தினமணி கொண்டாட்டம்

ரோஜா மலரே! - 103: நேரலையில் நடந்த தொடரின் படப்பிடிப்பு! -குமாரி சச்சு

22nd Aug 2021 06:00 AM | சலன்

ADVERTISEMENT


எனக்கு விருது பெற்றுத் தந்த தொடர் "மாண்புமிகு மாமியார்'. இது சன் டிவியில் ஒளிபரப்பானது. நடுத்தரக் குடும்பத்து கதை.

இதில் வரும் மாமியார் கதாபாத்திரம் பாசமும் , கண்டிப்பும் காட்டுவார். மகன் மனைவி பக்கம் சாய்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக மருமகளைக் கொஞ்சம் அதிகமாகவே திட்டும் மாமியாராக இருப்பார். ஆனால் பேரக் குழந்தைகள் மீது அதிகப் பாசம் உள்ளவராக இருப்பார். அனைத்து வேலைகளையும் அவரைக் கேட்டுத்தான் செய்ய வேண்டும் என்று விரும்புவார். அவரது கணவர் கூட, அவர் சொல்லைக் கேட்டுத்தான் நடக்க வேண்டும் என்று நினைப்பார். இந்தத் தொடர் வாரா வாரம் வந்ததால், அதிகம் பேசப்பட்டது. வீட்டில் நடக்கும் ஒரு நிகழ்வு போன்று, மக்கள் எல்லோரும் இந்தத் தொடரை விரும்பிப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஒரு கட்டத்தில் என் கணவராக நடிக்கும் கோவை அனுராதா என்னைக் கடும் சொற்களால் திட்டுவார். நான் மயக்கம் போட்டு விழுந்து விடுவேன். உடனே என்னைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு செல்வார்கள். அத்துடன் அந்த வாரம் நிறைவு பெற்று விடும்.

மக்களுக்கு நான் பிழைத்து கொண்டேனா என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்பார்கள். அதன் விளைவு, "மாமியார் கதாபாத்திரம் இறந்துவிடாமல் பார்த்து கொள்ளுங்கள்' என்று தொடரின் அலுவலகத்திற்கும், சன் டிவிக்கும் கடிதங்களும், தொலைபேசி அழைப்புகளும் வந்த வண்ணம் இருந்தன. நான் கோயிலுக்கோ, கடைக்கோ அல்லது கல்யாண விசேஷங்களில் கலந்து கொள்ளச் சென்றாலோ மக்கள் என்னிடம் நெருங்கி வந்து பாராட்டுதல்களைத் தெரிவிப்பார்கள்.

ADVERTISEMENT

நடுத்தரக் குடும்பத்துக் கதை என்பதாலும், அந்தக் காலத்தில், டிவி தொடர்களுக்கு அதிகம் செலவு செய்ய முடியாத காரணத்தாலும், இயக்குநர்-நடிகர் கோவை அனுராதா, நங்கநல்லூரில் இரு வீடுகளை வாடகை எடுத்துக் கொண்டார். மாமியார் கதாபாத்திரம் தங்குவதற்கு ஒரு வீடும், இந்தத் தொடரின் கதாநாயகி இருப்பதற்கு ஒரு வீடு என இந்த இரு வீடுகளுக்கு வாடகை கொடுத்துக் கொண்டே படப்பிடிப்பை சிக்கனமாக நடத்தி இந்தத் தொடரை முடித்தார். அந்தளவுக்கு கோவை அனுராதா மிகவும் சாமர்த்தியமானவர்.

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர், ஜெயா தொலைக்காட்சிக்கு ஒரு தொடர் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றார். அதை அவரின் மின்பிம்பங்கள் நிறுவனம் தயாரித்தது. அவரது மகன் மறைந்த கைலாசம், கீதா கைலாசம் இருவரும், பொறுப்பேற்றுத் தயாரித்தனர். அந்தத் தொடரின் பெயர் "வீட்டுக்கு வீடு லூட்டி'. கே. பி. சார் மேற்பார்வையில், "பாம்பே' சாணக்கியா இயக்கினார். இது மெகா தொடர். கே. பி. சாரின் படங்களில் நடித்திருக்கிறேன், ஆனால் அவருடைய டிவி தொடர்களில் நடித்ததில்லை. டிவி தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே அவர் அலுவலகத்திற்கு என்னை அழைத்தனர்.

"இது உனக்கு ரொம்பவே நல்ல பாத்திரம். இதில் நகைச்சுவையும் இருக்கும், அதே சமயம் பல நேரங்களில் உணர்ச்சிகரமாகப் பேசுவும் வேண்டும். நல்ல ஒரு தாயாகவும் இருக்க வேண்டும், மாமியார் உனக்கு நேர் எதிராக இருப்பார். ஆனால் நீ தான் அந்தக் குடும்பத்தையே அரவணைத்துக் கொண்டு போக வேண்டும். நீ நடித்தால் நன்றாக இருக்கும்', என்றார் பாலசந்தர்.

அவர் சொன்னால் மறுப்பு சொல்ல முடியுமா? ஒத்துக் கொண்டேன். அதற்குப் பிறகு தான் தெரிந்தது அந்தத் தொடரை, நாடகம் போல நேரலையில் படப்பிடிப்பு நடத்தினார்கள். இதில் டப்பிங் எல்லாம் கிடையாது. பெயருக்கு ஏற்றார் போன்று, வீட்டில் நடக்கும் விஷயங்கள், லூட்டிகள், படம் பிடித்துக்காட்டப்படும்.

முதல் நாள் படப்பிடிப்பில் "பூவிலங்கு' மோகன், பாம்பே ஞானம், உமா பத்மநாபன், "சிட்டிசன்' சிவகுமார் முதலியவர்கள் நடித்தார்கள். முதல் நாள் படப்பிடிப்புக்கு கே. பி. சாரும் வந்திருந்தார். அவர் காமிரா கோணத்தை எப்படி வைக்க வேண்டும் என்று சொல்லி விட்டு என்னையும் பூவிலங்கு மோகனையும் கூப்பிட்டு, "பாம்பே' சாணக்கியா பற்றி உங்களுக்குத் தெரியுமா?' என்றார். அதற்கு நான், சாணக்கியா பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறேன். அவரது நாடகங்களைப் பார்த்திருக்கிறேன்' என்று கே.பி. சாரிடம் சொன்னேன். அதற்கு அவர் "பாம்பே' சாணக்கியா நல்ல எழுத்தாளர். புதிதாக இருக்கிறாரே என்று நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். இந்தத் தொடருக்கு பாலக்காட்டுப் பிராமணப் பாஷை வேண்டும். அதை அவர் நன்றாக எழுதுவார். உங்கள் பங்குக்கு நீங்கள் நகைச்சுவையைப் சேர்த்து பேசிக்கொள்ளலாம்' என்று சொன்னார்.

அதற்கு நான், "மலையாள மொழியைப் பேசும் போது ராகம் போட்டு, இசையோடு பேசுவது போன்று இருக்கும். அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். கிட்டத்தட்ட பாடலைப் போன்று இருக்கும்'' என்று அவரிடம் சொன்னேன். "அதற்கு என்ன, சுச்சும்மா நீங்கள் விரும்பும் வண்ணம் பேசலாம்', என்றார். அவர் அப்பொழுது இரு படங்களில் பிஸியாக வேலை செய்து கொண்டு இருந்தார் என்றாலும், எங்கள் படப்பிடிப்பு நடக்கும் போதெல்லாம் வந்து விடுவார்.

இதனால் எல்லோரும் உற்சாகமாக நடித்தோம். கே. பி. சாரின் பாணியை விட்டு விலகாதவாறு, "வீட்டுக்கு வீடு லூட்டி' தொடரை சிறப்பாகச் செய்து கொடுத்தோம். நீதிபதி, மருத்துவர்கள், அரசியல்வாதிகள் எல்லோரும் இந்தத் தொடரைப் பார்த்து விட்டு என்ன சொன்னார்கள் தெரியுமா?

தொடரும்...

ADVERTISEMENT
ADVERTISEMENT