தினமணி கொண்டாட்டம்

சம்ஸ்கிருதம் இஸ்லாமியர்களின் அனுபவங்கள் !

பிஸ்மி பரிணாமன்

சம்ஸ்கிருதத்தில் பண்டிதர்களாக இஸ்லாமியர்கள் நேற்றும் இருந்தார்கள். இன்றைக்கும் இருக்கிறார்கள். நாளைக்கும் இருப்பார்கள். ஒரு மொழி மீது ஆர்வம் ஏற்பட... விரும்பும் மொழியைப் பரப்ப மதம் ஒரு தடையாக இருக்காது என்பதற்கு இதைவிட பொருத்தமான எடுத்துக்காட்டு தேவையில்லை.

அந்தச் சிறுவனுக்கு சம்ஸ்கிருதம் வெகுவாகப் பிடித்துப் போய் விட்டது. நேராக சம்ஸ்கிருத வகுப்பிற்குச் சென்றான். சம்ஸ்கிருதம் கற்றுத் தரும் ஆசிரியரிடம் போய் "நான் ஒரு முஸ்லீம். எனக்கு சம்ஸ்கிருதம் படிக்க ஆசையாக இருக்கிறது. எனக்குச் சொல்லிக் கொடுப்பீர்களா.." என்று கேட்டான். "அதற்கென்ன பேஷா சொல்லிக் கொடுக்கிறேன்' என்ற சொன்ன ஆசிரியர் பையனை வகுப்பில் சேர்த்துக் கொண்டார். அந்தப் பையன் தான் பண்டிட் குலாம் தஸ்தகீர் பிராஜ்தார் மஹாராஷ்டிரா மாநிலத்தின் சம்ஸ்கிருதப் பாடக் குழுவின் தலைவராக செயல்பட்டவர்.
வாரணாசி சம்ஸ்கிருத வளர்ச்சி கழகத்தின் பொதுச் செயலாளராகவும் இருந்தவர் பண்டிட் குலாம் தஸ்தகீர் பிராஜ்தார். மதவெறுப்புக்களைத் தவிர்க்க பாடுபட்டவர். பனாரஸ் பல்கலைக்கழகத்தின் சம்ஸ்கிருத அறிஞர்களிடையே சொற்பொழிவுகள் பல நிகழ்த்தியவர் என்றால் அவரது சம்ஸ்கிருதப் புலமை பற்றி விளக்க வேண்டியதில்லை. மும்பை ஊர்லி பள்ளியில் சம்ஸ்கிருத ஆசிரியராகப் பணி புரிந்தவர். 87 -ஆவது வயதில் மும்பையில் கடந்த ஏப்ரல் மாதம்தான் காலமானார்.
பாட்னா பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதம் முதுகலை வகுப்பில் தங்கப் பதக்கம் பெற்று தேறியவர், மிராஜ் அகமத் கான். தொடர்ந்து சம்ஸ்கிருதத்தில் முனைவர் பட்டம் பெற்று தற்போது காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகப் பணிபுரிகிறார்.
இஸ்லாமியரான நீங்கள் எப்படி சம்ஸ்கிருதம் சொல்லிக் கொடுக்கலாம், என்று யாரும் என்னைக் கேட்கவில்லை. மாறாக சம்ஸ்கிருத மொழியை காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் பிரபலப்படுத்தும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். "ஏகம் பிரம்மா த்விதியா நாஸ்தி' என்று சம்ஸ்கிருதத்தில் சொன்னால் "கடவுள் ஒன்றே ... இரண்டில்லை' என்று பொருள். அதே பொருளைத்தான் குரானின் "லா இலாஹ இல்லல்லாஹ்' என்ற வசனம் சொல்கிறது.
பல்கலைக்கழகத்தில் நான் படிப்பிப்பது நவீன சம்ஸ்கிருதம். இந்து வேதங்கள் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருப்பதால், சம்ஸ்கிருத மொழி இந்து மதத்திற்கு .. இந்துக்களுக்கு மட்டுமே சொந்தம் என்று சொல்ல முடியாது. நான் சம்ஸ்கிருதம் படித்த முஸ்லீம் என்று என்னைப் பிரித்து வைத்துப் பார்த்ததில்லை. அப்படிப் பார்த்திருந்தால் எனக்கு பாட்னா பல்கலைக்கழகத்தில் தங்கப்பதக்கம் வழங்கியிருக்க மாட்டார்கள்.
""நான் சம்ஸ்கிருதத்தை கற்கவில்லை என்றால் "வாசுதேவ குடும்பகம்' (உலகம் ஒரு குடும்பம்) என்பதை சரிவர புரிந்து கொண்டிருக்க முடியாது. ரிக் வேதத்தின் காயத்ரி மந்திரம், குரானின் "அல் ஃபாத்திஹா' சுலோகத்தை ஒப்பிட்டு ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றேன். மதமோ, இனமோ, ஜாதியோ ஒரு மொழியைச் சொந்தம் கொண்டாட முடியாது. இங்கு காஷ்மீர் பல்கலைக்
கழகத்தில் சம்ஸ்கிருதத்தில் பல புதிய பிரிவுகளையும். துவங்கியுள்ளேன்'' என்கிறார் மிராஜ் அகமத் கான்
""இந்தியாவில் வாழ்வதால் இந்து நாகரிகம் - இந்து மதத்தைப் பற்றி அறிந்து கொள்ள, இந்து வேதங்கள் எழுதப்பட்டிருக்கும் சம்ஸ்கிருத மொழியை பல இஸ்லாமியர்கள் படிக்கிறார்கள். அலிகார் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதம் படிக்கும் மாணவர்களில் பாதி மாணவர்கள் இஸ்லாமிய மாணவர்கள்...என்னிடம் சம்ஸ்கிருதம் படித்த முஸ்லீம் மாணவர்கள் இந்தியாவின் பல பல்கலைக்கழகங்களில் சம்ஸ்கிருதம் கற்பிக்கிறார்கள்'' என்று சொன்ன அலிகார் பல்கலைக்கழகத்தின் சம்ஸ்கிருதத் துறையின் முன்னாள் தலைமைப் பேராசிரியர் முனைவர் காலித் பின் யூசுப் இப்போது நம்மிடையே இல்லை .
""அலிகார் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதத்துறை 1875-இல் தொடங்கப்பட்டது. இந்திய ஆட்சி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமானால், சம்ஸ்கிருத பாடத்தை விருப்பப் பாடமாக எடுக்கலாம் என்று பல மாணவர்கள் சம்ஸ்கிருதத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு வேளை இந்திய ஆட்சித் தேர்வில் வெற்றி பெறவில்லை என்றால், கல்லூரிகளில் அல்லது பள்ளிகளில் சம்ஸ்கிருத ஆசிரியராகலாம். அந்த அளவுக்கு சம்ஸ்கிருதம் படித்தால் வேலை வாய்ப்பு இருக்கிறது...'' என்கிறார் அலிகார் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத் துறையின் இப்போதைய தலைமைப் பேராசிரியரான முகமத் ஷெரீப். இவர் அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் முதுநிலை முனைவர் பட்டம் பெற்றவர்.
""சமஸ்கிருத பண்டிதரான, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஷங்கர் தயாள் ஷர்மா எனது சம்ஸ்கிருதப் புலமையைக் கண்டு என்னை "சாஸ்திரி' என்று அழைத்தார். அதிலிருந்து எனது பெயருடன் "சாஸ்திரி' பட்டம் ஒட்டிக் கொண்டது. வேதங்கள், உபநிஷத்துக்கள், பகவத் கீதை மற்றும் குரான் நபிகளாரின் போதனைகளில் உள்ள ஒற்றுமைகளை நான் ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். காலையில் கீதையை வாசிக்கிறேன். இரவு குரானை இசைக்கிறேன்'' என்று சொல்பவர் முகமத் ஹனிஃப் கான் சாஸ்திரி.
-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT