தினமணி கொண்டாட்டம்

மண்ணில் கலைவண்ணம்

பனுஜா


புதுச்சேரியிலிருந்து 7 கி.மீ தூரத்தில் இருக்கும் வில்லியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் முனுசாமி.

களிமண்ணை பொன்னாக்கும் கலைவித்தைக்கு சொந்தக்காரர். முனுசாமி வடிக்கும் டெரகோட்டா சிலைகள் உயரத்திற்கு ஏற்ற மாதிரி பத்து ரூபாயிலிருந்து நான்கு லட்சம் வரை விலை போகின்றன. இவை இந்தியா மற்றும் உலக நாடுகள் முழுவதும் விற்பனை ஆகிறது என்பதுதான் சிறப்பம்சம்.
மண்ணில் சிலை வடிவங்கள் செய்வதைத் தொழிலாகக் கொண்டிருந்தாலும், பல ஆயிரம் பேர்களுக்கு கலையை பயிற்றுவித்து அவர்களின் வாழ்வாதாரத்தையும் முனுசாமி உறுதி செய்துள்ளார். 53 வயதாகும் முனுசாமியின் தமிழக பாரம்பரிய கலைக்கு 40 ஆண்டுகளாக செய்துவரும் பங்களிப்பினை கெளரவிக்கும் விதமாக மத்திய அரசு இவருக்கு இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருதினை அறிவித்துள்ளது. கரோனா காரணமாக விருது வழங்கும் விழா தள்ளிப் போடப்பட்டுள்ளது. ஆறு தேசிய விருதுகள், பல மாநில அரசு வழங்கியிருக்கும் விருதுகள் என்று பட்டியல் நீண்டாலும், மண்ணின் கலையை . மண்ணிலிருந்து உருவாக்கும் மிக தொன்மையான கலையை சாகாமல் காத்து வருபவர் என்ற பெருமைதான் முதலிடம் பிடிக்கிறது.

தனது கலை அனுபவங்களை முனுசாமி பகிர்ந்து கொள்கிறார்:

""மண் வாசனையை ஐந்து வயதிலிருந்து சுவாசித்து வருகிறேன். அப்பா செய்து வந்த மண் உருவங்களைப் பார்த்துப் படித்து வளர்ந்தேன். முதலில் ஒரு அங்குல உயரத்தில் சிலைகளை செய்யத் தொடங்கினேன். சிலைகள் செய்ய நல்ல வளமான களிமண் தேவை. அவற்றை எனக்குத் தர வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். மாட்டு வண்டியில்தான் களிமண்ணைக் கொண்டு வர முடியும். களிமண்ணை தொடக்கத்தில் நன்றாக வெயிலில் காய வைக்க வேண்டும். உலர்ந்த களிமண்ணுடன் வைக்கோல், மரத்தூள், சாணம் கலந்து நன்றாகக் குழைப்போம். மூன்று நாள் ஊறவைத்த இந்தக் கலவையில் இருந்துதான் உருவங்களை வடிப்போம். ஒரு வாரம் சிலையை உலர வைப்போம். பிறகு நெருப்பில் சுட்டு எடுப்போம். சிலைகளை சுட்டு எடுக்கும் வரையில் பிரசவ வேதனையை நானும் எனது குழுவினரும் அனுபவிப்போம். ஆறடி உயரமுள்ள சிலைக்கு சுமார் 750 கிலோ களிமண் கலவை தேவைப்படும். சிலை செய்து முடிக்க ஒரு நாள் முதல் ஒரு மாதமும் பிடிக்கும். அது என்ன சிலையை வடிக்கப்போகிறோம் என்பதை பொறுத்தது.

அகோர வீரபத்திரன், மதுரை வீரன், அய்யனார், அய்யனார் குதிரைகள், சப்த கன்னிகள், முனி, வெள்ளையம்மா, பொம்மியம்மா, வால்முனி, ஆத்தடியார், கிணத்தடியார், கருப்பு, கொங்காணி கருப்பு, முன் கருப்பு, பின் கருப்பு, நொண்டி கருப்பு, சங்கிலி கருப்பு என்று ஏறக்குறைய 108 நாட்டுப்புற தெய்வங்களை களிமண் சிற்பங்களாகச் செய்து "புவிசார் குறியீடு' கிடைக்கப் பெற்றுள்ளேன். டெரகோட்டா குதிரை உருவத்தில் ராஜஸ்தான் பாணியைக் கலந்து செய்யப்படும் சிலைகளுக்கும், பாயும் குதிரைகளில், யானைகளில் நாட்டுப்புற தெய்வங்கள் படு கம்பீரமாக அமர்ந்து வருவது போன்ற சிற்பங்களுக்கும் கிராமப்புறங்களில் நல்ல வரவேற்பு உண்டு.

2014 -இல் உத்தரகாண்ட் வெள்ள நிவாரண நிதிக்காக டில்லி நகரத்தில் "டில்லி ஹட்' திடலில் சிலைகளை உருவாக்கி விற்றுக் கொண்டிருந்தேன். இதை அறிந்த அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு மணி நேரம் பேசினார். மண் சிலைகள் உருவாவது எப்படி என்று விரிவாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார். சிறு கிராமத்தில் வாழ்ந்து கொண்டு இந்தக் கலையை .. கலை வடிவங்களை எப்படி உலகநாடுகளில் பிரபலமாக்க முடிந்தது என்று ஆர்வமுடன் கேட்டுத் தெரிந்து கொண்டார். கலாம் என்னுடன் பேசியதை மிகப் பெரிய கெளரவமாகக் கருதினேன். கலாம் இறந்ததும் அவரது முழு உருவ வெங்கலச் சிலையை அவருக்கு நான் செய்யும் அஞ்சலியாகக் கருதி உருவாக்கினேன். பாண்டிச்சேரி பிளானட்டோரியத்தில் கலாம் சிலையை நிறுவியுள்ளோம்.

தொடக்கத்தில் வாழ்வாதாரத்திற்காக மண் ஜாடிகள், மண்பாண்டங்கள் செய்து புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் உள்ள கடைகளுக்கு விற்பனைக்கு அப்பா கொடுத்து வருவார்.கூட நானும் போவேன். அப்போது கடைகளில் நான்கு அடி உயரமுள்ள மண்ணால் செய்யப்பட்ட குதிரைகள் மனதைக் கவரும். தவிர ராஜா விக்கிரமாதித்னை குதிரைப் படைகளால் தோற்கடித்த சாலிவாகனன் குறித்து அப்பா அடிக்கடி சொல்லுவார். விக்கிரமாதித்தன் வேதாளம் சொல்லும் கதையைக் கேட்பதை தனது முக்கிய பணியாகக் கொண்டு தனது குடிமக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்து வேதாளத்துடன் சதா அலைந்து திரிபவர். தங்களை மறந்த ராஜாவிடம் குடிமக்களுக்கு கோபமோ கோபம். கடமை தவறிய ராஜாவிடமிருந்து நாட்டையும் தங்களையும் காப்பாற்ற எல்லாம் அறிந்த முனிவரிடத்தில் முறையிட, "விக்ரமாதித்தனை அகற்ற குயவர் குடும்பத்தில் பிறந்த சாலிவாகனன் என்ற சிறுவனால்தான் முடியும்' என்று சொல்லியிருக்கிறார்.

"ஒரு குயவன் குடும்ப சிறுவன் எப்படி வீரமும் தீரமும் படைகளையும் கொண்ட விக்கிரமாதித்தனை தோற்கடிக்க முடியும்..' என்று மக்கள் முனிவரிடம் கேட்க. "சாலிவாகனன் குதிரைகளை, யானைகளை மண் பொம்மைகளாகச் செய்து வைத்துள்ளான். இந்தக் கமண்டல நீரை அந்த பொம்மைகள் மீது தெளித்து இந்தக் குச்சியால் பொம்மைகளை அடிக்கச் சொல்லுங்கள். குதிரைகளும் யானைகளும் உயிர் பெற்று விசுவரூபம் எடுக்கும். அவை சாலிவாகனன் படைகளாகும். அந்தப் படைகளைக் கொண்டு சாலிவாகனன் விக்கிரமாதித்தனை விரட்டி அடிப்பான்' என்று முனிவர் சொல்கிறார். முனிவர் சொன்னது போலவே, சாலிவாகனன் செய்ய... யானை குதிரைப் படைகள் உயிர்த்து எழ... அந்தப் படைக்கு தலைமை தாங்கி சாலிவாகனன் விக்கிரமாதித்தனை ஆட்சியிலிருந்து அகற்றுகிறான். இந்தக் கதையும், எனது மனதில் குதிரையுடன் நெருக்கத்தை ஏற்படுத்திவிட்டது. பிற்காலத்தில் பிரம்மாண்ட மண் குதிரைகளை உருவாக்க இந்த மனப்பதிவுதான் காரணம். சிலைகளை பிரம்மாண்டமாக உருவாக்கும் போது பல பாகங்களாக செய்து அவற்றை இறுதியில் இணைப்போம். இதை சொருகு” முறை என்போம். அப்பா இந்த சொருகும் நேர்த்தியில் விற்பன்னர். அவர் எனக்கு இந்த யுக்தியில் நல்ல பயிற்சி கொடுத்துள்ளார்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நாடு முழுவதும் அகழாய்வு செய்யும்போது கிடைக்கும் உடைந்த மண் பாண்டங்கள், சிலைகளின் உதிரிப் பாகங்கள் நமக்கு சாட்சியம் சொல்கின்றன. குடும்பத்தில் சாப்பாட்டிற்கே திண்டாட்டம் என்பதால் எட்டாவது படிக்கும்போது படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதாகிவிட்டது. எனக்கு 23 வயது ஆகும் வரை தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை எங்கள் குடும்பத்தில் கொண்டாடவே இல்லை என்றால் எப்படிப்பட்ட ஏழ்மையில் நாங்கள் வெந்திருப்போம் என்று புரிந்து கொள்ளலாம். பரம்பரை பரம்பரையாக மண்ணில் கலை வடிவங்கள் உருவாக்கி வந்தவர்கள் பலரும் வேறு தொழிலுக்குப் போய்விட்டார்கள். ஆனால் நான் தொடர்ந்தேன். மண் கொண்டு விரல்களால் கலை மொழி பேசியதால் இன்று உலகமெங்கும் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தொழிலிலும் நல்ல வருமானம் ஈட்டலாம் என்று நிரூபித்திருக்கிறேன்.

புதுச்சேரி அரசு எனக்கு பல விதங்களில் உதவியுள்ளது. குறிப்பாக புதுச்சேரி அரசின் உதவியால் 2004-இல் ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனாவில் நடந்த சர்வதேச கண்காட்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகுதான் எனது படைப்புகளின் பவனி தொடங்கியது. இது வரையில் 12 நாடுகள் சென்று பல கலைக் கண்காட்சிகளில் பங்கு பெற்றுள்ளேன். ஒன்பது நாட்டு அருங்காட்சியகங்களில் எனது களிமண் சிற்பங்கள் இடம் பிடித்துள்ளன. வெளிநாட்டவர்களுக்குக் கூட மண்ணில் சிற்பங்கள் செய்வது எப்படி என்று பயிற்சி வழங்கி வருகிறேன். 13 அடி முதல் 21 அடி வரை உயரமுள்ள மண் சிலைகளை சென்னை வேளச்சேரி, சிறுவாச்சியூர், அருள்மொழி பகுதிகளில் உருவாக்கியிருக்கிறேன். ஆதி அருங்கலையாக ஆரம்பித்த களிமண் சிற்பக்கலையை காப்பதுடன், அதை வருங்கால தலைமுறைகளிடம் கொண்டு செல்ல வேண்டுமென்பதே எனது லட்சியம்'' என்கிறார் முனுசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு: அதிகாரிகளின் பேச்சுவாா்த்தை தோல்வி

முதியவா் உடல் மீட்பு

கண்மாயில் மூழ்கி மாணவா் பலி

மனைவி கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து -சாா் பதிவாளா் வீட்டை மதிப்பீடு செய்த அதிகாரிகள்

SCROLL FOR NEXT