தினமணி கொண்டாட்டம்

அறிஞர்களின் அற்புத ஒற்றுமை

27th Sep 2020 06:00 AM | -ப.மூர்த்தி, பெங்களூரு

ADVERTISEMENT


தமிழகத்திற்குத் தமிழ்நாடு எனும் பெயர் சூட்டி பெருமை படைத்த புகழ் வாய்ந்த அண்ணாவிற்கும் உலக வல்லரசு நாடாக இருந்து வரும் அமெரிக்காவின் சிறப்புக்குரிய அதிபரான ஆபிரகாம் லிங்கனுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உள்ளன.

ஆபிரகாம்லிங்கன் பிறந்தது 1809-ஆம் ஆண்டு. சரியாக நூறு ஆண்டுகளைக் கடந்து 1909-ஆம் ஆண்டில் பிறந்தவர் அண்ணா. ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் லிங்கன். எளிமையான குடும்பத்தில் பிறந்தவர் அண்ணா.

இரவு முழுவதும் புத்தகங்களைப் படித்து மகிழ்ந்தவர் லிங்கன். அண்ணாவும் விடிய விடிய புத்தகங்களைப் படித்தவர் என்பதால் கன்னிமாரா நூலகத்தையே கரைத்துக்குடித்தவர் என்று பாராட்டுப் பெற்றவர். ஆபிரகாம் லிங்கனுக்கு ஆடம்பரம் என்பது பிடிக்காது என்பதைப் போல் அண்ணாவுக்கும் ஆடம்பரம் என்பது தொலைதூரத் தொடர்பாக இருந்தது.

சினம் என்பதே இல்லாமல் வாழ்ந்தவர் லிங்கன். ஆத்திரம் அடைந்து அண்ணாவைப் பார்த்ததில்லை என்று அண்ணாவின் துணைவியார் ராணி அம்மையார் உள்ளிட்ட பலர் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT

மேலும் லிங்கன் நகைச்சுவையோடு பேசி எதிரிகளை வாய் அடைத்திட வைத்ததைப் போலவே, அண்ணாவும் நகைச்சுவையோடு பேசி எதிர்க்கட்சியினரையும் கவர்ந்திடுவதில் வல்லவராக இருந்தார். மேடைகளில் நகைச்சுவையாகப் பேசுவது மட்டுமல்ல அந்தப் பேச்சின் மூலம் எதிர்க்கட்சியினரை திக்கு முக்காட செய்தவர்.

உலக கருப்பின மக்களுக்காகப் பாடுபட்டவர் லிங்கன். தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சிக்காக உரத்தக்குரல் கொடுத்தவர் அண்ணா. இது மட்டுமல்ல இரண்டு தலைவர்களுமே மக்களாட்சிக்கு மதிப்பும் பெருமையும் சேர்த்தவர்கள்.

ஆபிரகாம்லிங்கன் அவரது அரசியல் வரலாற்றில் அமெரிக்க மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்து பின்னர் அமெரிக்க அதிபரானார்.

அண்ணாவும் முதன் முதலாக சென்னை மாநகராட்சியின் பெத்து நாயக்கன் பேட்டையில் போட்டியிட்டுத் தோல்வி கண்டவர். பின்னர் தமிழக முதல்வராக உயர்ந்தவர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT