தினமணி கொண்டாட்டம்

மாற்று திறனாளிகள் வாழ்வில் மாற்றம் 

25th Oct 2020 06:00 AM | -ஜெ

ADVERTISEMENT

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கு இலவசமாக சதுரங்கப் பயிற்சி அளித்து வருகிறார் சென்னை ஆவடியைச் சேர்ந்த இளைஞர் ராகவன் . 

எம்.இ., படித்து பொறியியல் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவர் தற்போது இந்தப் புது முயற்சியில் இறங்கியுள்ளார். எப்படி இந்த எண்ணம் வந்தது? ராகவனிடம் கேட்ட போது சொன்னார்:

""சிறுவயதில் இருந்தே எனக்கு ஞாபக சக்தி அதிகம். அதனை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பேன். கல்லூரியில் படிக்கும் போது 20 வயதில் சதுரங்கம் பயிற்சியில் ஈடுபட்டேன். தொடர்ந்து சில போட்டிகளில் பங்கேற்று வெற்றிப்பெற்றேன். விஸ்வநாதன் ஆனந்த் போன்று செஸ் சாம்பியன் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இதுவரை 150 மாநில மற்றும் தேசிய அளவிலான  போட்டிகளில் பங்கேற்றிருக்கிறேன். நான் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டு போட்டிகளில் கலந்து கொண்டேன். ஒரு கட்டத்தில் பணபலம் இல்லாததால் மேற்கொண்டு சதுரங்க போட்டிகளில் பங்கு பெற இயலவில்லை. ஆனால் இண்டர்நேஷனல் ரேட்டிங் பிளேயர் பட்டத்தை வென்றேன். 

2019-ஆம் ஆண்டு சதுரங்கப் போட்டியில் 200 பேட்டியாளர்களை பங்கு பெற செய்து, இரண்டாயிரம் ரவுண்டுகளை 75 நிமிடத்தில் நடத்தி முடித்ததன் காரணமாக யுனிகோ உலக சாதனை சான்றிதழ் கிடைத்தது. இந்த கரோனா பொது முடக்கக் காலத்தில் கல்லூரிகள் மூடப்பட்டதால் எனக்குப் பணியில்லை. ஆனால் அந்த நேரத்தை யாருக்காவது பயன்படும் படியாக செலவு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். வீட்டில் முடங்கியிருக்கும் மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்களின் வீடு தேடி சென்று அவர்களுக்கு இலவசமாகப் பயிற்சியளித்து வருகிறேன். இதுவரை 20 குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்துள்ளேன். இதில் அரக்கோணத்தைச் சேர்ந்த 7 வயது மாணவன் சக்திவேல் யுனிகோ உலகச் சாதனைகளை நிகழ்த்தியுள்ளான். 

ADVERTISEMENT

மாற்றுத்திறனாளி குழந்தைகளைப் பொருத்தவரை அவர்களுக்கு மூளைத்திறன் அதிகம். அவர்களால் கை, கால் அசைத்து செயல்பட முடியாதே தவிர மற்ற விஷயங்களைக் கற்றுக் கொண்டால் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். அதில் ஒன்று தான் சதுரங்கப் பயிற்சி.  அவர்களால் தங்களுடைய திறமைகளை சதுரங்கத்தில் நிரூபிக்க முடியும். இது போன்ற மூளைத்திறனை அதிகப்படுத்த பயிற்சிகளை அவர்கள் மேற்கொள்ளும் போது அவர்களுடைய தாழ்வு மனப்பான்மை குறையும், தன்னம்பிக்கை உருவாகும். வாழ்வில் நாமும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.


இருட்டில் இருப்பவர்களுக்கு வெளிச்சம் காட்டும் இந்த சிறு சேவை எனக்கு ஆத்ம திருப்தியளிக்கிறது'' என்கிறார் ராகவன். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT