தினமணி கொண்டாட்டம்

ரோஜா மலரே! - 100: தொலைக்காட்சியில் காட்டப்பட்ட முதல் தொழில் நுட்பம் - குமாரி சச்சு

சலன்


எந்த எழுத்தாளரின் கதை என்று சொல்வதற்கு முன் நான் முதலில் சம்பவம் ஒன்றை சொல்லிவிடுகிறேன். ஒரு பெரிய தயாரிப்பாளரின் தயாரிப்பில் நடித்தது எனக்கு சந்தோஷமான அனுபவம். அதுவும் தொலைக்காட்சி தொடர் தான். கிருஷ்ணசாமி அúஸாசியேட்ஸ் என்று ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து, பல தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரித்து, இயக்கியவர் எஸ். கிருஷ்ணசுவாமி. இவர் தான் அந்தக் காலத்தில் "இண்டஸ் வேலி டூ இந்திராகாந்தி' என்ற ஆவணப்படத்தை இயக்கி, தயாரித்தவர். இவர் பிரபல திரைப்பட இயக்குநர் கே.சுப்ரமணியத்தின் மகன்.

கும்பகோணத்தைச் சேர்ந்த வழக்குரைஞரான, சுப்ரமணியம் 1936 இலிருந்து 1945 வரை பல தமிழ்த் திரைப்படங்களை இயக்கியவர். இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவான பல படங்களை இயக்கினார். இந்தப் படங்களில் பி.யு.சின்னப்பா உள்ளிட்ட நடிகர்களை நடிக்க செய்து, அந்தப் படங்களை இயக்கிவர். தமிழ்த் திரைப்பட முன்னோடிகளுள் ஒருவரும், இயக்குநரான ராஜாசாண்டோவிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார்.

அவருடன் இணைந்து "பேயும் பெண்ணும்' (1930), "அநாதைப்பெண்' (1930), "இராஜேஸ்வரி' (1931), "உஷாசுந்தரி' (1931) ஆகிய படங்களில் பணியாற்றினார். பின்னர் இராம அழகப்பா செட்டியாருடன் இணைந்து மீனாட்சி சினிட்டோன் என்ற திரைப்பட நிறுவனத்தை ஆரம்பித்து, "பவளக்கொடி' என்ற தனது முதலாவது திரைப்படத்தைத் தயாரித்தார். இத்திரைப் படத்திலேயே தியாகராஜ பாகவதர், எஸ்.டி.சுப்புலட்சுமி ஆகியோர் நடித்தனர்.

இயக்குநர் கே. சுப்ரமணியத்தின் இடைவிடாத முயற்சியின் பயனாய் 1939- ஆம் ஆண்டு ஏப்ரலில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை உருவாக்கபட்டது. அதன் முதல் தலைவராக எஸ். சத்தியமூர்த்தி இருந்தார். 1939 மே-20 இல் திரைக்கு வந்த "தியாக பூமி' என்ற திரைப்படத்தை பற்றி ஆசிரியர் கல்கி அன்றைய ஆனந்த விகடனில் என்ன சொன்னார் தெரியுமா? "இயக்குநர் சுப்ரமணியத்துக்கே முழுவதும் சேர வேண்டிய இந்த பெருமையைப் பகிர்ந்து கொள்ள எனக்கு இஷ்டமில்லை. "தியாக பூமி" கதையில் இரண்டு மூன்று இடங்களில், அப்போது தேசத்தில் நடந்து வந்த சுதந்திர இயக்கத்தைப் பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது. மகாத்மா காந்தி ஆத்ம சக்தியினால் நாடெங்கும் நடந்து வந்த அற்புதத்தை வெகு அழகாகவும், பொருத்தமாகவும் சித்திரித்திருக்கிறார். காந்தி மகான் தலையை அசைத்தார், தேசத்தில் பெரிய புரட்சி ஏற்பட்டது'', என்றார் கல்கி.

எழுத்தாளர் ஜெயகாந்தன் என்னை, ஒரு சிறுகதையில் நடிக்க அழைத்தார். அதன் பெயர் "ஊரறிந்த ரகசியம்'. ஒவ்வொரு வாரமும் வேறு வேறு பெயர்களில் அந்த தொடர் வரும். நான் நடித்த சிறுகதை "கறுப்பு ரோஜா'. இயக்குநர் - தயாரிப்பாளர் கிருஷ்ணசுவாமி எனக்கு இதன் கதையை சொல்லி விட்டு, "இந்த கதையில் வரும் சம்பவங்கள் எல்லாம் நடப்பது இங்கு அல்ல, பிரான்ஸ் நாட்டில்' என்றார். "அப்போ பிரான்ஸ் நாட்டிற்குப் போகப் போகிறோமா?', என்று கேட்டேன். "கூடிய சீக்கிரம் சொல்கிறேன்', என்றார் கிருஷ்ணசுவாமி.

ஆனால் சில மாதங்கள் சென்றன. படப்பிடிப்பும் ஆரம்பமானது. இந்த தொடர் சென்னை தூர்தர்ஷனில் தான் ஒளிப்பரானது. ஒளிப்பரப்பான அன்று எனக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்தன. அவர்கள் எல்லோரும் கேட்ட கேள்வி ஒன்று தான்!"எப்ப நீங்கள் பிரான்ஸ் நாட்டிற்கு போனீங்க? ஆனால் நான் பிரான்ஸ் போகவில்லை என்று சொல்லியே வாய் வலித்தது. இயக்குநர் கிருஷ்ணசுவாமி, அப்பொழுது வந்த தொழில்நுட்ப யுக்தியில், நாங்கள் போனது போல் காட்டி விட்டார். இது இந்திய தொலைக்காட்சி தொடரில் முதன் முறையாக காட்டப்பட்ட தொழில் நுட்பம் என்று சொன்னார்கள்.. நானும், அவரது மகள் கீதாவும் நடித்தோம்.

நான் ஹிந்தியில் நடித்த தொலைக்காட்சித் தொடர்களும் உண்டு. அதுவும் கிருஷ்ணசுவாமி அúஸாசியேடஸ் தயாரிப்பில் தான். அதுவும் தேவன் எழுதிய புகழ் பெற்ற நாவலான "துப்பறியும் சாம்பு' வின் கதையில் கதாநாயகனாக திகழ்ந்தவர் சாம்பு என்ற பாத்திரம். அந்த பாத்திரம் ஏதாவது ஒன்று செய்ய, அது நன்மையில் முடியும். அந்த சாம்பு பாத்திரத்தில், ஹிந்தி நகைச்சுவை நடிகர் பைன்டால் நடித்தார்.

என்னை அவருக்கு அறிமுகப்படுத்தும் போது, "சச்சு மிகவும் சிறந்த நடிகை. குழந்தை பருவத்தில் இருந்தே நடித்து வருகிறார். அதன் பிறகு கதாநாயகியாக நடித்து இருக்கிறார். நாகேஷ் - சச்சு ஜோடி தமிழ் திரையுலகத்தில் புகழ் பெற்ற ஜோடி. தொலைக்காட்சி தொடர்களில் பல்வேறு வித்தியாசமான வேடங்களில் சிறப்பாக நடிக்கிறார்', என்று பைன்டாலிடம் கூறினார் இயக்குநர் கிருஷ்ணசுவாமி. ஹிந்தியில் நானே தான் டப்பிங் பேசினேன். என் அசல் குரலை கேட்பதில் எனக்கு ஒரு சந்தோஷம் ஏற்பட்டது.

அது மட்டுமல்ல, அவர் தயாரித்த பல தொடர்களில் நடித்தேன். அதில் ஒன்று ஜெயகாந்தன் எழுதிய சிறுகதை "சுயரூபம்'. மேலும் பூர்ணம் விஸ்வநாதனுடன் ஒரு சிறுகதையில் நடித்தேன். கல்கி நாவலான "தியாகபூமி' யை தொலைக்காட்சித் தொடராக எடுக்கவில்லை. அதை ஒரு தொலைக்காட்சி குறும்படமாக ஹிந்தியில் எடுத்தார்கள். அதில் ஒரு வேடத்தில் நடித்தேன்.

இந்த நாவல் கோடை, மழை, பனி, இளவேனில் என நான்கு பாகங்களாக வெளி வந்தது. தீண்டாமை, பெண்விடுதலை, மது விலக்கு, விடுதலைச் சிந்தனை போன்ற கருத்துகளால் இந்த நாவல் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. அப்படம் ஆங்கிலேயரால் தடை செய்யப்பட்டுப் பின் தடை விலக்கப்பட்டது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் எண்ணங்களையும் அவரவர் பார்வையிலிருந்து கல்கி சொல்லி இருப்பார். சமுதாயத்தில் காணப்படும் எதார்த்தமான பாத்திரங்களையே தமது நாவலில் கல்கி இடம் பெறச் செய்துள்ளார்.

இந்த நாவலானது திரைப்படத்துக்கென்றே கல்கியால் எழுதப்பட்டதாகும். நாவலை முழுமையாக எழுதி திரைப்பட இயக்குநர் கே.சுப்ரமணியதிடம் கொடுத்துவிட்டு, "தியாக பூமி' படப்பிடிப்பைத் துவங்கச் சொல்லிவிட்டு, 1939 ஜனவரி முதல் தேதியில் இருந்து ஆனந்த விகடன் வார இதழில் தொடர்கதையாகவும் எழுதத் துவங்கினார். தொடர் கதை வெளியான போது அதன் கதாபாத்திரங்களை ஒவியங்களுக்கு பதிலாக "தியாக பூமி' புகைப்படங்களையே பிரசுரித்தனர். ஏட்டில் தொடர்கதை முடிந்த அடுத்த வாரமே 1939 மே 20 அன்று திரைப்படம் திரைக்கு வந்தது. இந்தத் திரைப்படத்தில் டி. கே. பட்டம்மாள் மற்றும் வத்சலா பாடல்களைப் பாடியிருந்தனர். இப்படத்தின் 17 பாடல்கள் இருந்தன.

இந்த நாவலை கிருஷ்ணசுவாமி ஹிந்தியில் எடுத்த போது அதில் நடிக்க என்னை அழைத்தார். அதில் எனக்கு சித்தி கதாபாத்திரம் வழங்கப்பட்டது . என்னுடைய ஜோடி புகழ் பெற்ற ஹிந்தி நடிகர் பரத் பூஷன். நான் ஹிந்தி வசனம் பேசுவதைக் கேட்டு அவர், என்னை மிகவும் பாராட்டினர்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT