தினமணி கொண்டாட்டம்

வாசிப்பால் வாழ்க்கை வசப்படும்!

18th Oct 2020 06:00 AM | - ராஜன்

ADVERTISEMENT

 

வாசிப்பு நமது சமுதாய வளர்ச்சிக்கு முக்கியமானது. வாசிக்காதவர்களால் சிந்திக்கவும், வளரவும் முடியாது. கல்லூரிப்படிப்பு இல்லாமல் சமுதாயத்தில் உயர்ந்தவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், வாசிப்பில்லாமல் வாழ்க்கையில் உயர்ந்தவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பது அரிது. வாசிப்பு என்பது நல்ல சமூக மாற்றங்களுக்கும் மனித வளர்ச்சிக்கும் முக்கியமானது. அத்தகைய வாசிப்பு பணியை 50 ஆண்டுகளைத் தாண்டி செய்து வருகிறது, மதுரை சர்வோதயா இலக்கியப் பண்ணை. வணிக நோக்கமின்றி சேவை நோக்கத்துடன் தொடங்கப்பட்டு வாசிப்பு உலகில் பெரும் சேவையாற்றி வருகிறது.

இது குறித்து சர்வோதயா இலக்கியப் பண்ணைச் செயலாளர் புருஷோத்தமனிடம் பேசினோம்:

""மதுரையில் 1969-இல் தொடங்கப்பட்டது. 35 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண ஊழியராகச் சேர்ந்த நான் தற்போது செயலாளராகி இருக்கிறேன். காந்தியத்தை மக்களிடம் கொண்டு செல்வது தான் எங்களது முக்கியப் பணி. மேலும் மாணவர்களுக்கு தேவையான பல்துறை நூல்கள், இலக்கியங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், அனைத்து பதிப்பகங்களின் நூல்கள் என ஒன்றரை லட்சம் நூல்கள் எங்களிடம் உள்ளன.

ADVERTISEMENT

சேவை நோக்கோடு, இயங்குவதால் அதிக லாபம், குறைந்த லாபம் தரும் நூல்கள் என்று பார்க்காமல் மக்களுக்குத் தேவையான அனைத்து நூல்களையும் வழங்குகிறோம். குறிப்பாக மாணவர்களுக்கு ஏதாவது புத்தகம் தேவை என்றால் எங்களிடம் இல்லாவிட்டாலும் கிடைக்கும் இடத்திலிருந்து வரவழைத்து அவர்களுக்கு கொடுத்துவிடுவோம். 25 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட அரிய பல புத்தகங்களை மீண்டும் அச்சிட்டுள்ளோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆண்டுதோறும் நாங்கள் நடத்தும் புத்தகத் திருவிழாவிற்கென்று தனி வாசகர் வட்டம் உள்ளது. இத்திருவிழாவின் போது வாங்கும் புத்தகங்கள் அனைத்திற்கும் 10 சதவீத தள்ளுபடி உண்டு. டி.என்.பி.எஸ்.சி., நீட், சிவில் போட்டித் தேர்வுகளுக்கென பிரத்யேக அரங்கம் உள்ளது. இங்கு 25 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. அனைத்து வகை அகராதிகளும் கிடைக்கின்றன.

"சத்திய சோதனை", "அர்த்தமுள்ள இந்துமதம்', "அக்னி சிறகுகள்' போன்ற புத்தகங்களுக்கு எப்போதும் போல் மவுசு நீடிக்கிறது. சமீபத்தில் சாகித்ய அகாதெமி விருது வென்ற சோ.தர்மனின் "சூல்' நாவலுக்கும் வாசகர் மத்தியில் வரவேற்பு அதிகமாகியுள்ளது.

தற்போது மகாத்மா காந்தியும் - மகாகவியும், அண்ணலும் அமிர்த்கெளரும், காந்தி எழுதிய என் வாழ்க்கை கதை, வினோபாஜியின் வாழ்க்கை வரலாற்று நூலான அதிசய சோதனை ஆகிய நூல்கள் சிறப்பு வெளியீடுகளாக வெளியிடப்பட்டுள்ளன. திருக்குறள் புத்தகம் வேண்டுமென்றால் 150 ஆசிரியர்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் உள்ளது..

இளைய தலைமுறையினரிடம் வாசிப்பு பொதுவாகவே குறைந்து வருகிறது. வாசிப்பு வசப்பட்டால் நம் வாழ்க்கையும் வசப்படும். வாசிப்பு இல்லாவிட்டால் வளர்ச்சி இருக்காது. வாசிப்பு மன நலத்தை பாதுகாக்கிறது. குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே வாசிப்புப் பழக்கத்தைப் பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும்''  என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT