தினமணி கொண்டாட்டம்

பிரமிக்க வைக்கும் சென்னையின் வரலாறு

8th Aug 2021 06:00 AM | -வனராஜன்

ADVERTISEMENT

 

சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் வெங்டேஷ் ராமகிருஷ்ணன். "மெட்ராஸ் லோகல் ஹிஸ்டரி குரூப்' என்ற பெயரில் முகநூல் பக்கம் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் 25 ஆயிரம் பேர் உறுப்பினர்களாகஇருக்கிறார்கள். சென்னையின் பல்வேறுசரித்திரங்களை ஆய்வு செய்தவர். அவர் ஆய்வு செய்த விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்:

உங்களைப் பற்றி..?

என்னுடைய பூர்வீகம் தேவகோட்டை. ஆனால் பிறந்து வளர்ந்தது சென்னை மயிலாப்பூர். எனது பாட்டனார் தேவகோட்டை கடைசி ஜமீனாக இருந்தவர். மதராஸ் மாகானத்தில் மின்சாரம், சினிமா படப்பிடிப்பு, தமிழ், கர்நாடக இசை, கோயில் திருப்பணி , திருமுறைகளுக்கு ஆதரவு போன்ற பல விஷயங்களில் முன்னோடியாக இருந்தது தேவகோட்டை. சரித்திரம் வாய்ந்த குடும்பம். அதனால் எனக்கும் சரித்திரத்தின் மீதுஆர்வம் அதிகம். படித்தது விவசாயம். சோழர், பாண்டியர் சரித்திரத்தை தெரிந்து கொள்வதில் ஆசை உண்டு. பல தொழில்கள் செய்து விட்டு எழுத்தில் இறங்கிவிட்டேன். மூன்று தமிழ் நாவல்களை எழுதியுள்ளேன். பொன்னியின் செல்வன் தொடர்ச்சியாக "காவிரி மைந்தன்' என்ற நாவல். சிவகாமியின் சபதத்தின் தொடர்ச்சியாக "காஞ்சி தாரகை' என்ற பெயரிலும் நாவல்கள் எழுதினேன். "Gods kings and slaves' என்ற பெயரில் ஆங்கில நாவல் ஒன்றையும் எழுதியுள்ளேன்.பாண்டிய நாட்டின் மீது தில்லி சுல்தான்கள் படையெடுத்த கதை அது.

ADVERTISEMENT

உள்ளூர் சரித்திரத்தில் ஆர்வமும், ஆய்வும் செய்யும் எண்ணம் உருவானது எப்படி?

பொதுவாகசரித்திரபாடபுத்தகங்களில் தில்லி, தஞ்சாவூர், பற்றி அதிகம் இருக்கும். ஆனால் நம்முடைய சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, போன்ற இடங்களைப் பற்றி எதுவும் இருக்காது. பாடபுத்தகங்களில் தில்லி முகலாயர்கள் பற்றி ஏராளமான வரலாறு உண்டு.பானிபட் போர்கள் பற்றிஇருக்கும். ஆனால் சென்னையில் நடந்த அடையார் போரோ, திப்பு சுல்தான்ஆங்கிலேயரை தோற்கடித்த புல்லுர் போரோ இருக்காது.

உள்ளூர் வரலாற்றை பாதுகாக்க வேண்டியது தனி மனித கடமையாகும். அதனால் தான் முகநூல் பக்கம் ஒன்றை ஆரம்பித்தேன். இதில் குறுகிய காலத்தில் ஏராளமானோர் உறுப்பினர் ஆகி உள்ளனர். இது தானாக சேர்ந்த கூட்டம். ஆய்வு சம்பந்தப்பட்ட தகவலை நான் பகிரும் போது அதற்கு முந்தைய அல்லது அது தொடர்பான தகவல்களை பிறர் பகிர்வார்கள். இப்படியாக அந்த பதிவு என்பதை தகவல் மிகுந்த பதிவாகவும், வரலாற்றை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளும் பதிவாகவும் மாறிவிடுகிறது. இது பலருக்கு பயனுள்ளதாக அமைகிறது.

கூவம் பற்றி சொல்லுங்கள்?

சென்னையின் சரித்திரத்தை புரட்டும் போது கூவம் நதிக்கு முக்கிய இடமுண்டு. 72 கி.மீ நீளம் கொண்டது. கழிவு நீர் கலக்கும் நாற்றமான நதிக்கு பின்னே அழகான வரலாறு உள்ளது. ஒவ்வொரு கி.மீட்டராக இதனைப் பற்றி ஆராய்ந்த போது பல முக்கிய செய்திகள் கிடைத்தது. இதற்கு பாலி ஆறு என்று பெயர். புண்ணிய நதி. சிவ பெருமானின் வில் பூமியில் பட்டவுடன் உருவான நதி என்று அந்த கால கதைகள் உண்டு. இதன் கரையில் தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்கள் உள்ளன. பல போர்கள் இந்த நதியின் கரைகளில் நடந்துள்ளன. அதற்கு உதாரணம் தான் இந்தியர்கள், வெள்ளையர்களை வென்ற திப்பு சுல்தான் போர். இந்த ஆற்றின் கரையில் தான் நடந்தது. பிற்காலத்தில் திப்பு சுல்தானின் மகன்களை போரில் பிணை கைதிகளாக சிறைப்பிடித்து டவ்டன் ஹவுஸ் என்று அன்று அழைக்கபட்ட பெண்கள் கிறிஸ்துவக் கல்லூரியில் தான் வைத்திருந்தார்கள். பர்மா நாட்டு இளவரசி ஒருவர் கூவம் நதிக்கரையில் பிறந்தவர். மெட்ராஸ் என்ற நகரம் உருவாக கூவம் நதி முக்கிய காரணம்.தெற்கில் அது பாதுகாப்பாக இருந்ததால் இதனை கரையிலே செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டினார்கள்.

மெட்ராஸ் என்றதும் உங்களை பிரமிக்க வைத்த விஷயங்கள் என்ன?

ஆசியாவிலேயே முதல் ஏரோ பிளேன் கூவம் நதியின் நடுவே உள்ள தீவில் தான் பறக்க விடப்பட்டது. 1910 -ஆம் ஆண்டு இந்த சாதனையை செய்தவர் பேக்கரியில் பணியாற்றியவர். ரைட் சகோதாரர்கள் விமானத்தை கண்டுபிடித்த ஏழு ஆண்டுகளில் இவர் விமானத்தை பறக்க விட்டு சாதனை படைத்தார். இந்தியாவில் முதல் ரயில்வே டிராக், முதல் பேருந்து எல்லாமே சென்னையில் இருந்தது. மெட்ராûஸ பிரமாதமாக உருவாக்கியதில் வெள்ளைகாரர்களின் பங்கு மிகவும் அதிகம். மெட்ராஸில் பிழைப்பு தேடி வந்தவர்கள் இங்கு அதிகம் வசித்தனர். அதிகம் சாதித்தவர்களும் இவர்கள் தான்.

மெட்ராஸில் ஆளுநராக இருந்த "யேல்' பிரபு என்பவர் உருவாக்கியது தான் அமெரிக்காவில் முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான யேல் பல்கலைக்கழகம். அப்போது அமெரிக்காவில் பனி மூடிய ஏரிகள் அதிகம். அங்கிருந்த ஐஸ்கட்டிகளை வெட்டி கப்பல் மூலம் சென்னை கொண்டு வந்து விற்பனை செய்தவர்களும் உண்டு. அதுவரை தமிழர்களுக்கு ஐஸ் என்றால் தெரியாது. அந்த பகுதி தான் மெரினா கடற்கரை அருகே அமைந்துள்ள ஐஸ்அவுஸ் ஆனது. குளிர் சாதன பெட்டி கண்டுபிடிக்கப்பட்டவுடன் ஓராண்டுகுள் ஐஸ் விற்பனை செய்யும் தொழில் திவாலானது.

மெரினா கடற்கரையின் தோற்றம் பற்றி?

பக்கிங்காம் கால்வாய் அடையாறு ஆற்றிலிருந்து கூவம் ஆறு வரை மனிதனால் உருவாக்கப்பட்டது. மயிலாப்பூர், திருவல்லிக்கேணி இடையே கால்வாய் ஓட ஆரம்பித்தது. படகில் மக்கள் ஏராளமானோர் வந்தார்கள். இந்து ஹை ஸ்கூல் உருவானது. கர்நாடக இசையின் முதல் சபாவான பார்த்தசாரதி சபாஆரம்பிக்கப்பட்டது.

வெளியூரில் இருந்த வந்தவர்கள் தங்கு வதற்கு கஷ்டப்பட்டார்கள். ஹாஸ்டல் தகராறு ஏற்பட்டது. உயர்ஜாதி வகுப்பினர் தங்குவதற்கு மட்டும் இடம் ஒதுக்குவதா, என்ற போட்டி உருவானது. அப்போது தான் நடேசன் என்பவரால் உயர் ஜாதியினர் அல்லாதவர்கள் தங்குவதற்கு விடுதிகள் ஆரம்பிக்கப்பட்டது. இவற்றிலிருந்து தான் ஜஸ்டீஸ் பார்ட்டிதோன்றியது. அதுவே பின்னாளில் திராவிடர் கழகம் ஆனது. தமிழகத்தின் சரித்திரத்தை மாற்றிய பெருமை மெட்ராஸ் கால்வாய்களுக்கு உண்டு.

மெரினா பீச் என்பதே சென்னையில் ஆரம்பத்தில் கிடையாது. 10 அடிக்கு மட்டுமே மண் உண்டு. அக்காலங்களில் சென்னையில் துறைமுகம் கிடையாது. வர்த்தகம் எப்படி நடக்கும்? ஒரு காலத்தில் கிழக்கு இந்திய கம்பெனி யானைகளை கூட பர்மாவிலிருந்தும், தாய்லாந்திலிருந்தும் இறக்குமதி செய்வார்கள். துறைமுகம் இல்லை என்பதால் கரைக்கு இரண்டு கி.மீ தூரத்தில் யானைகளை தண்ணீரில் தள்ளிவிட்டு விடுவார்கள். யானைகள் தண்ணீரில் நீந்தி கரை சேர்ந்தால் விற்பனை செய்வார்கள். இப்படி பல யானைகள் நீந்த முடியாமல் இறந்துவிடுமாம் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT