தினமணி கொண்டாட்டம்

ரோஜா மலரே! - 86: தேடி வந்த  எம்.ஜி.ஆர் பட வாய்ப்பு! - குமாரி சச்சு

25th Apr 2021 06:00 AM | சலன்

ADVERTISEMENT

 

நாகேஷ் விடாமல் வற்புறுத்திக் கேட்டார். நான் அழாத குறையாக, அவரிடம் உண்மையைக் கூறினேன். "நான் நடிக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. ஆனாலும் எனக்குக் கொடுக்க வேண்டிய சம்பளத்தைக் கொடுக்கவே இல்லை. எத்தனை தடவை கேட்டாலும், தருகிறேன் என்று சொல்கிறார்கள். எப்படி வாங்குவது என்று எனக்குத் தெரியவே இல்லை.

படத்தில் எனக்குக் கொடுக்கப்பட்ட வேடத்தை  விருப்பம் போலவே நடித்தும் கொடுத்து விட்டேன். அவர்களைப் பகைத்து கொள்ளவும் மனம் வரவில்லை. அப்படியே சண்டை போட்டுப் பணத்தை வாங்கினால், அடுத்தப் படத்திற்கு கூப்பிடுவார்களா? என்றும் தெரியவில்லை. நீங்கள் அந்த நிறுவனத்தில் இருந்து  எப்படி சம்பளம் வாங்குகிறீர்கள்?', என்று நாகேஷிடம் கேட்டேன். 

நாகேஷ் சொன்னார். " உங்களுக்கு சேர வேண்டிய பணத்தை உங்கள் படப்பிடிப்பு நிறைவடைவதற்குள் வாங்கி விடுங்கள்' என்றார்.  "நான் கண்டிப்புடன் கேட்டால், அவர்களின் அடுத்தப் படத்திற்கு என்னைக் கூப்பிட மாட்டார்களே' என்றேன். அதற்கு அவர் என்னிடம், "அங்கே தான் நீங்கள் தப்பு செய்கிறீர்கள். அடுத்தப் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டுமென்றால், சச்சு போன படத்திலே சம்பளத்தைக் கேட்டு வாங்கிக் கொண்டார், அதனால் பணம் பாக்கியில்லை என்று தைரியமாக இந்தப் படத்திற்குக் கூப்பிடுவார்கள். வேண்டும் என்றால் கூப்பிடப் போகிறார்கள், வேண்டாம் என்றால் கூப்பிடாமல் விட்டு விட போகிறார்கள்.அதனால் நீங்கள் உழைத்து விட்டு, உங்கள் காசை எதற்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள்' என்றார். நாகேஷ் சக கலைஞர்களுக்கு இப்படி ஆலோசனைகள் பல கூறுவது உண்டு.

ADVERTISEMENT

அந்தக் காலத்தில் ஒரு சில தயாரிப்பாளர்கள் இப்படிப் பணம் கொடுக்காமல் இருந்திருக்கிறார்கள். அந்தத் தயாரிப்பாளர்கள் படம் தயாரித்து  நஷ்டப்பட்டு விட்டோம் என்று சொல்லி இருந்தால், நானே விட்டுக் கொடுத்திருப்பேன். அந்தக் கால கட்டத்தில் என் சம்பாத்தியத்தில் தான் எங்கள் குடும்பமே நடத்த வேண்டியிருந்தது. நாகேஷ் சொன்னது 100 சதவிகிதம் உண்மை. ஒரு முறை நாம் விடப்பிடியாகக் கேட்டு வாங்கிக் கொண்டால், அடுத்தப் படத்திலும் நாம் இருப்போம். அவர்களும் நம்மைப் புரிந்து கொண்டு சரியாக நடந்து கொள்வார்கள். இதில் விட்டுக்  கொடுப்பது என்பது வேறு. கொடுக்க மறுப்பது என்பது வேறு. 

நானும் என் சம்பளத்தை விட்டுக் கொடுத்திருக்கேன். எப்பொழுது என்று கேட்டால், சினிமாவில் என்னுடன் உழைக்கும் சக தொழிலாளிகள் படம் எடுக்கும் போது, அவர்கள் வந்து கேட்டு கொண்டதன் பெயரில் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறேன். ஆடை அலங்கார நிபுணர், மேக்கப் தொழிலாளி, சிகை அலங்காரம் செய்பவர் போன்ற சிலர் என்னிடம் வந்து, "அம்மா, நாங்கள் படமெடுக்கிறோம். நீங்கள் எங்களுக்காக நடித்துக் கொடுக்க வேண்டும். உங்களுக்குக் கொடுக்க எங்களிடம் காசு இல்லை', என்று கூறினார்கள். அவர்கள் கேட்டுக் கொண்டதன் பெயரில், சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்து இருக்கிறேன். சக கலைஞர்கள் பயன்பெறுவார்கள் என்றால், உதவி செய்ய வேண்டும். நான் செய்திருக்கிறேன். 

நானும் நாகேஷும் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென்று எனக்குப் பல படங்களில் நடிக்க அழைப்பு வந்தது. அதன் பேரில் சோ, தேங்காய் ஸ்ரீநிவாசன் ஆகியோர் நடிக்கும் படங்களில், அவர்களுடன்  நடிக்க சென்று விட்டேன். அதனால், அந்த நாளில் நாகேஷுடன் ஜோடியாக நடிக்க முடியாமல் போனது. 

இயக்குநர் ஸ்ரீதர் படத்தில் தொடங்கிய எங்களது ஜோடி பொருத்தம், பல வருடங்களுக்குப் பிறகு, திரும்பவும் சேர்ந்தது ஸ்ரீதர் படத்தில் தான்.  ஒரு நாள் எங்கள் வீட்டிற்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. அது இயக்குநர் ஸ்ரீதர் அலுவலகத்தில் இருந்து என்று சொன்னார்கள். அவர்கள் ஒரு படமெடுப்பதாகவும் சொன்னார்கள்.  அதில் எம்.ஜி.ஆர். நடிக்கிறார் என்றும், நாகேஷ் இந்தப் படத்தில் என்னுடன் நடிக்கிறார் என்றும் தெரிவித்தனர். 

பல வருடங்களுக்கு முன்பு ஜோடி சேர்ந்த நாங்கள், திரும்பவும் நாகேஷுடன் சேர்ந்து நடிக்கக் கூப்பிடுகிறார்கள் என்ற போது,  மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லையே தவிர,  இந்த இடைப்பட்ட காலத்தில், அவரும் பல படங்களில், பல நடிகைகளுடன் நடித்துக் கொண்டு இருந்தார். அதே போல் நானும் பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துக் கொண்டு தான் இருந்தேன். 

எனக்கு என்ன சந்தோஷம் என்றால், பல வருடங்களுக்குப் பிறகு, அதே இயக்குநர் ஸ்ரீதர் சார் சூட்டிங். அதே பழகிய யூனிட். எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்தப் படத்தில் நாகேஷ் தையல்காரராக வருவார். நான் தையல்காரராக இருக்கும் நாகேஷிடம் என்னுடைய ஜாக்கெட்டை தைக்க கொடுப்பதற்கு வருவேன்.  படத்தில் நம்பியாருக்குத் தங்கையாக வருவேன். இந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகள் அதிகம் பேசப்பட்டன. இன்னும் சொல்லப்போனால் பத்திரிகைகளின் விமர்சனத்தில் கூட, எங்கள் இருவரது காமெடி காட்சிகளைப் பற்றி உயர்வாகக் கூறியிருந்தார்கள். காரணம், காட்சிகளும் சிறப்பாக இருந்ததுதான். 

நாங்கள் இருவரும் இடைவெளி விட்டு ஜோடி சேர்ந்ததால் மக்களும் எங்களைப் பார்க்க ஆவலாக இருந்தார்கள். நாங்களும் சிறப்பாக நடித்திருந்தோம். அந்தப் படத்தின் பெயர்  "உரிமைக்குரல்'.  நாங்களிருவரும் சினிமாவில் மட்டும் நடிக்கவில்லை. சின்னத்திரையிலும் நடித்திருக்கிறோம்.

(தொடரும்) 

Tags : தேடி வந்த  எம்.ஜி.ஆர் பட வாய்ப்பு!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT