தினமணி கொண்டாட்டம்

ஆசிரியர்களாக   மாறிய   பொறியாளர்கள்

விஷ்ணு

பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்கள் சிலர் காலமாற்றத்தால் ஆசிரியர்களாக மாறியிருக்கிறார்கள். திருச்சியை அடுத்துள்ள புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பொறியாளர்களான அரவிந்த், விக்னேஷ், பவானிசங்கர், சாரதாஸ். இந்த நால்வரும் இணைந்து கிராமத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து வருகின்றனர்.

கரோனா பெருந்தொற்று சூழலிலும் உணவு, உடை, இருப்பிடம், போக்குவரத்து வசதி என மக்களின் தேவையறிந்து அதற்கேற்ப பலர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். கரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் படிப்பைத் தொடர முடியாமல் அவதிப்படும் குழந்தைகளுக்கு இவர்கள் செய்து வரும் உதவி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

"எப்படி இந்த எண்ணம் வந்தது?' பொறியாளர்களிடம் கேட்ட போது அளித்த பதில்:

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.

பிறருக்கு உதவி செய்யும் ஒப்புரவு என்னும் உயர்ந்த குணத்தை விட உயர்வான ஒன்று இவ்வுலகில் இல்லை.

பொது முடக்கம் காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், பள்ளிகள் பெரும்பாலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே பாடங்களை கற்பித்து வருகின்றன. ஆனால், எங்கள் கிராமத்தை பொருத்தவரை வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் விவசாய நிலத்தில் தொழிலாளர்களாக வேலை செய்பவர்கள். மேலும் சிலர் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்கின்றனர். அறிதிறன்பேசி (நம்ஹழ்ற் ல்ட்ர்ய்ங்) என்பது அவர்களது கற்பனைக்கும் எட்டாத ஆடம்பர பொருள். மாணவர்களின் படிப்பு எக்காரணத்தையும் கொண்டு நின்றுவிடக்கூடாது. அதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று திட்டமிட்டோம்.

ஜூலை மாதம் பள்ளிகளில் மாணவர்களுக்குப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்ட பின்னர் இந்த வகுப்புகள் தொடங்கப்பட்டன. இப்போது எங்கள் ஊரில் உள்ள குழந்தைகளை அவர்களின் பெற்றோரின் அனுமதியுடன் வரவழைத்து அமைதியான சூழலில், சமூக இடைவெளியுடன் அமர வைத்துப் பாடங்களைச் சொல்லித் தருகிறோம். திறந்தவெளியில் கரும்பலகையை வைத்துக்கொண்டு மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறோம்.

ஒவ்வொரு மாணவருடைய வீட்டு வாசலில் பாடங்களுக்கான அட்டவணை போடப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பத்தாம் வகுப்பு படிக்கும் 12 மாணவர்கள் வகுப்பில் பங்கேற்பார்கள். 2 மணிக்குப் பிறகு 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் 28 மாணவர்கள் வகுப்பிற்கு வருகின்றனர். இந்த வகுப்பு நான்கு மணி நேரம் நடைபெறுகிறது.

9 மற்றும் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்துகிறோம். இவர்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் தேர்வு நடத்துகிகிறோம். நாங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாரான போது சீனியர் மாணவர்கள் பலர் எங்களுக்கு உதவியுள்ளனர். அது போன்று நாங்கள் இப்போது எங்கள் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு உதவுகிறோம். பாடம் கற்றுக்கொடுப்பதன் மூலம் சமூக நலனில் பங்களிக்க விரும்பினோம். பொதுவாகப் போட்டித் தேர்வுக்குத் தயாராக வேண்டுமெனறால் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டங்கள் படித்தால் வெற்றி பெறுவது எளிது. பிறருக்கு சொல்லிக் கொடுப்பது மூலம் நாங்களும் கற்றுக் கொள்கிறோம். எங்களுக்கு ஆசிரியர் பணி என்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்களே. எங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களால் தான் நாங்களும் இன்று பிறருக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறோம்.'' என்கிறார்கள் பொறியாளர்கள்.

""என்னுடைய இரண்டு மகள்களும் எங்கள் ஊர் பட்டதாரிகள் சொல்லிக் கொடுக்கும் வகுப்பிற்கு தினமும் செல்கின்றனர். அறிதிறன்பேசி இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை. என்னைப் போன்ற பெற்றோரின் கவலை இந்த நான்கு இளைஞர்களால் தீர்ந்துள்ளது'' என்கிறார் கிராமத்து வாசியான வள்ளி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத பலன்கள்: மிதுனம்

மே மாத பலன்கள்: ரிஷபம்

மே மாத பலன்கள்: மேஷம்

ஆப்பிள் விற்பனை வீழ்ச்சி: மே 7 நிகழ்வு பலனளிக்குமா?

"விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பா? நாட்டின் அடிமைகளா?”: அய்யாக்கண்ணு

SCROLL FOR NEXT