தினமணி கொண்டாட்டம்

பங்கில்லை... ஆயுதங்களுக்கு!

ஜி. அசோக்

""எங்கேயோ அந்தப் போஸ்டரைப் பார்த்தேன். புலி ஒன்று ஆக்ரோஷமாக மானைத் துரத்தும் படம். "நீ மானாக இருந்தால், புலியைவிட வேகமாக ஓடு. நீ புலியாக இருந்தால், மானைவிட வேகமாக ஓடு...' என்கிற அந்த வரிகள் என்னைப் பாதித்தது. ஏனென்றால் என் வாழ்க்கையே அதுதான்.'' மென் புன்னகையால் ஈர்த்து பேச துவங்குகிறார் கதிரவன். அஜித்தின் "சிட்டிசன்' இயக்கிய ஷரவணன் சுப்பையாவுடன் கை கோர்க்கிறார். படத்துக்குப் பெயர் "மீண்டும்'.

""சினிமாக்காரனுக்குக் கிளிசரின் போடாமல் கண்ணீர் வழிகிற நிமிடங்கள் இருக்கே... அது ரொம்பவே துயரமானது. ஏனென்றால் அது உண்மையான கண்ணீரா... இல்லை வெறுமென நடிப்பா... என்கிற சந்தேகம் ஒரு விநாடி எல்லாருடைய மனதிலும் எட்டிப் பார்த்து விட்டுப் போகும். வாய்ப்புகள் என்னைத் தேடி வந்ததா... நான் தேடிப் போகவில்லையா... என்பதை இப்போது கணக்குப் போட்டு பார்க்க முடியாது. பெரும் கனவு, லட்சியம் என கோடம்பாக்கத்துக்கு ஓடோடி வந்த நாள்கள் நினைவில் நிழலாடுகின்றன. கனவு தேடி, உணவு தேடி அலைந்த நாள்கள் அது.

"ஒன்பதிலிருந்து பத்து வரை', "காந்தர்வன்' என சில படங்கள் அடையாளம் தந்தன. தோல்விகளே மிச்சம் இருந்தாலும், அடுத்தடுத்து வெவ்வேறு வேலைகளில் இயங்கி கொண்டே, சினிமாவை எட்டிப் பார்க்கிறேன். குடும்பம், மனைவி, மக்கள் என சமூகச் சூழல்களின் துரத்தல் ஒரு புறம். சிதைந்து விடாத சினிமா கனவு ஒரு புறம். இந்த இரண்டுக்குமான போராட்டங்களை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. அதை வாழ்ந்துப் பார்த்தால்தான் தெரியும். இத்தனை வருட போராட்டங்களுக்குப் பின் இப்போது மீண்டும் ஒரு இருக்கை. பார்க்கலாம்.

சினிமாவுக்கு சம்பந்தம் இல்லாத குடும்பம். கால் போன போக்கு, மனம் போன இடம் என்று திரியும் வயதில் இருந்தே இந்த சினிமா மேல் சிறு ஆசை. அவ்வப்போது வருகிற படங்களின் பெரும் வெற்றி, அது தரும் உத்வேகம் இந்தப் பயணத் தொடக்கத்துக்குப் பெரும் பலம். சினிமாவின் மேல் வெறும் ஆசையை மட்டும் கொள்ளாமல், அதைப் பற்றித் தீவிரமாகத் தெரிந்து கொண்டேன். ஆனால் சினிமா வாசலுக்கான திறவுகோல் எங்கேயும் இல்லை. முதல் வாய்ப்பில் ஆயிரம் கஷ்டங்கள். எல்லாவற்றுக்கும் என்னையே தருவது என்ற முடிவில், இப்படத்தைத் தயாரிக்கிறேன்.

இயக்குநர் ஷரவணன் சுப்பையா. என்னை மாதிரியே முட்டி மோதி வெற்றியை ருசிக்காதவர். பக்கா சினிமா தெரிந்தவர். சிறந்த கதைச் சொல்லி, ஏதேச்சையான சந்திப்பில்தான் பேசினோம். ஒரு கதை சொன்னார். பிடித்திருந்தது. இருவருக்குமே மனசு பொருந்தி உழைத்தோம். இந்தக் காலக் கட்டத்துக்கு ஏற்ற கதை. கரோனா காலக் கட்டத்துக்கு முன் வந்திருந்தால், இந்திய சினிமா திரும்பி பார்த்திருக்கும். கொஞ்சம் மிஸ்ஸிங்....

இனி வரும் போர் சுழல்களை எங்கோ நடக்கிறது என்று நாம் வேடிக்கைப் பார்க்க முடியாது. போர் என்பது இனி ஆயுதங்களைக் கொண்டு நடக்காது. அப்படி நடந்தால் அவற்றுக்கு எல்லைகள் உண்டு. இனி மனித குலம் சந்திக்கும் போர் சூழல்களுக்கு எல்லைகளே கிடையாது. சொல்லப் போனால் அந்த போருக்கு ஆயுதங்களே இருக்காது. எல்லாமே அணு கதிர் வீச்சுதான். அந்தக் கதிர்வீச்சுகளுக்கு எல்லை இருக்காது. மனிதம் தெரியாது. பாகிஸ்தான் மனிதன், இந்திய மனிதன், அமெரிக்க மனிதன், ஈரான் மனிதன் என அந்த கதிர் வீச்சுகளுக்குப் பிரித்துப் பார்க்கத் தெரியாது. எல்லாமே அதற்கு அழிவுதான். அப்படி ஒரு போக்கைத்தான் இந்தப் படம் எடுத்து வைக்கும். உலக மனிதர்களுக்கான பிரச்னைகளை நம் மொழியில் பேசுகிறோம். ஒரு படம் என்பது ஒரு விளக்கு போல. மழை, புயல், வெள்ளம் என எது வந்தாலும், அதை அப்படியே பொத்தி பாதுகாத்து ரசிகனிடம் கொண்டு போய் சேர்த்து விட வேண்டும். அப்படித்தான் இந்தப் படத்தைப் பார்க்கிறேன். வாழ்க்கை இங்கே மிகவும் எளிமையானது. பேரன்பு மிக்க மனிதத்தை உலகம் முழுவதும் உருவாக்க வேண்டும் என இயக்குநர் ஷரவணன் சுப்பையா பேச இருக்கிறார்.

யுகங்களின் காத்திருப்பை ஒரு நொடியின் தரிசனம் துடைத்தெறிவது மனித வாழ்வில்தான் நடக்கும். காத்திருப்பின் வலியைச் சுகமாக்கும் உயிர்கள்தான் பிரபஞ்சத்தின் பெருங்கொடை இல்லையா... எதிர்பார்த்துக் காத்திருப்பது பல நேரங்களில் நடப்பதில்லை. ஆனால், காத்திருந்ததை விடவும் அழகான விஷயங்கள் நடந்து விடுகின்றன. சினிமாவில் என் அடுத்தத் துவக்கம் இது. இயக்குநர் ஷரவணன் சுப்பையா. பெரிய இடத்துக்கு வந்திருக்க வேண்டியவர். திரைக்கதையில் அவ்வளவு சுவாரஸ்யம். எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த கதை. சென்னையை மையப்படுத்துகிற கதை.

உடம்பும், மனசும் லயித்து இயங்குகிற படம். காலம் கடந்தும் ரசிகர்கள் மத்தியில் நிற்க கூடிய படமாக இருக்கும். இதோ நீங்களும், நானும், நாம் எல்லாரும் பார்த்து ரசிக்கிற இந்த உலகம்தான் கதை. நல்ல படம். நல்ல இடத்துக்கு என்னைக் கொண்டு போகும். பெரிய இடங்களுக்கு இன்னும் பயணப்படவில்லை. அதற்குள் நிறையப் பேரின் அன்பும், ஆதரவும் கிடைத்திருக்கிறது. இனி, நல்ல நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று காத்திருக்கிறேன். தேடி வந்தவை நிறைய.. நானும் தேடிப் போகிறேன்.

பெரிய ஸ்டார், சின்ன ஸ்டார் என எந்த வித்தியாசத்தையும் ரசிகர்கள் பார்ப்பதில்லை. கதை இருந்தால் போதும்... இந்த நிலை இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்தால், எல்லாமே மாறி விடும். கதைதான் முக்கியம். இதுதான் கதை எனத் தீர்மானமாகப் பிடித்து விட்டால், அந்தக் கதையில் எந்தக் கதாபாத்திரத்தையும் ஏற்று விடுவேன். ஓடுகிற படத்தில் இருப்பதை விட, கதை உள்ள படத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன். இந்த நிலைப்பாடு கடைசி வரை இருந்தால் அழகான வெற்றி பட்டியல் தொடரும்.

உன்னதமான நேரம் இது. சுவாரஸ்யமான, தீவிரமான படங்களுக்கான காலம்தான் இனி. அப்படி வரும் படங்களில் நான் நிச்சயம் இருப்பேன். கேட்டதை விட, நினைத்ததை விட எல்லாமே அடுத்தடுத்து நல்லதாகவே நடந்து கொண்டு வருவதால், இது நிச்சயம்'' வார்த்தைகளால் நிறைவு செய்கிறார் கதிரவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT