தினமணி கொண்டாட்டம்

தாழ்வு மனப்பான்மை இருக்கக்கூடாது!

DIN

""ஒரு ஹீரோயினை நல்ல நடிகையாக பார்க்கிற இயக்குநர்கள் மட்டும்தான் என்னைத் தேர்ந்தெடுப்பார்கள்.

சில இயக்குநர்கள் ஒரு கிராமத்துக் கதாபாத்திரத்துக்கு சிவப்பாக இருக்கிற ஹீரோயினைத் தேர்வு செய்து விடுவார்கள். அது அவர்களுக்கு செட்டாகவே ஆகாது. சில சமயங்களில் வெளிநாட்டு ஹீரோயின்களைக்கூட தேர்ந்தெடுப்பார்கள். காரணம், நம் மனசுல வெள்ளை நிறம்தான் அழகு என்று பதிந்துவிட்டது. ஒரு கதாபாத்திரத்தின் சாயலை புரிந்துக் கொள்ள முடியாத இயக்குநர்கள் யாரும் என்னை அணுகவே மாட்டார்கள்.'' ஐஸ்வர்யா ராஜேஷ் சொல்கிற இந்த வார்த்தைகள்தான் அவரின் முழு பலம். ஒரு சினிமாவை முழுமையாக தாங்கி செல்கிற அளவுக்கு உயர்ந்திருப்பது அவரின் அசாத்திய உழைப்பு.

மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன் வரை.... எல்லா இயக்குநர்களின் கதைகளிலும் செட் ஆகுறீங்க....

என்னை இப்படி பார்ப்பதே பெரிய விஷயம். அதற்காக எல்லோருக்கும் நன்றிகள். மணி சார் படம் நடிக்கும் போது ஜோதிகா மேடம், சிம்பு, அருண் விஜய், அரவிந்த் சாமி சார் எல்லோருமே பெரிய நடிகர்கள். எல்லோருக்கும் அனுபவங்கள் பெரிசு. அந்த இடத்தில் மணி சார் என்னையும் யோசித்தார் பாருங்க, அதுவே என் நடிப்புக்கு கிடைத்த பலம்.

"பண்ணையாரும் பத்மினியும்', "ரம்மி', "தர்மதுரை' படங்களில சும்மா வந்து போகிற ஹீரோயின்தான். இருந்தாலும் அவரோடு நடிப்பது ஒரு பேரனுபவம்.

இப்போது ஓடிடி தளத்தில் வந்திருக்கிற "திட்டம் இரண்டு' படம் கூட புதுமுக இயக்குநர்தான். கதைக்காக சின்ன லைன் பிடிக்கும் போது கூட என்னை அந்த இடத்தில் வைத்து இயக்குநர்கள் பார்ப்பது எனக்கு பெருமைதான். அது தொடர வேண்டும்.

பெரிய இயக்குநர்களோடு வேலை பார்க்கிற அனுபவம் எப்படி....

"காக்கா முட்டை', "தர்மதுரை' படங்களில் நன்றாக நடித்ததால்தான் பெரிய பெரிய இயக்குநர்களின் படங்களில் வேலை பார்ப்பதற்கான வாய்ப்புகள் வந்துக் கொண்டே இருக்கின்றன. ஏனோ தானோ என்று படங்கள் எடுக்கிற இயக்குநர்கள் என்னைத் தேர்ந்தெடுக்கமாட்டார்கள். ஒரு கதாபாத்திரத்தின் சாயலை புரிந்துக் கொள்ள முடியாத இயக்குநர்கள் யாரும் என்னை அணுகவே மாட்டார்கள். ஏனென்றால், நான் ஒரு பாட்டுக்கு வந்து ஆடுகிற, சில காட்சிகளுக்கு மட்டும் க்யூட்டா நடிக்கிறது மாதிரியான கதாபாத்திரங்களுக்கு பொருந்தி வரவே மாட்டேன். அந்தக் கதாபாத்திரங்களை நான் தேர்வு செய்யவும் மாட்டேன். எனக்கு தெரிந்ததைத்தான் செய்வேன். அதுவே எனக்கு பலமாக இருந்தால், அதைத்தான் தொடர வேண்டும்.

"கனா' படத்தில் கதாபாத்திரம் பொருந்தி வந்ததா....

"கனா' படத்தில் ஒரு கிரிக்கெட்டரைதான் நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தார்கள்.

ஆனால், கிரிக்கெட் வீரர்களுக்கு மேட்ச் விளையாடுவதுதான் தொழில். நடிப்பது அவர்களுடைய வேலை இல்லை. ரொம்ப நாளாக ஹீரோயின் தேடி, கடைசியில் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள்.

இதில் ஒப்பந்தமானதும் வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. நடிக்கவும் முடியாது. ஏனென்றால் இதில் நான் ஒரு பவுலர். பேட்ஸ்மேனாக இருந்தாக்கூட பயிற்சிகள் எளிதாக இருந்திருக்கும். அதனால் காலையில் இரண்டு மணி நேரம், மாலை இரண்டு மணிநேரம் என்று பவுலிங் ஸ்டைல் கற்றுக் கொள்ள எனக்கு 65 நாள்கள் பயிற்சிகள் கொடுத்தார்கள். இதற்கிடையில் படப்பிடிப்பும் இருக்கும். அந்தச் சமயத்தில்தான் நடுவில் 20 நாள்கள் மட்டும் மணி சார் படத்தின் படப்பிடிப்புக்கு போய் வந்தேன்.

இதற்கு முன் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து படங்கள் எடுக்கப்பட்டது இல்லை. யாருமே தொடாத ஒரு சப்ஜெக்டை நாம் எடுத்து செய்திருக்கிறோம் என்று நினைக்கும் போது, பெருமையாக இருந்தது. இப்போது வந்திருக்கிற "திட்டம் இரண்டு' படத்திலும் அந்த பயிற்சிகள் இருந்தது. ஒரு பெண் போலீஸ் எப்படியிருப்பார். அவர்களுக்குள் இருக்கிற பெண்மை வழக்கமானதா என்பது போல் கதை இருக்கும். பார்த்து விட்டு சொல்லுங்கள்.

எனக்கு 10 வயசு இருக்கும்போதே என் அப்பா இறந்து விட்டார். நான் நடிச்ச படங்களில் கூட அப்பா சென்டிமென்ட் அதிகமாக இருந்ததில்லை. "கனா'வில் சத்யராஜ் சார் எனக்கு அப்பாவாக நடித்தார். அவர்கூட ரொம்பவே ஒட்டிக் கொண்டேன். என் அப்பா இருந்திருந்தா இப்படித்தான் இருந்திருப்பார் என நினைத்தேன். அந்த அளவுக்கு கதையும், அவரும் என்னை நெகிழ வைத்து விட்டார்கள்.

ஒன்றுக்கு மேற்பட்ட ஹீரோயின்கள் உங்கள் படத்தில் இருந்தாலும் அதைப் பற்றி நீங்க கவலைப்படுவது இல்லையே...

அச்சோ... நாம் சின்ன ரோலில் நடிக்கிறோம் என்கிற மனப்போக்கு இருக்கக் கூடாது. கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் திறம்பட நடித்து காட்ட வேண்டும். இதை நாம் புரிந்துக் கொண்டால் எத்தனை ஹீரோயின்கள் இருந்தாலும் சமாளித்து விடலாம். தாழ்வு மனப்பான்மை இருக்கக் கூடாது. முன்னணி கதாபாத்திரங்களில் நாம் சரியாக நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் மனதில் நம்ம முகம் பதியாது. அதுவே சின்ன ரோல்ல திறம்பட நடித்தோம் என்றால் நல்ல பெயர் கிடைக்கும். அவ்வளவுதான்.

மற்ற மொழிப் படங்களில் நடிக்கிற அனுபவம்...

சினிமாவில் எனக்குத் தைரியத்தைக் கொடுத்ததே மற்ற மொழிப்படங்கள்தாம். இதுவரை இரண்டு மலையாளப் படங்கள், "டாடி' என்கிற ஒரு ஹிந்திப் படம் நடித்திருக்கிறேன். "டாடி' பட இயக்குநர் அஷிம் அஹுவாலியா படங்கள் மீது பொதுவாகவே நிறைய விமர்சனங்கள் வைக்கப்படும். அவர் படங்கள் ரசிகர்களைப் பல கேள்விகளுக்கு உள்ளாக்கும். கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அவரோட படங்கள் போய் வந்திருக்கிறது. "டாடி' படத்தையும் விருது விழாவுக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தில்தான் எடுத்தார்கள்.

தமிழகத்தில் உள்ள ஒருவரின் கதையில் நடிக்கிறதா இருந்தா, அதைப் பற்றி படித்து தெரிந்துக்கொண்டு , உள்வாங்கி நடிக்கலாம். அதுவே மகாராஷ்ட்ராவில் இருக்கிற ஒருவரின்கதையில் நடிக்கிற போது, நிறைய சிக்கல்கள் ஏற்பட்டு விட்டது. "டாடி'யில் நடித்தது நல்ல அனுபவத்தையும் தைரியத்தையும் கொடுத்திருக்கிறது. ஆனால், மலையாளப் படங்களும் கிட்டத்தட்ட தமிழ்ப் படங்கள் மாதிரிதான். என்னால் மலையாளம் புரிந்துக் கொள்ள முடியும். ஆனால், டப்பிங் பேசும் போது அந்தப் பாஷையை உச்சரிக்கிற விதம் எனக்குச் சரியாக வரவில்லை. என் குரல் அந்தக் கதாபாத்திரத்துக்கு செட்டாகவில்லை என்று சொன்னதால் டப்பிங் பேசவில்லை. மலையாளத்தில் நிவின் பாலி, துல்கர் சல்மான் இரண்டு பேர் கூடவேவும் நடித்திருக்கிறேன். எனக்கு நிறைய மலையாளப் பட வாய்ப்புகள் வருகின்றன.

அதில் எதைத் தேர்வு செய்வது என்று தெரியாமல் இருந்தேன். மற்றபடி, பிற மொழிப் படங்களிலும் நடிக்க முடியும் என்று எனக்கு நம்பிக்கை கொடுத்ததே இந்தப் படங்கள்தாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT