தினமணி கொண்டாட்டம்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவர்

25th Oct 2020 06:00 AM | -விஷ்ணு

ADVERTISEMENT

 

பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீங்குகள் குறித்து மாணவர் ஆதித்யா என்பவர் வீடு தோறும் சென்று மாற்றுப்பொருள்களைப் பயன்படுத்தி நாம் சுற்றுச்சூழலை காக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள ஸ்ரீ ராம் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கிறார் ஆதித்யா.

படிக்கும் போது இந்த சமூகச் சிந்தனை வர காரணம் என்ன? ஆதித்யா விளக்குகிறார்:

""இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 9.46 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாவதாக ஆய்வு தெரிவிக்கிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் மோசமான விளைவுகளை நம் அன்றாட வாழ்க்கையில் கண்கூடாகப் பார்க்கமுடிகிறது.

ADVERTISEMENT

பிளாஸ்டிக் பயன்பாட்டைப் பொருத்தவரை மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. இதில் அக்கறை காட்டுவதுமில்லை. எனவே என்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்று நினைத்தேன். என் பெற்றோருக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கையில் நம்பிக்கை உண்டு. அது குறித்த சிந்தனைகளை என் மனதில் பதிய வைத்தே வளர்த்தார்கள்.

என் படிப்பையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளையும் சமன்படுத்துவது ஆரம்பத்தில் கடினமாக இருந்தது. பள்ளி நேரம் முடிந்த பிறகும் வார இறுதி நாள்களிலும் நான் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டேன். இந்த முயற்சி சற்று கடினமாகவே இருந்தது. இருப்பினும் என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்திக்கொண்டேன்.

ஒரு முறை பயன்படுத்தக்கூடிய ஸ்ட்ரா, பாட்டில்கள், ரப்பர்கள் போன்ற பேக்கேஜிங் பொருட்கள் அனைத்துமே பாலிப்ரொப்பிலீனால் ஆனவை. இவை மக்காது. மறுசுழற்சி செய்வதும் எளிதல்ல. இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படுகிறது. நிலத்தில் கழிவுகளாகக் கொட்டப்படும் பிளாஸ்டிக்கில் ஸ்ட்ரா அதிகம் காணப்படுகிறது. இந்தப் பிரச்னையின் தீவிரம் குறித்து அறிந்ததும் இதற்குத் தீர்வு காண விரும்பினேன். இது குறித்து எங்கள் பகுதி மக்களிடமும் விளக்கக்காட்சியை நடத்தினேன்.

பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்தவேண்டாம் என்று எடுத்துரைத்தேன். ஸ்டீல் அல்லது பேப்பர் கொண்டு தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்பு
களைப் பயன்படுத்தலாம் என விவரித்தேன். அதற்குத் தற்போது வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுபோல் பல இடங்களுக்குச் சென்று மக்களுக்கு விளக்கினால் பலன் கிடைக்கும் என்கிற நம்பிக்கை எனக்குப் பிறந்தது. பிளாஸ்டிக்கிற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களை விநியோகிக்கும் விற்பனையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை உணவகங்களுக்குப் பரிந்துரை செய்தேன்.

நான் மேற்கொண்ட முயற்சிகளால் இரண்டாண்டுகளில் 150-க்கும் அதிகமான நிறுவனங்கள் பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்ய முன் வந்தன. குறைந்த
பட்சம் ஐம்பதாயிரம் ஸ்ட்ராக்களின் பயன்பாட்டைத் தவிர்க்கவேண்டும் என்பதே என்னுடைய இலக்காக இருந்தது.

மக்களை அதிகளவில் சென்றடைவதற்கு சமூக ஊடகங்கள் மிகச்சிறந்த சாதனமாக இருந்தது.

ஆரோக்கியமான, பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக சுற்றுச்சூழல் பிரச்னைகளைக் கையாள்வதில் இளைஞர்கள் முன்வந்து பங்களிக்கவேண்டியது அவசியம். சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் இளைஞர்களின் பங்கு பெருமளவு இருக்க வேண்டும்'' என்கிறார் ஆதித்யா.

Tags : தினமணி கொண்டாட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT