தினமணி கொண்டாட்டம்

சேவையே தவமாக...

18th Oct 2020 06:00 AM | -பிஸ்மி பரிணாமன்

ADVERTISEMENT

 

"ஐ. டி நிறுவனத்தில் வேலை செய்கின்ற போது, கிடைக்கின்ற நேரத்தில் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற உணர்வோடு கடைக்கோடி மக்களைத் தேடி உதவுதல், மரக்கன்று நடுதல் என தங்கள் பல்வேறு சேவைகள் செய்து வருவதை சமூக வலைதளம் மூலம் அறிந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!' என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டைப் பெற்றவர் வேலூரைச் சேர்ந்த சமூகத் தொண்டர் தினேஷ் சரவணன்.

தனி மனிதனாக அவர் சாதாரண மக்களுக்கு நான்கு ஆண்டுகளாகச் செய்து வரும் சேவைகளை விட கரோனா காலத்தில் தினேஷ் செய்து வரும் சேவைகள் தான் முதல்வரின் பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளது.

அப்படி என்ன தினேஷ் சரவணன் செய்து விட்டார் ? அவரே சொல்கிறார்:

ADVERTISEMENT

""நான் வேலூரைச் சேர்ந்தவன். வெளிநாட்டு கணினி நிறுவனத்தில் சென்னையில் பணிபுரிந்து வந்தேன். சனி, ஞாயிறு அலுவலகம் விடுமுறை என்பதால் வெள்ளி இரவே வேலூர் வந்துவிடுவேன். அப்பாவுக்குப் பால் வியாபாரம். மூத்த அண்ணன் விபத்தில் இறந்து போனார். அப்பாவுக்கும் இன்னொரு விபத்தில் காலில் அடிபட்டதால், இரண்டாம் அண்ணன் தனது கணினி நிறுவன வேலையை விட்டுவிட்டு அப்பா செய்து வந்த பால் வியாபாரத்தைக் கவனித்துக் கொள்கிறார். இறந்த அண்ணனின் சமூகச் சேவைகளின் நினைவாக, நீட்சியாக நலிந்தோருக்கு பொருள் உதவி, மளிகை சாமான்கள் வாங்கித் தர ஆரம்பித்தேன். கரோனா ஊரடங்கு தொடங்கியதும் "வீட்டிலிருந்து வேலை' என்றான பிறகு மார்ச் இறுதியில் வேலூர் வந்துவிட்டேன். காலையில் பால் விநியோகத்தில் இரண்டாம் அண்ணனுக்கு உதவியாக இருக்கிறேன். பகல் நேரத்தில் அலுவலக வேலை இருக்கும். அது இரவு எட்டு மணி வரை நீளும். அதனால் சனி ஞாயிறு இரண்டு நாட்கள் சமூகச் சேவைகள் செய்ய ஆரம்பித்தேன்.

தொடக்கத்தில் முகக் கவசம், கபசுர குடிநீரை வேலூரின் பல பகுதிகளில் விநியோகித்தேன். வேலை இழந்து கஷ்டப்படுகிறவர்களுக்கு மளிகை சாமான்கள் வாங்கிக் கொடுத்தேன். குடிசையில் இருப்பவர்களுக்கு மழை பெய்யும் போது மழை நீர் வீட்டுக்குள் இறங்கியதால் கூரை மாற்றிக் கொடுத்தேன். வேலூர் கொசப்பேட்டை மற்றும் சலவன்பேட்டை மில்கா பகுதிகளில் வறுமையில் வசிக்கும் குடும்பங்களுக்கு அவர்களது இல்லம் தேடி சென்று இலவசமாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.

பத்து ஆண்டுகளாகப் பராமரிப்பின்றிக் கிடந்த ஏரியூர் காரிய மேடை அருகில் உள்ள குளத்தை சீரமைத்து தர அந்தப் பகுதியினர் என்னிடம் கேட்டுக் கொண்டார்கள். ஆள்களை வேலைக்கு அமர்த்திக் குளத்தைச் சுற்றியுள்ள சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்றி சீரமைப்புச் செய்து முடித்தேன். குளத்தைச் சுற்றிலும் பனை விதை மற்றும் மரக்கன்றுகள் நட்டு வருகிறேன்.

பாப்பாத்தியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் நிர்மலாவின் குடும்ப வாழ்வாதாரத்திற்காகத் தள்ளுவண்டியில் இளநீர் கடை வைக்க உதவி செய்தேன்.

கடந்த ஜூன் மாதம் வள்ளலார் பகுதியை சேர்ந்த கஸ்தூரி அக்காவிற்கு இலவசமாக தள்ளுவண்டி மற்றும் காய்கறிகள் வாங்கி கொடுத்து வியாபாரம் செய்ய உதவி செய்யப்பட்டது. தற்போது ஒரு தள்ளுவண்டி இரண்டு தள்ளுவண்டியாக மாறி காய்கறி கடையோடு சேர்த்து பூக்கடையும் வைக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளார்.

ஒப்பந்த அடிப்படையிலான துப்புரவு பணியாளர்கள் 32 பேர்களுக்கு இலவசமாக மளிகை பொருட்கள் வழங்கினேன். 100 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உட்பட மளிகை பொருட்களை, "லக்ஷ்மி கார்டன், ஸ்பிரிங் டே ய்ஸ் பள்ளிகளின் தாளாளர் ராஜேந்திரனின் பொருள் உதவியுடன் வழங்கினோம்.

அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை தரமான விளக்குகள், ஒலி பெருக்கிகளுடன் அமைத்து வழங்கியுள்ளேன். இந்த ஸ்மார்ட் வகுப்பறையில் நுழையும் போது ஒரு தியேட்டருக்குள் நுழையும் உணர்வை மாணவர்கள் பெறுகிறார்கள்.

ஊசூர் கிராமத்தில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி 100 விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் இயற்கை உரம் வழங்கப்பட்டது. வேலூர் பாலாற்றின் கரையோரங்களில் 6 கி.மீ தூரம் 6ஆயிரம் பனைவிதைகளை விதைத்துள்ளேன். கடந்த நான்கு ஆண்டுகாலமாக சுமார் இருபதாயிரம் பனை விதைகளை வேலூர் சுற்றுவட்டாரத்தில் விதைத்துள்ளேன். அவைகள் பெரும்பாலும் முளைத்திருக்கின்றன. காட்பாடி கரிகிரி பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்களின் குழந்தைகள் படிப்பதற்காகத் தற்காலிக பள்ளிக்கூடம் பலரது உதவிகளுடன் கடந்த ஜனவரி மாதம் கட்டிக் கொடுத்தோம்.

எனது சமூகப் பணிகளைச் சமூக தளங்களில் பார்த்துவிட்டு சிலர் அவர்களாகவே முன் வந்து பண உதவி செய்கிறார்கள். பொருளாதார நெருக்கடியான காலத்தில் வருமானம் இல்லாமல் சிரமப்படும் மக்கள் உதவிகளைப் பெறும்போது அவர்கள் முகத்தில் வருகின்ற மலர்ச்சி எனது சேவைகளை மேலும் முன்னெடுக்க உற்சாகத்தைத் தருகிறது'' என்று சொல்கிறார் தினேஷ் சரவணன்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT