தினமணி கொண்டாட்டம்

கல்லில் உருவான நாத‌ஸ்​வ​ர‌ம்!

27th Sep 2020 06:00 AM | -பனுஜா 

ADVERTISEMENT


பொது முடக்கக் காலத்தில் வீட்டில் பலர் முடங்கிக் கிடந்தாலும் சிலர் அதைப் பயனுள்ளதாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மதுரை திருநகரைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவர் கார்த்திக் ராஜா கருங்கல்லில் இசைக் கருவியான நாதஸ்வரத்தை வடிவாக்கம் செய்திருக்கிறார். "ஆச்சா' மரத்தால் செய்யப்படும் நாதஸ்வரம் எழுப்பும் ஒலியைவிட த் துல்லியமாக ஒலி எழுப்பும் விதமாக கார்த்திக்கின் கருங்கல் நாதஸ்வரம் அமைந்துள்ளது.

கருங்கல்லில் நாதஸ்வரம் எப்படி வடிவமைத்தார் என்று கார்த்திக் விளக்குகிறார்:

""அப்பா பாலமுருகன் மதுரை வேளச்சேரி இசைக் கல்லூரிக்கு அருகில் சிற்பக் கலைக் கூடம் நடத்தி வருகிறார். கோயிலில் வைத்து வணங்கப்படும் கடவுள் சிலைகள், கருங்கல்லில் கோயிலுக்காக வேலைப்பாடுகளைச் செய்து வருகிறார். அவர் மகாபலிபுரம் சிற்பக் கல்லூரியில் பயின்றவர். நான் திருமங்கலம் பி.கே.என் மேல்நிலைப்பள்ளியில் 12 - ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கிறேன். பள்ளி இல்லாத நாட்களில் அப்பாவுடன் சிற்பக் கலைக் கூடத்திற்கு வந்து சிற்ப வேலைகளை கற்றுக் கொண்டேன். கருங்கல்லில் மணி, குத்துவிளக்கு, வாள், கடவுள் சிலைகள் சொந்தமாகச் செய்வேன். கரோனா காலத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என்று கருங்கல்லில் ஒலி எழுப்பும் நாதஸ்வரம் செய்ய முடிவு செய்து சென்ற மாதம் ஆகஸ்ட்டில்
தொடங்கினேன்.


முதலில் பெரிய கருங்கல்லில் இரண்டு அடி நீளத்திற்கு நீண்ட துளையைக் கருவி கொண்டு உண்டாக்கினேன். பிறகு கருவியாலும், உளி கொண்டு கைகளால் கொத்தி நாதஸ்வரத்தை உருவாக்கினேன். நாதஸ்வரத்தின் மேல்பகுதியான உளவுப் பகுதிக்கும், கடைசிப் பகுதியான அனசுக்கும் நடுவில் பாட்டு இசைக்க உதவும் எட்டு துளைகளைப் பக்கவாட்டில் போட வேண்டும். அப்போது மட்டும் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும். செதுக்கி முடித்ததும் கல்லில் சொரசொரப்பை மாற்ற கருவி கொண்டு சாணை பிடித்து மென்மையாக்க வேண்டும், நாதஸ்வரத்தில் கடைசியில் ஒலி வெளியே வர விரிந்திருக்கும் வாய்ப்பகுதி (அனசு) வரை ஒரே கல்லில் செதுக்கி முடித்தேன். வாய் வைத்து ஊதும் சீவாளி தவிர மற்ற அனைத்துப் பகுதியும் ஒரே கல்லால் ஆனது. நாதஸ்வரத்தின் பல பாகங்களைப் பல கற்களில் செய்து ஒட்டி இணைக்கவில்லை.

ADVERTISEMENT

பாரம்பரிய நாதஸ்வரம் போல கல் நாதஸ்வரத்தையும் நீளமாகச் செய்ய வேண்டும் என்றுதான் முதலில் முடிவு செய்திருந்தேன். எடை அதிகமாக இருக்கும் என்பதாலும் கைகளால் தூக்கச் சிரமமப்பட வேண்டும் என்பதாலும், அதிக நேரம் கைகளால் தாங்கிப் பிடிக்கவும் முடியாது' என்பதாலும் கல் நாதஸ்வரத்தின் நீளத்தை ஒன்றரை அடியாகக் குறைத்தேன். கல் நாதஸ்வரத்தின் எடை 2 கிலோ. நாதஸ்வரம் வாசிக்கத் தெரிந்தவரை அழைத்து வாசிக்கச் செய்து குறைகளை நிவர்த்திச் செய்தேன். மர நாதஸ்வரத்தில் வரும் அதே இனிமையான ஒலி வரும் வரை கல் நாதஸ்வரத்தை சீர் செய்தேன். இப்போது பாரம்பரிய நாதஸ்வர ஒலி கல் நாதஸ்வரத்தில் பிறக்கிறது.

துôத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரியின் ஆதிநாதர் கோயிலிலும், கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலிலும், கல் நாதஸ்வரத்தை, முக்கியமான நாட்களில் மட்டும் இசைக்கலைஞர்கள் வாசிப்பார்களாம். ஆழ்வார் திருநகரி கோயிலில் கல் நாதஸ்வரத்தை, கடந்த ஆறேழு ஆண்டுகளாக யாரும் வாசிக்கவில்லை என்று சொல்கிறார்கள். அடுத்த முயற்சியாக ஒரே கல்லில் தவில் குடைந்து உருவாக்கப் போகிறேன். ஒலி எழுப்ப இரண்டு பக்கத்திலும் தோல் பொருத்தப்பட்டிருக்கும்'' என்கிறார் கார்த்திக் ராஜா.

ADVERTISEMENT
ADVERTISEMENT