தினமணி கொண்டாட்டம்

ரோஜா மலரே! - 61: நீர்வீழ்ச்சியில் பாடல் காட்சி! - குமாரி சச்சு

சலன்

"வீரத்திருமகன்'” படத்தில் உள்ள "ரோஜா மலரே' பாடல் படமாக்கபட்ட இடம் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி. தமிழ் நாட்டில் உள்ள தர்மபுரியில் இருந்து 46 கி.மீ தூரத்தில் உள்ளது..  இந்த இடத்தை  "இந்தியாவின் நயாக்ரா நீர்வீழ்ச்சி' என்று கூட  அழைப்பார்கள்.  ஆனால் பெரிய மலை இல்லை என்றாலும் பெரும் பாறைகள் நிறைந்து இருந்தன. அவை ஒன்றின் மீது ஒன்று நிறைய இருந்ததால் அது மலை போல் காணப்பட்டது. சில இடங்களில் சிறு சிறு குன்று போலும் இந்தப் பாறைகள் காணப்பட்டன. இவை பெரிய உயரத்தில் இல்லை என்றாலும் உயரம் இருந்தது . 

இந்தப் படம் சின்ன பட்ஜெட் என்பதாலும் இயக்குநர் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார் என்று நான் நினைக்கிறேன். பாடல் இனிமை நிறைந்தது. இரட்டையர்களான எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில், கண்ணதாசன் வரிகளில், பி.பி.ஸ்ரீநிவாஸ், பி.சுசீலா குரலில், சி.எல்.ஆனந்தன், நான் நடிக்க இந்தப் பாடல் காட்சி ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு அருகில் மட்டும் அல்ல, அதை சுற்றி உள்ள இடங்களிலும் படமாக்கப்பட்டது. இப்பொழுது உங்களுக்குத் தெரியுமே, ஏன் இந்தப் பாடல் இவ்வளவு சிறப்பாக இருந்தது என்று?   இயக்குநருடன் சக தொழில் நுட்பக் கலைஞர்களின் ஒருங்கிணைந்த உழைப்பும் சேர்ந்ததால், இந்தப் பாடல் இவ்வளவு சிறப்பாக வந்தது. 

நீர்வீழ்ச்சியும் உண்டு, பாறைகளும் உண்டு என்பதால் நாங்கள் சென்ற சமயம் வெயில் சுட்டெரித்தது. மே மாதம், அக்னி நட்சத்திர காலம் என்பதால்தான் இப்படி என்று நான் நினைத்தேன். கடல் மட்டதிற்கு மேலே இந்த இடம்  இல்லை. தரை மட்டத்தில்தான் அது இருந்தது. இப்படி இருந்ததால் இதை குளிர் பிரதேசம் என்று கூற முடியாது. நாங்கள் சென்றது வெயில் சுட்டெரிக்கும் மாதத்தில். அப்போதுதான் இடை விடாமல் பாடலின் படப்பிடிப்பை நடத்த முடியும் முடிவு செய்து ஏற்பாடு செய்திருந்தனர். பாடலின் சிறப்புப் பற்றி கேட்டால் ஒற்றை வரியில் சொல்லலாம். "ரோஜா மலரே' பாடல், சுத்தமான மெலடி, லொகேஷன் கண்களுக்குக் குளிர்ச்சி. கருப்பு வெள்ளையில் இருந்தாலும் மனதைக் கவரும் விதத்தில் படமாக்கபட்டது. நடித்த நடிகர்களோ பொருத்தமானவர்கள், இருவரும்  இளமையானவர்கள் மட்டும் அல்ல பிரமாதமாக நடித்தார்கள், இயக்குநரும், தொழில் நுட்பக் கலைஞர்களும் திறமையானவர்கள், இப்படி அவரவர் தங்கள் வேலையைச் சிறப்பாகச் செய்யும் போது, பாட்டு மிகவும் உன்னதமாகத் தானே இருக்கும். அந்தப் பாடலின் பல்லவி எடுக்கப்பட்ட போது நான் ஒரு பெரிய பாறையின் மீது நின்று கொண்டிருந்தேன். 

சுட்டெரிக்கும் வெயில். என் கால்களில் செருப்புப் போடக்கூடாது என்று இயக்குநர் சொல்லி விட்டார். ஆனால் கதாநாயகனாக நடிக்கும் ஆனந்தனுக்கு ஷூ மாதிரி ஒன்றை கால்களில் போட்டுக் கொள்ள அனுமதி கிடைத்தது. இந்தப் பாடலை இன்று நீங்கள் பார்த்தாலும் பல விஷயங்கள் உங்களுக்கு தெரிய வரும். முதலில் இது ராஜா ராணி கதை. அந்தக் கதைக்கு ஏற்ப நான் ராணி உடையில் இருக்க வேண்டும். உடை மட்டும் அல்ல, ராணி உடைக்கேற்ற சிகை அலங்காரம், நகைகள் அணிய வேண்டும். இவ்வளவு சுமைகளோடு நான் ஆடிப்பாட வேண்டும். இயற்கை அழகை முழுமையாக காட்ட "லாங் ஷாட்' வைத்தார் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர். அவரின் திறமை எல்லோருக்கும் தெரிந்தது தான். பாடல் வரிகளுக்கு ஏற்ப, நான் ராணி என்பதால் உயரமான பாறை மீது என்னை நிற்க வைத்தார். கொஞ்சம் கீழே ஆனந்தனை நிற்கவைத்தார்கள். பாடலிலேயே கண்ணதாசன் எங்களின் ஏற்ற தாழ்வை கூறி விடுவார், ஆனந்தன் கேட்பது போல் ""அருகில் வரலாமா...ஹோய்...வருவதும் சரிதானா. உறவும் முறைதானா'' என்று இப்படி காதல் ததும்ப பாடவேண்டும். 

நான் நிற்கும் இடத்தின் அருகில் கூட எந்த ஒரு மரமும் இல்லை. வெயில் என்னைப் பாடாய் படுத்திவிட்டது. வெயிலில் அகப்பட்ட ஆனந்தனும் அவதிப்பட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். படப்பிடிப்பு எடுக்கப்பட்ட நாள் அன்று 108 டிகிரி வெயில். நான் நின்று இருந்தது ஒரு பெரிய பாறையின் மீது. அதன் பின்புறம் பள்ளம். நான் நடனம் ஆடிக் கொண்டே ஒரு அடி தவறாக கால் வைத்தாலும் அதளபாதாளத்தில் விழுந்து விடுவேன். மற்றொன்று வெயிலின் தாக்கத்தில் இருந்து நான் தப்பிக்கக் குடை பிடித்துக் கொள்ள யாரும் அருகில் நிற்கக் கூடாது. 

காரணம் இது "லாங் ஷாட்' என்பதால் அவர்களும் காட்சியில் தெரிந்து விடுவார்கள். நமது பண்பான இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் மட்டும், தான் தெரியக் கூடாது என்று ஏதோ ஒரு பாறையின் பின்னால் ஒளிந்து கொண்டு விடுவார். ஒரே ஒரு லைட் மேன் மட்டும் என் முகத்தில் பிரதிபலிப்பானின் ஒளியை கூட்ட, குறைக்க நின்று இருந்தார். இயக்குநர் "ஆக்ஷன்' என்று சொன்னார் என்றால் பாறைக்கு பின்னால் ஒளிந்து கொள்வார். அவர் எங்காவது விழுந்து விடப் போகிறார் என்று அவரை பார்த்துக் கொண்டே நான் "பத்திரம்' என்று சொன்னேன். 

அவரோ "நாங்கள் பத்திரமாக இருப்போம். எங்களைப் பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். நீங்கள் நடனம் ஆடிக்கொண்டே  பாட்டிற்கு வாயசைக்க வேண்டும். உஷார், நீங்கள் சரியாக பாதங்களை எடுத்து வைக்கவும்'”என்றார். இவ்வளவு அசெளகரிங்களுடன் நான் நடிப்பது மட்டும் அல்ல, நடனமும் ஆடி, வரிகளையும் சொல்லவேண்டும். அது மட்டும் அல்ல, எனது முகத்தில், குறிப்பாக, கண்களில் காதல் ரசத்தை கொண்டு வர வேண்டும். நானோ வெயில் சூடு தாங்காமல் துடித்துக் கொண்டிருந்தேன். கண்கள் எல்லாம் சிவந்து போயின. இத்தனைக்கும் மேல், ஒரு உயரமான பாறையின் மீது நிற்பதால் காற்று பலமாக வீசியது. சில சமயம் என்னை தூக்கிக் கொண்டு போய்விடுமோ என்று பயமும் ஏற்பட்டது. இவ்வளவு பிரச்னைகளுக்கும் இடையில் தான் இந்தப் பாடலை படமாக்கினார் இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தர்.    

பாடலின் இந்தப் பல்லவியை ஒரு முறை எடுத்து விட்டு அங்கிருந்து காதல் பாவம் பத்தலை என்று கூறினார்கள். தகிக்கும் அனல் நடுவில் நான் இருக்கும் போது எப்படி காதல் பாவம் வரும். ஆனாலும் வரவழைக்க வேண்டும். அது தானே நடிப்பு? ஏன் என்றால் வார்த்தைகளுக்கு ஏற்றார் போல் உதட்டை அசைக்க வேண்டும். அங்கிருந்தபடியே உடலை அசைக்க வேண்டும். புன்னகைத்தபடி ஆனந்தனை பார்த்து, கண்களாலும் கைகளாலும் வா வா என்று அழகாக கூப்பிட வேண்டும். இப்படி செய்ய நான் மிகவும் கஷ்டப்பட்டேன். 

ஏன் இந்தப் பாறை மீது நிற்க வேண்டும் என்றால் பல்லவி பாடி முடித்தவுடன் எனக்குப் பின்னால் உள்ள பள்ளத்தில் கடைசியில் ஒரு ஓடை தெரிந்தது. அதில் சில பெண்கள் பாடிக் கொண்டே தங்களுடைய பரிசிலை ஓட்டிச் செல்வார்கள். உயரத்தில் இருந்து இதை எடுத்தார் இயக்குநர். இதில் என்னுடைய காம்பினேஷன் ஷாட். அதனால் தான் இந்த உயரமான பாறை மீது ஏறி நிற்க சொன்னார்கள் என்று அப்புறம் தான் தெரிந்தது.

இந்தப் பாடலை படமாக்குவதற்கு முன்னால், எப்பொழுதும் போல ஒரு நாள் எனக்கு வண்டி வந்தது. அதில் நான்  ஏவி.எம் ஸ்டுடியோ போனேன். தினமும் எனக்கு ஏதாவது ஒரு பயிற்சி கொடுப்பார்கள். "வீரத்திருமகன்' படத்தில் உள்ள ஏதாவது ஒரு காட்சிக்கான வசனத்தை சொல்லும் முறையில் பயிற்சி, நடனப்பயிற்சி, இவை இல்லை என்றால் உடைகளை அணிவித்து சரியாக இருக்கிறதா என்று போட்டுப்  பார்க்கச் சொல்வார்கள். இது எதுவுமே இல்லையென்றால், ஸ்டுடியோவில் உள்ள மற்ற பகுதிகளுக்கு சென்று மற்றவர்கள் எப்படி நடிக்கிறார்கள் என்று பார்க்க சென்று விடுவேன்.

 அப்படி வேலை இல்லாமல் ஓய்வாக இருக்கும் போது ஒரு நாள் என் காதில் ஒரு செய்தி விழுந்தது. அதைக் கேள்விப்பட்ட உடனேயே நான் அங்கு சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனக்கு செய்தியை சொன்னவரிடமே எங்கு நடக்கிறது என்று கேட்டேன். அவரும் இடத்தைச் சொன்னார். சொன்னது தான் தாமதம், என்  கால்களை என்னாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த இடத்தை நோக்கி நடந்தேன். அங்கே நான் கண்ட காட்சி என்ன?

 (தொடரும்)  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

SCROLL FOR NEXT