தினமணி கொண்டாட்டம்

என்றுமே அழியாத கலை!

14th Feb 2021 06:00 AM | -வனராஜன்

ADVERTISEMENT


கூத்துப்பட்டறை என்ற ஒன்றை நிறுவி தமிழ்த் திரையுலகில் பிரபல நடிகர்களுக்குப் பயிற்சிக் கொடுத்து வந்தவர் ந.முத்துசாமி. தெருக்கூத்தைத் தமிழ் கலையின் முக்கிய அடையாளமாக்கியவர். இவரது கூத்துப்பட்டறையில் பயிற்சி எடுத்துப் பிரபலமானவர்கள் தான் நாசர், தலைவாசல் விஜய், கலைராணி, பசுபதி, விஜய் சேதுபதி, விமல், விதார்த், சண்முகராஜன், தேவி போன்றோர். அப்பா முத்துசாமி மறைவுக்குப் பிறகு கூத்துப்பட்டறையை நடத்தி வருபவர் அவருடைய வாரிசான நடேஷ் முத்துசாமி. 

""அப்பா காலமாகி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. அவருடன் பணியாற்றிய இ.ஆர். கோபாலன், இயக்குநர் ஞானராஜசேகரன் போன்றவர்களுடன் கலந்து பேசி நடத்தி கொண்டு வருகிறோம். கரோனா காலத்தில் மூடப்படாத கம்பெனிகளில் கூத்துப்பட்டறையும் ஒன்று.  வழக்கம் போல் சமையல், சாப்பாடு, நடிப்பு என நடிகர்களை உருவாக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இப்போது பஞ்ச தந்திரக் கதைகளை நாடகங்களாகப் போட உள்ளோம். இம்மாத இறுதியில் எங்கள் பட்டறையில் நாடகங்கள் நடைபெறுகின்றன. மேலும் பள்ளிகளில் நாடகங்கள் போடுவதற்கான முயற்சி நடந்து வருகிறது. காலை, மாலை நடைபெறும் நடிப்புப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள நபர்கள் வருகிறார்கள். ஆனால் முன்பு போல் அதிக நபர்கள் வருவதில்லை. பெரியளவில் லாபமில்லை. ஆனால் நமது கலை அழிந்துவிடக்கூடாது என்பதில் கவனமாகயிருக்கிறோம். 

நாடகத்தை அரசின் ஒத்துழைப்போ, மக்களின் ஒத்துழைப்போ, பிரபல நிறுவனங்களின் உதவி இல்லாமல் நடத்துவது கடினம். டிக்கெட் வருவாயை பெரிதாகக் கணக்கில் கொள்ள முடியாது. நாடகத்தைப் பொருத்தவரை நம் கையிலிருந்து தான் காசு செலவு செய்ய வேண்டும். 

ADVERTISEMENT

அடுத்தக் கட்டமாக சிறுகதைகளை நாடகங்களாக்க இருக்கிறோம். இதற்காகப் பிரபல எழுத்தாளர்களின் கதையைத் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. மார்ச் மாதம் அந்தப் பிரபலங்களின் கதைகள் நாடகங்களாக வெளியாகும். 

சினிமாவில் நடிகனாக வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கூத்துப்பட்டறையில் வந்து சேருகிறார்கள். நாடகத்தில் நடிக்க வேண்டும் என்று யாரும் வருவதில்லை. நாடகத்தில் நடிக்க வேண்டும் என்று இயங்கக் கூடிய நடிகர்களும் இப்போது இல்லை.''

கூத்துப்பட்டறையைத் தேடி வருபவர்களுக்கு அளிக்கும் பயிற்சிகள் என்ன?

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். நடிகருக்கு உடல் தான் சுவர். அதனால் உடலுக்கான பயிற்சிகள். பேச்சுப் பயிற்சி, தியேட்டர் கேம்ஸ், வசன உச்சரிப்பு. காமிராவுக்காக நடிக்கும் சிறப்புப் பயிற்சி போன்றவற்றை அளிக்கிறோம். குறிப்பாகத் திரைப்படக் கல்லூரியில் படித்த நன்கு அனுபவம் பெற்ற மாணவர்களை நாங்கள் வேலைக்கு வைத்துள்ளோம். அவர்கள் தான் பயிற்சிகளைத் சொல்லித் தருவார்கள். 

நடிகைகள் என்று யாரும் பயிற்சி பெற வருவதில்லை. நடிகைகளைப் பொறுத்தவரை சிவப்பாக இருக்க வேண்டும். குள்ளமாக இருக்கக்கூடாது. நடிப்பு பற்றி அவர்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை. திரையில் வந்து போனாலே போதும். ஆனால் எங்களை நம்பி முழு நேர நடிகர்கள் 14 பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு மதிய உணவு அளிக்கிறோம். முடிந்தவரை தங்குவதற்கு இடம் தருகிறோம். இது எங்களால் முடிந்த சேவை.

அப்பாவிடமிருந்து கற்றுக் கொண்டவை என்ன?

ஒரு நடிகனின் முகபாவனை,  குரல் என்பதை எல்லாம் தாண்டி அவன் முக்கியமாக தன் மனதையும் உடலையும் தயார்படுத்தவேண்டும் என்பார். காரணம், ஒருவரின் மனதில் இருக்கும் விஷயம்தான் அவனின் முக பாவனையிலும் உடல் மொழியிலும் வெளிப்படும் என்பது அவரின் ஆணித்தரமான கருத்து. 

அதேபோல் ஒருவனுக்கு நடிகனாக வேண்டும் என்ற எண்ணம் மட்டும் கொண்டிருந்தால் போதுமானது. அதுவே அவனை வளர்க்கும் என்பார். நம் கூத்துக் கலையைக் காப்பது கோயில் திருவிழாக்கள்தான் என்பதும் அவரின் அசைக்கமுடியாத கருத்து. கோயில் திருவிழாக்களில் இருந்து என்று கூத்துத் தடைபெறுகிறதோ அன்று கூத்துக் கலையும் மடியும் என்பது அப்பா சொல்வார். ஆனால், எதுவாக இருந்தாலும் கலை என்றும் அழியாது என்பதுதானே உண்மை. அதற்கு சான்றாக இவரால் இன்று சினிமாத்துறைக்குள் வந்து சாதித்துக்கொண்டு இருக்கும் நட்சத்திரங்கள் இருக்கும்வரை அப்பா வாழ்ந்துகொண்டே இருப்பார்.  அதற்கு உதாரணம் தான் நடிகர் விஜய்சேதுபதி. 

கூத்துப்பட்டறையில் அக்கவுண்டண்டாக இருந்த விஜய்சேதுபதியை நடிகராக்கினார். "ஆண்டவன் கட்டளை' படத்தில் நாசர் நடித்திருந்தது முத்துச்சாமி கதாபாத்திரத்தில் தான். தன்னால் ஒவ்வொரு படத்திலும் கதாபாத்திரங்களில் வித்தியாசம் காட்ட முடிவது முத்துசாமியின் கூத்துப்பட்டறைப் பயிற்சியால் தான் என்பதைப் பலமுறை விஜய் சேதுபதியே சொல்லி இருக்கிறார்.

இதேபோல், "ஜோக்கர்' பட நாயகன் குரு சோமசுந்தரமும் கூத்துப்பட்டறை மாணவர் தான். கூத்துப்பட்டறையில் 9 ஆண்டுகள் இருந்தவர், பல நடிகர்களுக்கு நடிப்பும் சொல்லிக் கொடுத்தவர். அவர்களில் முக்கியமானவர் வில்லன் மற்றும் கதாநாயகன் என எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் ஸ்கோர் செய்யும் பாபி சிம்ஹா. 

இவ்வாறு கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்று சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருப்பவர்கள் ஏராளம். இன்னும் ஜொலிக்கயிருப்பவர்கள் தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள். 

ADVERTISEMENT
ADVERTISEMENT