெங்கும் சென்று வேலை பார்க்க எனக்கு விருப்பம் கிடையாது. என்னைக் கலிபோர்னியாவுக்கு வந்து குடியேறுமாறு கேட்டார்கள். ஆனால் நான் ஒரு ஸ்டுடியோவுக்குள் உட்கார்ந்து வேலை செய்யும் ஆசாமியில்லை. எனது சுதந்திரத்தை, நம்பிக்கையை இழக்க நான் விரும்பவில்லை. அதிகார பீடம், அலுவலகச் சூழல், நட்சத்திரங்களுக்கு அடிபணிவது ஆகியவற்றை என்னால் சகித்துக்கொள்ள முடியாது'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

SCROLL FOR NEXT