தினமணி கொண்டாட்டம்

சேமிப்பு அவசியம்

14th Feb 2021 06:00 AM

ADVERTISEMENT


ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ள குட்டி தீவு  நவ்ரு. ஜனத்தொகை 10ஆயிரம் மட்டுமே. தீவின் நீளம் ஐந்து கி.மீ, அகலம் மூன்று கி.மீ. 30 நிமிடத்தில் சுற்றிவரக்கூடிய நாடு. மீன்பிடித்தல், விவசாயம் என மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நாட்டுக்கு லாட்டரி அடித்தது.

அந்தத் தீவில் லட்சக்கணக்கான பறவைகள் எச்சமிட்டு அவை முழுக்க பாஸ்பேட் தாதுவாக மாறியிருந்தன.

அவை சர்வதேச சந்தையில் ஏராளமான விலைக்கு போகும் பொருள். எனவே பன்னாட்டு கம்பெனிகள் வந்து இறங்கின. பாஸ்பேட்டை வெட்டி எடுத்தன. அரசுக்கு ஏராளமான வருமானம் வந்தது.

ஒரு கட்டத்தில் 10ஆயிரம்  பேர் மட்டுமே உள்ள நாட்டின் அரசிடம் 170 கோடி டாலர்கள் இருந்தன.

ADVERTISEMENT

கணக்கு போட்டால் நபர் ஒருவருக்கு ஒன்றரை லட்சம் டாலர். அதாவது நால்வர் அடங்கிய குடும்பத்துக்கு தலா 1 கோடி ரூபாய்களை அரசால் கொடுக்க முடியும். அந்த பணத்தில் அரசு எல்லாருக்கும் இலவச உணவு, டிவி  வாங்கி கொடுத்தார்கள். அரசின் சார்பில் விமான கம்பெனிகள் துவங்கப்பட்டன. அவை ஹவாய், நியூயார்க், சிங்கப்பூருக்கு எல்லாம் அரசின் சார்பில் இலவசமாக பறந்தன.

ஒரு நபருக்காக விமானம் சிங்கப்பூர் போன கதை எல்லாம் உண்டு. போர் அடித்தால் மக்கள் டோக்கியோ போய் காபி குடித்து விட்டு வருவார்கள். ஆளே இல்லாத ஓட்டலில் ஐந்து மில்லியன் டாலர் செலவு செய்து கலைநிகழ்ச்சி நடத்தினார்கள்.

சுமார் பதினைந்து வருடம் உலகின் ஆடம்பரம் அனைத்திலும் மக்கள் திளைத்தார்கள் . இதற்கிடையே ஒருநாள் பாஸ்பேட் தீர்ந்துவிட்டது. கம்பெனிகள் விடை பெற்றன. அரசின் வருமானம் நின்றது.வெளிநாடுகளில் எல்லாம் கட்டணபாக்கி, சம்பள பாக்கி என விமானங்களை பறிமுதல் செய்தார்கள்.மக்கள் உழைக்க முடியாத வண்ணம் மிக குண்டாக இருந்தார்கள். இளைய தலைமுறைக்கு விவசாயம், மீன்பிடி என்றால் என்னவென்றே தெரியவில்லை.

பாஸ்பேட் சுரண்டப்பட்டு மண்ணும் விவசாயத்துக்கு தகுதியற்றதாக மாறியிருந்தது.அதன்பின் வாழ்க்கைதரத்தை தக்கவைத்துக் கொள்ள அந்த நாடு குடியுரிமையை காசுக்கு விற்றது.இதனால் கள்ளகடத்தல்காரர்கள், மாபியா கும்பல் எல்லாம் நவ்ரு வங்கியில் பணத்தை போட்டு கருப்பை வெள்ளை ஆக்கினார்கள்.

கடைசியாக உலகநாடுகள் நவ்ரு மேல் பொருளாதார தடை விதிக்க, மக்கள் மறுபடியும் ஏழ்மை நிலைக்கு போனார்கள்.


இன்று உலகின் ஏழ்மை நிரம்பிய, உலகின் மிக குண்டானவர்கள், ஆரோக்கிய குறைவானவர்கள் இருக்கும் நாடாக நவ்ரு ஆகி விட்டது.

ஆஸ்திரேலிய அரசு கொடுக்கும் நிதியுதவியில் தான் மக்கள் ஒருவேளை சோறு சாப்பிடுகிறார்கள். முறையான சேமிப்பு இல்லையெனில் வீட்டுக்கும் இதே நிலைதான், நாட்டுக்கும் இதே நிலைதான். வந்த பணத்தை கட்டிகாக்கத் தெரிவது, சம்பாதிக்கத் தெரிவதை விட முக்கியம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT