தினமணி கொண்டாட்டம்

ராயப்பேட்டையல்ல, கலைஞர்கள் கோட்டை!

பாடகர் டி.கே.எஸ்.கலைவாணன்


நாங்கள் வசித்து வரும் பகுதி ராயப்பேட்டையாக இருந்தாலும், நீண்ட காலமாகவே இது கலைஞர்கள் ஏராளமாக வசித்து வரும் பகுதியாக விளங்கி வருவதால் ஒரு வகையில் இது கலைஞர்களின் கோட்டையாகவே மாறிவிட்டது.

சென்னை மாநகரம் என்றாலே அது அன்றே வளர்ச்சி பெற்ற பிராட்வே, சென்னை சென்ட்ரல் ரயில், ராயபுரம், பாரிமுனை பகுதி தான். மற்ற பகுதிகளிலெல்லாம் பிற்காலத்தில் தான் குடியிருப்பு வீடுகளும், பிற கட்டடங்களும் உருவாகியிருக்கின்றன என்பதை சென்னை மாநகரத்தின் வரலாறு கூறுகிறது.

அந்த வகையில் திருவல்லிக்கேணிக்கு தென்புறம் உள்ள பகுதிகள் பின்னாளில்தான் வளர்ச்சி பெற்றிருக்கின்றன. அதுவரை வயல்களும், தோட்டங்களும், புதர்களும், குளங்களுமாக இருந்திருக்கின்றன. அதனால் தான் இப்பகுதிகளில் இப்பொழுதும் தோட்டம் என்று முடியும் பகுதிகளைக் காணலாம். எடுத்துக்காட்டு, பார்டர் தோட்டம், புதுப்பேட்டை தோட்டத்தெரு போன்றவை. ராயர் என்ற ஓர் பிரிவினர், குறிப்பாக ஓட்டல் தொழிலில் ஈடுபடுபவர்கள் இப்பகுதியில் அதிகம் வசித்ததால் இப்பகுதி ராயப்பேட்டை என்று அழைக்கப்பட்டு அதுவே பெயராக நிலைத்துவிட்டது.

அவ்வை சண்முகம் சாலை என்று பெயர் மாற்றம் பெற்று விட்ட லாயிட்ஸ் சாலையில் முதன் முதலில் பிரபலமான நாடக -திரைப்பட கலைஞர்களான எங்கள் தந்தையார் அவ்வை சண்முகம், அவர்தம் மூத்த சகோதரர்கள் டி.கே.சங்கரன், டி.கே. முத்துசாமி (திரைப்படத் தயாரிப்பாளரும் கூட) மற்றும் இளைய சகோதரர் டி.கே.பகவதி ஆகியோரும் சேர்ந்து, தற்போது நாங்கள் குடும்பத்துடன் வசித்து வரும் "அவ்வையகம்' என்னும் பெயரிடப் பெற்ற வளாகத்தை (சுமார் நான்கரை கிரவுண்டு நிலம்) 26 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி குடியேறினார்கள். நான் பிறந்த 1949-ஆம் ஆண்டில் தான் இது நிகழ்ந்தது.

அந்த காலி மனையில் அவ்வை சண்முகம் (ஒரு கிரவுண்டு 72 சதுர அடி) பாகத்தில் எண்பது ஆண்டுகள் பழைமையான வீடு ஒன்று மட்டும் இருந்தது. அதில் தான் நாங்கள் இருந்தோம். மற்ற சகோதரர்களின் பாகங்களில் வீடுகள் பின்னாளில் தான் கட்டப்பட்டன. 

அவ்வை சண்முகம் மறைந்து 45 ஆண்டுகளுக்குப் பின் தற்போது அந்த பழைய வீடு முற்றிலுமாக இடிக்கப்பட்டு, என் மகன் அய்யப்பனின் பெரு முயற்சியால் புதிய வீடு கட்டப்பட்டு, அதில் நான் என் மகன் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். அடுத்தடுத்த வீடுகளில் தந்தையாரின் மூத்த சகோதரர்கள் டி.கே.சங்கரன், டி.கே.முத்துசாமி மற்றும் இளைய சகோதரர் டி.கே.பகவதி ஆகியோரின் குடும்பத்தார் வசிக்கின்றனர். மொத்தம் நான்கு வீடுகள் இவ்வளாகத்தில் இருக்கின்றன.

இவ்வாறு இப்பகுதி நன்கு வளர்ச்சி அடைவதற்கு முன்பாகவே, இப்பகுதியில் குடியேறிய மூத்த கலைஞர் என்பதாலும், புகழ்பெற்ற நாடக மேதை என்பதாலும், நாடகத்தில் அவ்வை வேடம் தாங்கி பெரும் புகழ் பெற்றதாலும், எங்கள் இல்லம் இருக்கும் இந்த சாலையின் பெயரை அவ்வை சண்முகம் சாலை என்று மாற்றி,  என் தந்தையின் புகழுக்குப் பெருமை சேர்த்தார் அன்றைய தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர்.  இதன் பழைய பெயர் லாயிட்ஸ் சாலை என்பதாகும். கதீட்ரல் சாலையுடன் (சென்னை-6) இணைக்கப் பெற்றிருந்த இப்பகுதி பின்னர் கோபாலபுரமாகி (சென்னை -86)   வளர்ச்சி பெற்றது. மற்றொரு பகுதி ராயப்பேட்டையுடன் இணைந்திருந்தது.

எங்கள் இல்லம் 139-பி அமைந்த (பழைய முகவரி : 139. ஏ.பி.சி.டி லாயிட்ஸ் வீதி சென்னை-6 ) இடத்துக்கு வலப்புறமுள்ள மேற்குப்பகுதியில் ஒவ்வொரு புகழ் பெற்ற கலைஞரும் சொந்த வீடு வாங்கி குடியேறத் தொடங்கிவிட்டனர். அந்த பட்டியலில் தமிழக மேனாள் முதல்வர் கருணாநிதி முதலாவதாக வருகிறார். அவர் வீடும் பழைமையானது தான். கோபாலபுரம் 4-ஆவது தெருவில் உள்ள வீட்டை வாங்கிக் குடியேறினார். நானும் அவருடைய மூத்த மகன் மு.க.முத்துவும் கோபாலபுரம் மாண்டிச்சோரி பள்ளியில் (கணேஷ் தெரு) ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்த தோழர்கள். இப்பகுதியிலேதான், திரைப்பட இயக்கத்தில் இரட்டையர்களாக இருந்து புகழ் பெற்றவர்களும், நடிகர் சிவாஜி கணேசனின் முதல் படமான "பராசக்தி'யை இயக்கிய பெருமைக்குரியவர்களுமான கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோரில் கிருஷ்ணன் குடியிருந்தார். 

கான்ரான்ஸ்மித் சாலையிலுள்ள கோபாலபுரம் ஆண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகத்தின் பின்புறம் உள்ள தெருவில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் -ராமமூர்த்தி இரட்டையருள் டி.கே.ராமமூர்த்தி வீடு அமைந்திருந்தது. அவ்வை சண்முகம் சாலையில் தற்போது இருக்கும் காதி கிராமோத்யோக் பவன் எதிரில் உள்ள ராமசாமி அய்யர் தெருவில் தான் திரைப்பட தயாரிப்பாளரும், தமிழக மேனாள் அறநிலையத்துறை அமைச்சருமான இராம.வீரப்பன் இல்லம் இருக்கிறது. ஆனால், தற்போது  அவர் தி.நகர் திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து வருகிறார். அதே ராமசாமி தெருவில் அமைந்திருந்த எங்கள் பெரியப்பா டி.கே.முத்துசாமி வீட்டை வாங்கி அதில் குடியேறிவர் தான் நடிகர் தேங்காய் சீனிவாசன். 

அடுத்த இதழில்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT