தினமணி கொண்டாட்டம்

ரோஜா மலரே!: - 62: அடையாளம் தந்த கவியரசர் பாடல்! - குமாரி சச்சு

25th Oct 2020 06:00 AM | சலன்

ADVERTISEMENT


நான் உள்ளே நுழைந்தவுடனேயே அங்கு இருந்தது யார் தெரியுமா? கவியரசர் கண்ணதாசன், இசை இரட்டையர்களான எம்.எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி, இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர், ஏவி.எம். அதிபர்களான எம்.முருகன். எம்.குமரன், எம்.சரவணன் ஆகியோர் அமர்ந்து இருந்தார்கள்.  எல்லோரும் என்னைப் பார்த்தார்கள். கவியரசர் கண்ணதாசன் என்னைப் பார்த்து  "வாம்மா வா' என்றார். அன்று தான் நாங்கள் ஒகேனக்கல் போய் எடுக்கப் போகும் பாடலை உருவாக்கும் முயற்சியில் இருந்தனர்.  கண்ணதாசன், பாடல் வரிகளைக் கூட எழுதத் தொடங்கவில்லை. அதற்குள் நான் அவர் முன் போய் நின்றேன். என்னைப் பார்த்தவுடன் அவர் சொன்ன வரி என்ன தெரியுமா? "ரோஜா மலரே ராஜகுமாரி' என்ற முதல் வரியை சொன்னார். அவர் பாட்டு எழுதிக் கொண்டு இருந்தார்.  நான் எல்லோரையும் பார்த்து வணக்கத்தை வைத்து விட்டுக் கிளம்பினேன். இன்று எல்லோரும் சச்சுவைப் பற்றிக் குறிப்பிடும் போது  இந்தப் பாடலைக் கூறாமல் இருந்ததில்லை. அந்த அளவிற்கு என் உருவமும், பாடலின் வரிகளும் கலந்து விட்ட ஒன்று. 

எப்பொழுதுமே கதாநாயகன், கதாநாயகி என்றால் ஸ்பெஷல் தான். இன்று மட்டும் அல்ல அன்றும் அப்படித்தான். இந்த இருவருக்கும் தனியான கவனிப்பு அன்றும்  இருந்தது. கவனிப்பு என்றால் என்ன என்று இங்கு சொல்லி ஆக வேண்டும். அவர்களுக்குப் பிடித்த சாப்பாடு உண்டு. கேட்கும் போதெல்லாம் பழச்சாறு கொடுக்கப்படும். உயர்தர ஓட்டலில் தங்க வைப்பார்கள். தனியாகக் கார் இவர்களுக்கு என்று எந்நேரமும் இருக்கும். இன்று  ஒகேனக்கல் சுற்றுலாத்தலமாக மாறி விட்டது. ஆனால் அன்று அப்படி இல்லை. அன்று இருந்த ஒகேனக்கல் அவ்வளவாக முன்னேறவில்லை என்று சொல்லலாம். அங்குப் பெரிய ஹோட்டல் இல்லை. தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு 20 கி.மீ. தாண்டி ரூம் போட்டிருந்தார்கள். 

கதாநாயகன் சி.எல்.ஆனந்தனும், நானும் சுற்றுலா மாளிகையில் தங்கினோம். எங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறை நன்றாக, சுத்தமாக இருந்தது. எனக்கு அடுத்த அறையில் ஆனந்தன் இருந்தார். அவர் மிகவும் தமாஷ் பேர் வழி. பெரிய கட்டடம் இல்லை என்றாலும் எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. நானும் எனது தங்கையும் தான் சென்றிருந்தோம். தங்கை வரக் காரணம், பேச்சுத் துணைக்கு இருப்பார். மாலையில் எங்கும் போக முடியாது.  பூங்கா அல்லது பொழுது  போக்க இடம் ஒன்றும் இல்லை. நீர்வீழ்ச்சி மட்டும் தான் அங்குப் பிரதானமாக இருந்தது. படப்பிடிப்பு,  அதை விட்டால் தங்கும் இடத்திற்குத் தான் வர வேண்டும். ஒரு வாரம் இந்த நிலையிலே எங்கள் பொழுது போனது. நாங்கள் இருந்த சுற்றுலா மாளிகையில் மாலையில் பொழுது  போகாது.  நான், எனது தங்கை, பாட்டி, எனக்கு உதவி செய்ய ஒரு சிறுமி இவர்களோடு சென்று இருந்தேன். ஒரு நாள் இரவு எனக்குப் பயம் வரும் அளவில் ஒரு நிகழ்ச்சி நடந்தது.  

ஒரு நாள் சூட்டிங்  முடிந்ததும் அறைக்குத் திரும்பினோம். அன்று இரவு தான் அந்தச் சம்பவம் நடந்தது. நாங்கள் நால்வரும் தங்கிய அறையில் தொலைக்காட்சிப் பெட்டி கிடையாது. ஏ.சி. கிடையாது. அன்று மாலை நாங்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். இரவு உணவு 8 மணிக்கெல்லாம் முடித்து விட்டுப் படுத்துக் கொண்டோம். திடீரென்று மின்சாரம் தடைப்பட்டது. ஏ.சி. இல்லை என்பதால் ஜன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு படுத்துக் கொண்டோம். 

ADVERTISEMENT

அறைக்கு வெளியே இருந்த இருட்டான பகுதியிலிருந்து பயங்கரமான சத்தம் கேட்டது. நான் ஜன்னலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சற்று நேரத்தில்  ஒரு மண்டை ஓடு ஜன்னலில் தெரிந்தது. சிறிது நேரத்தில் அந்த மண்டை ஓடு நடனம் ஆடியது. நாங்கள்  பயந்த படியே போர்வையைப் போர்த்திக் கொண்டு தூங்கிவிட்டோம். காலையில் எழுந்து படப்பிடிப்பிற்குத் தயாராகிச் சென்றோம். அங்கு இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தர் இருக்கும் பொழுது ஆனந்தன் என்னிடம் வந்து, "நேற்று இரவு என்ன ஒரே சத்தமாக இருந்தது'” என்று கேட்டார். 

நான் விவரித்தேன். "திடீரென்று பயங்கர சத்தம் கேட்டது. மண்டை ஓடு நடனம் ஆடியது. என்னுடைய பெயரைச் சொல்லி "வா வா' என்று அழைத்தது. நான் இந்த அறையில் இருக்க மாட்டேன். வேறு அறை தங்குவதற்கு கொடுங்கள்', என்று கூறினேன். "பெயரைச் சொல்லி கூப்பிட்டதா' என்று ஆனந்தன் கேட்டார். அவரிடம் சொன்னதும் தான் எப்படி என் பெயரைச் சொல்லி பேய் கூப்பிடும் என்று எனக்கே அப்பொழுதுதான் தெரிந்தது. ஆனந்தனும் நானும் பேசிக் கொண்டிருந்த பொழுது இயக்குநர்  ஏ.சி. திருலோகசந்தர் புன்னகைத்தார். 

"சார் நான் பயத்துடன் நடந்ததைச் சொன்னால் நீங்கள் சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள்', என்று இயக்குரிடம் கேட்டேன். "நேற்றிரவு  வந்த பேய் இவர் தான்'என்று ஆனந்தனைக் காண்பித்தார். 

அன்று நான் மிகவும் பயந்த சுபாவம் . இருட்டி விட்டால் எங்குப் போக வேண்டும் என்றாலும் எனக்குத் துணை வேண்டும். இல்லை என்றால் நான் வெளியே அடியெடுத்து வைக்க மாட்டேன். வளர்ந்த பிறகு தான் இருட்டைப் பார்த்து பயம் கொள்ளும் தன்மை கொஞ்சம் விலகியது. இன்று நான் எந்த இருட்டையும் பார்த்து பயம் கொள்ள மாட்டேன்.

ஒரு சமயம் திரைக்கதை வசனகர்த்தா ஆரூர்தாஸ் எனக்குத் தமிழைக் கற்றுக் கொடுப்பார். வேறு ஒரு சமயம் சண்டைப் பயிற்சியாளர் எனக்குச் சண்டைப் பயிற்சி கொடுப்பார். நடனம் கற்றுக் கொடுப்பார்கள். நான் கூட நினைப்பதுண்டு நான் தமிழ் பெண் தானே ஏன் எனக்குத் தமிழைக் கற்றுக் கொடுக்கிறார்கள் என்று? ஆனால் தமிழில் பலவகை உண்டு. ஆமாம், சென்னை தமிழ், கொங்கு தமிழ், நெல்லை தமிழ், கோவை தமிழ் இப்படி உள்ளதால், படத்தில் எந்தத் தமிழைப் பேச வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்களோ, அந்தத் தமிழைப் பேச எனக்குப் பயிற்சி கொடுப்பர்கள். அந்த கால கட்டத்தில் தமிழ் உச்சரிப்பை மக்கள் சரியாக கவனிப்பார்கள். சரியாக இல்லை என்றால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

நான் எந்தத் தமிழை எந்தப் படத்தில் பேச வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்களோ, அதைக் கற்றுக் கொடுப்பார்கள். இப்படி எல்லாவற்றிக்கும் ஏவி.எம் ஸ்டுடியோவில் பயிற்சி கொடுத்ததால் நான் முழு கதாநாயகியாக மாறினேன். பின் வரும் காலகட்டத்தில் எந்தப் பாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாகச் செய்ய முடிந்தது. இங்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். அவர்கள் கற்றுக்கொடுத்தாலும் நானும் முழுமையாகக் கற்றுக் கொண்டேன். இந்த ஏவி.எம் என்ற பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றவள் நான் என்று கூறிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.  

கதாநாயகியாக நான் நடித்த ஏவி.எம் மின் இருபடங்களும் உண்மையாகவே என் வாழ்கையில் மறக்க முடியாத படங்கள். என்னுடன் நடித்த இரு நடிகர்களும் என்னை அனுசரித்துப் போன நடிகர்கள் தான். அந்த காலத்தில் எனக்கு வராத நடிப்பு ஒன்று உண்டு. அது காதல் காட்சிகள் தான். நான் முதல் காதல் காட்சியில் நடிக்கும் போது எனக்கு 15 வயது. அந்தக் காலகட்டத்தில் காதல் காட்சிகள் மரியாதையாக எடுக்கப்படும். தூரத்தில் நின்று தான் இந்தக் காதல் காட்சிகளைக் கூட எடுத்தார்கள். 

நான் முன்பே சொன்னது போல் ஏவி. எம்மில் இருந்தது இரண்டு ஆண்டுகள் தான். ஏவி.எம்மின் இருபடங்களிலும் நான் நடித்து முடித்தவுடன், சுதந்திரப்பறவை ஆகிவிட்டேன். வேறு படங்களை அவர்களும் எடுக்கவில்லை. ஆகையால் "வாய்ப்பு வரும் போது கண்டிப்பாக உங்களைக் கூப்பிடுகிறோம். நீங்கள் வெளிப்படங்களில் நடிக்க ஆரம்பிக்கலாம்' என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். 

இன்று உள்ளது போல் பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து மற்றவர்களுக்குச் சொல்வது போல், அந்தக் காலத்தில்  வசதி இல்லை. இன்னும் சொல்லப் போனால் இன்று இருப்பது போல் மக்கள் தொடர்பாளர் என்று ஒருவர் கூட இல்லை. நான் ஏவி.எம் ஒப்பந்தத்தில் இருந்து வெளியே வந்து விட்டேன் என்று எப்படிச் சொல்வது  என்று எனக்குத் தெரியாது. அன்று புகழ் பெற்ற நடிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி மட்டும் தான். நான் வெளியே வந்தவுடன் ஒரு செய்தி கேள்விப்பட்டேன். 

(தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT