தினமணி கொண்டாட்டம்

அழியாத கலை வடிவம்!

22nd Aug 2021 06:00 AM | -பிஸ்மி பரிணாமன்

ADVERTISEMENT

 

வழக்கமான நாடகங்களிலிருந்து விலகி குழந்தைகளுக்காக நாடகங்களை அரங்கேற்றிவருபவர் தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியைச் சேர்ந்த விஜயகுமார்.

நாடகத்தின் இசை, வசனம் இயக்கத்தையும் ஒருங்கிணைத்துக் கையாளும் விஜயகுமார் நாடகங்களின் ஒரே பாத்திரமும் ஆவார். ஆம்..! இவரது நாடகங்களில் வேறு கலைஞர்கள் இல்லை. குழந்தைகளைக் கொண்டும் நாடகங்களை நடத்தியிருக்கும் விஜயகுமார் கரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் குழந்தைகளைக் கொண்டு நாடகங்களை அரங்கேற்றி வீட்டிற்குள் முடங்கிக் கிடைக்கும் சிறார்களின் மன இறுக்கத்தை, அழுத்தத்தைக் குறைத்து வருகிறார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் நாடகத்துறையின் தயாரிப்பான விஜயகுமார் தனது நாடக அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்:

""உலக நாடக தினமான மார்ச் 27 அன்று 2015-ஆம் ஆண்டில் "உதிரி நாடக நிலம்' என்ற அமைப்பை தொடங்கினேன். ஆக்கபூர்வமான விஷயங்களின் துவக்கப்புள்ளியாக மாற்று நாடகத்தின் அவசியத்தை உணர்த்த, முதல் நாடகமாக உதிரி என்ற நாடகத்தை ஒருவர் மட்டும் நடிக்கும் "úஸாலோ' நாடகமாக உருவாக்கி அதில் நானே நடித்தேன். இதுவரை 17 நாடகங்களை சொந்தமாக எழுதி மேடை ஏற்றி இருக்கிறேன். இந்த "உதிர்' நாடகம், தமிழகத்தைக் கடந்து இந்திய மாநிலங்கள், இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் நாடக ஆர்வலர்களின் கவனத்தைக் கவர்ந்தது. எனக்கும் முகவரி கிடைத்தது.

ADVERTISEMENT

படிக்கும் போது, புதுதில்லி, கோவா போன்ற நகரங்களில் நடைபெற்ற சர்வதேச நாடக விழாக்களில் முனைவர் எஸ்.முருகபூபதி, முனைவர் ஆர்.ராஜீ, பேராசிரியர் செ.இராமானுஜம் போன்ற நாடக ஜாம்பவான்கள் எழுதி இயக்கிய பல நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. அதனால் நவீன நாடகத்தின் கூறுகளை அனுபவபூர்வாமாகக் கற்றுக் கொண்டேன். மதுரை, காஞ்சிபுரம், புதுதில்லி, தஞ்சாவூர், ஹைதராபாத், கேரளா, மங்களுரு, புதுச்சேரி, திருவனந்தபுரம், திருச்சூர் போன்ற நகரங்களிலும் எனது நாடகங்கள் அரங்கேறியுள்ளன.

"தப்பாட்டம், ஒயிலாட்டம், கும்மி, கோலாட்டம், தேவராட்டம், சிலம்பாட்டம், பறையாட்டம் முதலான கலைகளில் முறையாக எனக்கு பயிற்சி தரப்பட்டிருப்பதால், நாடகங்களுக்கான பின்னணி இசையையும் நானே அமைக்கிறேன். அதுவும், மரபுசார்ந்த பழைய இசைக்கருவிகளைச் சேகரித்து பின்னணி இசைக்காகப் பயன்படுத்துகிறேன். திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், மதுரை தியாகராஜர் கல்லூரி, திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம், கோவை ஜி.ஆர்.டி கல்லூரி, இந்துஸ்தான் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களில் நாடகப் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றியுள்ளேன்.

எனது பங்களிப்பைக் கவனித்து வந்த இலங்கை பல்கலைக்கழகம் நாடகம் குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு 2017 -இல் அழைத்தது. கருத்தரங்கு மட்டக்களப்பு நகரத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். அனைவரும் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தார்கள். நானோ ஆய்வுக் கட்டுரை எதையும் வாசிக்கவில்லை. "உதிரி'யை எனது ஆய்வுக் கட்டுரையாக நாடகமாக நடித்துக் காண்பித்தேன். அதை பார்த்த அனைவரும் பாராட்டினார்கள்.

பங்களாதேஷ் ஜஹாங்கிர் பல்கலைக்கழக நாடகத்துறையின் பேராசிரியர் நாடகத்தின் கதை வசனத்தை என்னிடம் கேட்டு வாங்கினார். தொடர்ந்து நாடகம் குறித்து பயில வரும் மாணவர்களுக்கு இந்த நாடகத்தை பயிற்சி நாடகமாக மாணவர்களைக் கொண்டு நடத்தி வருகின்றனர். நாடகம் ஒன்று... ஆனால் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மாறிக் கொண்டிருப்பார்கள்.

உதிரி நாடக நிலத்தின் சார்பில் கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் ஆய்வாளர்கள் என பலதரப்பட்ட மாணவர்களுக்கு மரபு சார்ந்த நவீன நாடகப் பயிற்சிகளை அளித்து வந்த எனக்கு கரோனா கட்டாய விடுப்பு அளித்துள்ளது.

பஞ்சு மிட்டாய் குழந்தைகள் அமைப்பு கேட்டுக் கொண்டபடி, குழந்தைகளுக்கான நாடகம் குறித்து உரையாட, நாடகம் போட ஆன்லைன் வகுப்புகள் எடுத்தேன். ஆன்லைன் வகுப்புகள் என்றால் ஒரே நிலையில் மாணவர்கள் அசையாமல் இருப்பார்கள்.

வீட்டில் உள்ளவர்கள் வேண்டா வெறுப்பாக பக்கத்தில் அமர்ந்திருப்பார்கள்... அல்லது அலைபேசியில் மூழ்கியிருப்பார்கள். அதனால் எடுத்த எடுப்பிலேயே நாடகம் குறித்து பேசாமல் குழந்தைகளை ஆன்லைன் நாடக வகுப்பில் ஆர்வத்தை வளர்க்க அவர்களுடன் கலந்து உரையாடினேன். அவர்களுக்குப் பிடித்தது என்ன ... குதிக்க ஆசையா... பாட்டுப்பாட ஆசையா... பேச ஆசையா... என்றெல்லாம் கேட்டு அவர்களுடன் உரையாடும் குழந்தை ஆனேன்.

வீட்டுக்குள் போய் வீட்டில் இருக்கும் சொந்தங்களிடம் " செளக்கியமா..' என்று கேட்டு வரச் சொன்னேன். வெளியே எந்த பொருளும் வாங்காமல் வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு நாடகத்திற்காக தேவையான பொருள்களை செய்யச் சொன்னேன். நாடகத்தின் கதையை சிறார்களிடம் வாதித்து தீர்மானித்த குழந்தைகள் பேசும் சின்னச் சின்ன வசனங்களை சொல்லிக் கொடுத்தேன். மூன்று நாள் ஒத்திகை ஆன்லைனில் நடத்தி பிறகு "ரீங்காரம்' என்ற நாடகத்தை ஆன்லைனில் நடத்திக் காண்பித்தோம். தமிழகத்தின் பல பாகங்களிருந்தும் சிறார்கள் கலந்து கொண்டார்கள்.

எனது அனுபவத்தில், நாடகம் என்பது ஒரு கலை வடிவம். அது ஒரு போதும் அழியாது.. மொழி இருக்கும் வரை அந்த மொழியில் நாடகம் வாழும்''என்கிறார் விஜயகுமார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT