தினமணி கொண்டாட்டம்

ராப் இசை கல்லூரி மாணவர் சாதனை!

25th Apr 2021 06:00 AM | -ராஜன்

ADVERTISEMENT


மகிழ்ச்சியின் உச்சத்திலும்  சரி, சோகத்தின் இறுக்கத்திலும் சரி மனிதர்களின் வாழ்வியலோடு வருவது இசை. வானும் மண்ணும் போல, இரவும் பகலும் போல இசை நம்மோடு இணைந்துவிட்ட ஒன்று. 

காலத்துக்கேற்ப இசையும் தன்னை புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. அப்படி, இந்த  உலகத்தில் ராப் இசை பிரபலமாகி வருகிறது. சமீபத்தில் ராப் சிங்கர் அறிவு மற்றும் பாடகி தீ குரல்களில்  வெளியான "எஞ்சாய் எஞ்சாமி' எனும் ஹிப்ஹாப் ராப் பாடல் உலகமெங்கும் வைரலாகி வருகிறது.  

உலகமெங்கும் பிரபலமாக கொண்டாடப்படும் ராப் இசை, தமிழில்  வளர்ந்திருப்பதற்கு இதுதான் சான்று. அறிவு போல எத்தனையோ இளம் ராப் கலைஞர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். 

அதே போன்று தனியிசைப் பாடல்களின் மூலம் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்  "இளம் ராப்பர்'  ஏகன்  எனும் அன்பு கணபதி. இந்தியாவின் வளர்ந்து வரும் இளம் ராப்பர்களை கண்டறியும்  நாடு தழுவிய போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.  ஒரு மாலை நேரத்தில்  அவரை சந்தித்தோம் : 

ADVERTISEMENT

ராப் இசைக்குள்  வந்தது எப்படி? 

கல்லூரியில் படிக்கும் போது  சினிமாவில் இயக்குநராக வேண்டுமென ஆசைப்பட்டேன். ராமாபுரம் எஸ்.ஆர்.எம்.கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் படித்துக் கொண்டிருக்கும் போது நண்பர்களுடன் இணைந்து  குறும்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது, அமெரிக்க ராப் சிங்கர் எமினெம் பாடல்களின் தீவிர ரசிகன் நான். அவரின் பாடல்களால் ஈர்க்கப்பட்டு ராப் இசையில் பயணிக்கத் துவங்கிவிட்டேன். 2018-இல் ராப் பாடத் துவங்கினேன்.

ராப் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுபவம் ? 

கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பதால் எல்லா இசைப் போட்டிகளுக்கும் சென்றுவிடுவேன். அப்படி, சும்மா கலந்துகொள்ளலாமென முடிவெடுத்து "ரெட்புல்லின் ஸ்பாட் லைட்'  நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். முதலில் சென்னை அளவில் நடந்த போட்டியில் 15 பேருக்கு மேல் கலந்துகொண்டனர். அதில் நான் தேர்வானேன். சென்னை போல இந்தியளவில் பெரும் நகரங்களிலும் பலர் தேர்வானார்கள். அதன்பிறகு, கரோனா வந்துவிட்டதால் ஜூம் மீட்டிங் வழியே அடுத்தச் சுற்றுக்கான போட்டி நடந்தது. அதிலும் சிறப்பாக ராப் பாடி தேர்வானேன். என்னுடன் எட்டு பேர் தேர்வானார்கள். அதன்பிறகு, மும்பையில் போட்டிகள் நடந்தன. இறுதிப் போட்டியில் டைட்டில் வின்னராக தேர்வானேன். 

ராப் இசை பாடுவதன் நோக்கம் ? 

கறுப்பின மக்கள் அமெரிக்காவில் தங்களுக்கான உரிமையைப் பெற ராப் இசையைப் பாடத் துவங்கினார்கள். சமூகத்தில் நடக்கும் பிரச்னைகள், சுயமரியாதை, உரிமைகளுக்காக உலகமெங்கும்  ராப் பாடுவது பிரபலமானது. நம்ம ஊரில் கானா மாதிரி வெளிநாடுகளில் ராப். 

"எஞ்சாய் எஞ்சாமி  பாடல் செம ஹிட்டாகியிருக்கே ! 

ராப் இசையில் எனக்கு மிகவும் பிடித்ததே கதை சொல்லும் ஸ்டைல் தான். மக்களின் வழியை மக்களுக்குப் புரியும் மொழியில் சொல்வதே. அப்படியான ஒன்றாக தான் "எஞ்சாய் எஞ்சாமி' பாடலைப் பார்க்கிறேன். நம்முடைய கலாசாரத்தை, சமூகப் பிரச்னையை உலக மேடைக்கு இந்தப் பாடல் மூலம் கொண்டு சென்றிருக்கிறார்கள். 

ராப் இசையைக் கேட்கும் பலரும் அந்தப் பாடலில் சொல்ல வந்திருக்கும் சமூகப் பிரச்னையைப் புரிந்துகொள்வதில்லை அல்லது புரிந்துகொள்ள விரும்பவில்லை.  பத்தோடு பதினொன்றாக ராப் பாடல் இருக்காது. அதற்குள் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும், நடப்பு அரசியல் இருக்கும். இசை ரசிகர்கள் புரிந்து அந்தப் பாடலை கேட்டால் மட்டுமே ராப் இசைக்கு கிடைத்த வெற்றியாக இருக்கும் . 

உங்களுடைய ராப் இசை எதைப் பற்றியதாக இருக்கும் ? 

தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்னைகளை, மக்களின் உரிமையை என்னுடைய இசையின் மூலமாக பேச வேண்டும் என விரும்புகிறேன். மக்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாகவும் என்னுடைய பாடல்கள் இருக்கும்.  மக்களின் கொண்டாட்டத்தை, வலியை, உணர்வுகளை உலக மேடைக்கு என்னுடைய ராப் இசையால் கொண்டு செல்வதே என்னுடைய நோக்கம் என்கிறார் ஏகன்.  

Tags : ராப் இசை கல்லூரி மாணவர் சாதனை!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT