தினமணி கொண்டாட்டம்

ரத்தத்தின் ரத்தமே... - 44

டாக்டர் எஸ். அமுதகுமார்

மெக்ஸிகோ நாட்டின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த ராணுவ ஜெனரல் லோபஸ் டி சேன்டா ஆன்னா 1838- ஆம் ஆண்டில் பிரெஞ்சு நாட்டுடன் நடந்த போரில் தனது காலை இழந்தார். துண்டிக்கப்பட்ட அவரது காலுக்கு முழு ராணுவ மரியாதையுடன் மிகப்பெரிய இறுதிச் சடங்கு நடத்தப்பட்டதாம். காதலுக்கு மரியாதை என்று சொல்வதைப் போல இதை கால்களுக்கு மரியாதை என்று சொல்லலாம்.

அவன் என்னை காலால் உதைத்துவிட்டான்; இவன் என்னை காலால் மிதித்துவிட்டான் என்று கால்களை உடல் உறுப்புகளிலேயே ஒரு மரியாதை இல்லாத உறுப்பாகவும், எதற்கும் உதவாத ஒரு உறுப்பாகவும் நினைத்துக் கொண்டு பல பேர் ஏளனமாகப் பேசுவதுண்டு. கண்ணிருந்தும் குருடனாய் காதிருந்தும் செவிடனாய் இருந்து என்ன பயன் என்று சொல்வார்களே அதுபோல கால்கள் இல்லாமல் கால்கள் இருந்தும் ஆரோக்கியமாக இல்லாமல் ஒரு பயனும் இல்லை. ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு உறுதியான வலுவான ஸ்ட்ராங்கான கால்களும் கால் தசைகளும் மிகமிக முக்கியம்.

ஒருவருடைய வாழ்க்கைப் பயணத்தில் சுமார் 70 சதவீத அன்றாட செயல்பாடுகள் அவருடைய இரண்டு கால்களினால் தான் நடைபெறுகிறது. குதிரையின் கால் குளம்புகள் ஸ்ட்ராங்காக இல்லை என்றால் அந்தக் குதிரைக்கு கால்கள் இல்லை என்று அர்த்தமாம். குதிரையின் கால்கள் ஸ்ட்ராங்காக இல்லை என்றால் குதிரையே இல்லை என்று அர்த்தமாம். குதிரைகள் உலகத்தில் பேசப்படும் பழமொழி இது. ஏறத்தாழ மனிதனின் கால்களும் அப்படித்தான். மனிதனுடைய இரண்டு கால்களும் மனித உடலுக்கு இரண்டு தூண்கள் போன்றதாகும்.

மிகப்பெரிய கால் தசைகள் இயங்க இயங்க நமது உடலில் "டெஸ்டோஸ்டீரோன்' என்னும் ஹார்மோனும் உடல் வளர்ச்சிக்கு உதவும் ஹார்மோனும் அதிக அளவில் உற்பத்தி ஆகின்றன. இந்த இரண்டு ஹார்மோன்களும் உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு மிகவும் உபயோகமாக இருக்கின்றன. கால் தசைகளை நாம் உபயோகிக்க உபயோகிக்க நமது உடலில் சேரும் தேவையில்லாத கலோரி சக்திகள் சிதைந்து உடலைவிட்டு வெளியேறி
விடுகிறது. இதுவும் நமது உடலுக்கு நன்மையே.

வீட்டிலே வைத்திருக்கும் ட்ரெட்மில் மெஷினில் தினமும் நடந்தால் இருதயத்துக்கும் கால்களுக்கும் மிகவும் நல்லது என்று சொல்வதுண்டு. இது சரிதான். இருந்தாலும் கால்களுக்கென்றே கால்களிலுள்ள மிகப்பெரிய தசைகளுக்கென்றே பிரத்யேகமாக சில உடற்பயிற்சிகளை செய்தால்தான் கால்களுக்கு நல்ல சக்தியும், தெம்பும், வலுவும் கிடைக்கும். முழங்காலை மடித்து, பாதம் மட்டும் தரையில் படும்படி குந்தவைத்து உட்காருவதை சொல்வோமே அந்த மாதிரி குந்தி உட்கார்ந்து எழுந்து குந்தி உட்கார்ந்து எழுந்து தினமும் சுமார் 20 தடவை செய்தால் கால்களிலுள்ள அனைத்து தசைகளுக்கும் ஒரே நேரத்தில் நல்ல பயிற்சி கிடைக்கும். கால் தசைகளும் நன்கு உறுதியாகும். இறைவனை வணங்க கோயில்களில் போடும் தோப்புக்கரணம் கூட இம்மாதிரி பயிற்சிகளில் ஒன்றுதான். கடினமான கனமான பொருள்களை துணையின்றி தூக்க முயற்சிக்கும் கடும் செயல் இருக்கிறதே அதை செய்யும்போது கூட கால் தசைகள் அனைத்துக்கும் சரியான வலிமை கிடைக்கும்.

கார்கள் ரிப்பேர் பார்க்கும் கடை ஒன்றில் ஒரு காருக்கு அடியில் ஒரு மெக்கானிக் பையன் படுத்துக்கொண்டு காரின் அடிப்பாகத்தில் எதையோ ரிப்பேர் பண்ணிக் கொண்டிருப்பான். அவனுடைய உடல் முழுவதும் காருக்கு அடியில் இருக்கும். வெளியில் தெரியாது. ஆனால் அவனுடைய கால் பாதங்கள் மட்டும் எந்தவித அசைவும் இல்லாமல் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும். திடீரென்று இதைப் பார்த்த கார் மெக்கானிக் ஷாப் முதலாளி "இவன் காருக்கு கீழே படுத்து ரிப்பேர் பண்றானா? இல்ல சக்கரத்துக்கடியில மாட்டி செத்துட்டானா?' என்று தெரியவில்லையே. ஏலே எதையாவது அசைச்சிக்கிட்டே இருடா. சந்தேகமா இருக்குல்ல என்று சொல்வார். இது ஒரு திரைப்படத்தில் வரும் காட்சி.

இவர் சொன்னதைப் போன்று எங்கு இருந்தாலும் சரி எந்த சூழ்நிலையில் இருந்தாலும் சரி வாய்ப்பு கிடைக்கும்போது முடிந்தவரை கால்களை அசைத்துக் கொண்டே இருக்கவேண்டும். உயிரற்ற மரக்கால்கள் போல உயிருள்ள கால்களை ஆடாமல் அசையாமல் அப்படியே வைத்துக் கொண்டு இருக்கக் கூடாது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கு உங்கள் கால்களை அசைக்காமல் செயலற்ற நிலையில் வைத்திருந்தால் உங்கள் கால்களின் சக்தி சுமார் பத்து சதவீதம் குறைந்துவிடும். நிறைய நாட்கள் கால்களை உபயோகிக்காமல் வைத்திருந்தால் உபயோகிக்காத கால் பருமன் குறைந்து மெலிந்து போய் சூம்பிப் போய் கடைசியில் நிற்கக்கூட முடியாமல் தெம்பில்லாமல் போய்விடும்.

கால்களில் போதுமான தெம்பும் வலுவும் சக்தியும் இல்லாததால் வயதான காலத்தில் பாத்ரூமில் வழுக்கி விழுந்து விடுதல் நடக்கும்போது தடுமாறி விழுந்து விடுதல் இப்படி வீட்டுக்குள்ளேயே செய்யும் அன்றாட சின்னச்சின்ன விஷயங்களுக்குக்கூட கீழே விழுந்து கால் எலும்பு முறிவு இடுப்பு எலும்பு முறிவு போன்றவைகளினால் கஷ்டப்படுதல் ஏற்படுவதுண்டு. இது ஏதாவது ஒரு ஊரில் ஏதாவது ஒரு வீட்டில் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆகவே கால்களுக்குத் தொடர்ந்து பயிற்சி கொடுத்துக் கொண்டு வந்தால் வயதான காலத்தில் பிரச்னை இல்லாமல் வாழலாம்.

கால் விரலில் காயம் கால் விரலில் ஆறாத புண் இருப்பவர்கள் டாக்டரிடம் சிகிச்சை பெறச் சென்றால் டாக்டர் கேட்கும் முதல் கேள்வி - உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா? என்பதுதான். ஆமாம் என்று சொன்னால் அவ்வளவுதான். முதல்ல சர்க்கரை அளவை கண்ட்ரோலில் வையுங்க. இல்லைன்னா கால் புண் சீக்கிரத்துல ஆறாது. அப்புறம் கால் விரலையே எடுக்கவேண்டி வரும் என்பார். சர்க்கரை வியாதிக்காரர்கள் தங்களது கால்கள் பாதுகாப்பு விஷயத்தில் மிகமிக கவனமாக இருக்க வேண்டும். கால்களில் ஒரு சிறு காயம் ஏற்பட்டால் கூட உடனே அதை குணமாக்கும் முயற்சிகள் அனைத்தையும் எடுக்க வேண்டும்.

ரசாயனப் பொருட்கள் வாஷிங் பவுடர் போன்றவை கலந்த தண்ணீரில் அதிக நேரம் நிற்பவர்கள் கால் விரல் இடுக்குகளில் சேற்றுப்புண் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சம்மணம் போட்டு ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால் நாட்டுக்கே ராஜாவானாலும் சரி கால்கள் மரத்துப் போகத்தான் செய்யும். எழுந்து கால்களை உதறிவிட்டு சிறிது நேரம் கழித்து மெதுவாக நடக்க வேண்டும். வயலின் கலைஞர்கள் வாத்தியக் கலைஞர்கள் வாய்ப்பாட்டு கலைஞர்கள் முதலியோர் மணிக்கணக்கில் கால்களை மடித்து வைத்துக் கொண்டுதான் கச்சேரி பண்ணுவார்கள். அதனால் கால்களுக்கு கவனம் தேவை.

50 வயதைத் தாண்டியவர்கள் தினமும் தோப்புக்கரணம் போடுவதைப் பொறுத்து தினமும் இந்தியன் ஸ்டைல் கழிவறையை உபயோகப்படுத்துவதைப் பொறுத்து தினமும் அரைமணி நேரம் வாக்கிங் போவதைப் பொறுத்து தினமும் சிறிது நேரம் சிறிது தூரம் சைக்கிள் ஓட்டுவதைப் பொறுத்து - இதில் ஏதாவதொன்றை தினமும் உங்களால் எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஒழுங்காக செய்ய முடிகிறது என்றால் உங்களது கால் மூட்டுகள் கால்கள் ஆரோக்கியமாக பாதுகாப்பாக இருக்கிறது என்று அர்த்தம்.
சம்மணம் போட்டு தரையில் செளகரியமாக உட்கார்ந்து முடிந்தவரை மூன்று வேளை உணவையும் சாப்பிட்டுப் பழக வேண்டும். இது கால்களுக்கும் கால் மூட்டுகளுக்கும் இலவசமாக தினமும் கிடைக்கும் மிகச்சிறந்த பயிற்சியாகும். அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் தரையில் உட்கார்ந்து சாப்பிடமுடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது வீட்டில் தரையில் அமர்ந்து சாப்பிட முயற்சி செய்யுங்கள்.

இந்து- முஸ்லீம்- கிறித்துவ சகோதரர்கள் அவரவர் ஆலயங்களில் இறைவனை வணங்கும் விதவிதமான செயல்கள் அனைத்தும் கால்களுக்கும் கால் மூட்டு
களுக்கும் கிடைக்கும் அருமையான பயிற்சியே.

தூங்கும்போது இரண்டு கால்களையும் ஒரு தலையணை மேல் தூக்கி வைத்துக் கொண்டு படுத்தால் கால்களின் ரத்த ஓட்ட சுற்று நன்றாக இருக்கும். ஒரு நாள் முழுக்க நின்று கொண்டோ அல்லது உட்கார்ந்து கொண்டோ இருப்பவர்களின் கால்களுக்கு இறுக்கம் சுருக்கம் அமுக்கம் தேவை. இவர்களின் கால்களில் பிரச்னை ஏற்பட்டால் இறுக்கமான சாக்ûஸ பகலில் மட்டும் அணிந்து கொள்வது நல்லது. அஷ்டகோணம் என்று சொல்வார்களே அதுபோல சரியான நிலையில் ஒழுங்கான முறையில் உட்காராமல் நிற்காமல் படுக்காமல் இருந்தாலும்கூட கால்களிலிருந்து மேலே வரும் ரத்த ஓட்டம் தடைபடும். இதனால் ரத்த அழுத்தம் அதிகமாகிவிடக் கூட வாய்ப்புண்டு. ஏனெனில் இருதயத்துக்குப் போகும் ரத்த ஓட்டமும் குறையும். இருதயத்திலிருந்து வரும் ரத்த ஓட்டமும் குறையும். சரியான நிலையில் ஒழுங்காக உட்கார்ந்து பழகினால் ரத்த ஓட்டம் எப்பொழுதும் சீராக இருக்கும் ரத்த அழுத்தமும் கூடாது.

உங்கள் கால்களுக்கு போதுமான உடற்பயிற்சி தினமும் கிடைக்க ஒரே வழி தினமும் அரைமணி நேரம் நடப்பதுதான். இதன்மூலம் கால்களை நன்றாக வலுப்படுத்தலாம். இதன்மூலம் உங்கள் வயதாகும் காலத்தைத் தள்ளிப் போடலாம். இதனால் எப்பொழுதும் இளமையாக இருக்கலாம்.

வயதாகிவிட்டதே 60 வயதைத் தாண்டிவிட்டதே இந்த சமயத்தில் கால்களுக்கு உடற்பயிற்சி அது இது என்று ஏதாவது செய்து வேறு ஏதாவது பிரச்னையில் போய் விட்டுவிடக் கூடாதே என்று பயந்து கொண்டு அறுபது வயதைத் தாண்டிய பலபேர் வீட்டை விட்டு வெளியில் வருவதில்லை. இது தவறு.

அயர்லாந்திலுள்ள டப்ளின் நரம்பியல் துறைத் தலைவர் அயன் ராபர்ட்ஸன் ஒரு நிகழ்ச்சியில் "60 வயது ஒருவருக்கு ஆகிவிட்டால் அவருக்கு வயதாகிவிட்டது என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம் அல்லவா அந்த 60 வயது என்ற வரையறை இப்பொழுது 80 வயது வரை என்று தள்ளிப் போடப்பட்டுவிட்டது. இந்த தள்ளிவைப்பு பலபேரின் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆராய்ச்சி செய்து எடுத்த முடிவாம். எனவே இனிமேல் 60 வயது நிறைந்தவரை வயதானவர்கள் என்று சொல்லாதீர்கள். 80 வயது நிறைந்தவரைத்தான் வயதானவர்கள்' என்று சொல்ல வேண்டுமாம் என்று சொல்லியிருக்கிறார். மூத்த குடிமக்களுக்கு ஜாலிதான்.

சான்றோருக்கும் ஆன்றோருக்கும் நாம் மரியாதை செலுத்தும்போது அவர்களின் கால்களைத் தொட்டு வணங்கித்தான் நாம் மரியாதையைத் தெரிவிக்கிறோம்.

"நான் முத்தமிட விரும்பும் பாதங்கள் இந்த உலகத்திலேயே உன்னிடம் மட்டும்தான் இருக்கின்றன - என்று தனது காதலியைப் பார்த்து காதலன் சொல்வதாக மறைந்த எனது அன்பு நண்பர் எழுத்தாளர் சவீதா ஒரு தொடர்கதையில் எழுதியிருப்பார். இங்கே காதலுக்கும் மரியாதை கூடவே கால்களுக்கும் மரியாதை கிடைக்கிறது.

"தன் கையே தனக்குதவி' என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். "தன் கையும் தன் காலும்தான் தனக்குதவி' என்று இனிமேல் சொல்லுங்கள்.

பெற்ற தாய்-தந்தையரின் பாதங்கள் கட்டிய மனைவியின் பாதங்கள் பெற்றெடுத்த பிள்ளைகளின் பாதங்கள் கற்றுக் கொடுத்த ஆசிரியரின் பாதங்கள்-இவர்களின் பாதங்கள் உலகிலேயே புனிதமானது.

கால்களை பத்திரமாக பராமரித்து பாதுகாத்து வைத்துக்கொள்ளுங்கள். கால்கள் உங்கள் ஆயுள் முழுக்க உங்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கும்.

- தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT