தினமணி கொண்டாட்டம்

வானொலி... வாழ்வில் ஓர் அங்கம்!

ந. ஜீவா

தொலைக்காட்சி வருவதற்கு முன்பு மக்கள் மனதில் இடம் பெற்றிருந்தது வானொலிதான். வானொலியில் செய்திகளைக் கேட்கலாம்; பாடல்களைக் கேட்கலாம்; சினிமாவையும் "ஒலிச்சித்திரம்' என்கிற பெயரால் கேட்கலாம். தொலைக்காட்சி வந்த பிறகு வானொலியின் முக்கியத்துவம் சிறிது குறைந்துவிட்டது.

யுனைட்டெட் அரபு எமிரேட்ஸ் நாடுகளில் வாழக் கூடிய நம் தமிழர்களுக்கோ வானொலிதான் உயிர். துபாய் தமிழ் வானொலியான 89.4 தமிழ் பண்பலை வானொலியில் ஆர்ஜே - வாக பணிபுரிந்தவர் நாகா.

""வானொலி என்றால் ஏதோ பாடல் கேட்பதற்கான ஒன்று என்று நினைத்துவிடாதீர்கள். உலகத்தோடு தமிழர்களை இணைக்கும் மையமாக, அவர்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாக அங்கே வானொலி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது'' என்கிறார் நாகா. அவரிடம் பேசியதிலிருந்து...

""நான் சென்னை வடபழனியைச் சேர்ந்தவன். வானொலிக்கும் எனக்குமான உறவு எனது பள்ளிப் பருவத்திலிருந்தே தொடங்கிவிட்டது. பகுதி நேர அறிவிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், செய்தி ஆசிரியர், நிருபர் என வானொலியின் எல்லாப் பிரிவுகளிலும் எனக்கு அனுபவம் உண்டு. துபாய் நாட்டின் 89.4 தமிழ் பண்பலையில் 2014 - ஆம் ஆண்டின் இறுதியில் சேர்ந்தேன். இப்போது வானொலி கேட்கும் தமிழர்கள் அனைவருக்கும் நான் தெரிந்தவனாக மாறிவிட்டேன்.

தமிழ்நாட்டிலிருந்து அரபு நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தமிழர்களில் 90 சதவீதம் பேர் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து தனியாகத்தான் அங்கே வாழ்கிறார்கள். குடும்பத்தோடு வாழ்பவர்கள் மிகவும் குறைவு. ஊரை விட்டு, நாட்டை விட்டு, சொந்த பந்தங்களை விட்டு விட்டு, ஒற்றையாளாக உழலும் தமிழர்களுக்கு உறுதுணையாக இருப்பது வானொலிதான்.

வேலைக்குச் செல்வதற்காக ஒவ்வொருவரும் அங்கே நீண்ட தொலைவு செல்ல வேண்டியிருக்கும். கார்களிலோ, சொகுசு வேன்களிலோ அவர்கள் செல்லும்போது பண்பலை வானொலியைக் கேட்டுக் கொண்டேதான் செல்வார்கள். தொலைக்காட்சி எல்லாம் பார்க்க அவர்களுக்கு நேரம் இல்லை.

பண்பலை வானொலிகளில் வெறும் பாடல்களை மட்டுமே ஒலிபரப்ப மாட்டார்கள். செய்திகளை ஒலிபரப்புவார்கள். வாழ்க்கைத் தேவையான பல தகவல்களையும் ஒலிபரப்புவார்கள். உதாரணமாக காலை 10 மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரை 89.4 தமிழ் பண்பலையில் ஒலிபரப்பாகும் "அவுட் ஆஃப் தி பாக்ஸ்' (ஓடிபி) என்ற நிகழ்ச்சியில், இணையதளம் தொடர்பாக ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டிய எல்லாத் தகவல்களையும் சொல்வார்கள். இரவு 8 மணி முதல் 10 மணி வரை வாரத்தில் 5 நாள்கள் ஒலிபரப்பாகும் "மேஸ்ட்ராலஜி' என்ற நிகழ்ச்சியில் இளையராஜாவின் பாடல்களை ஒலிபரப்புவார்கள். சனிக்கிழமை மதியம் 3 மணி முதல் 5 மணி வரை ஒலிபரப்பாகும் "சினிபீடியா' என்ற நிகழ்ச்சியில் திரைப்படம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒலிபரப்புவார்கள்.

சாலையில் போக்குவரத்தின் நிலை, அன்றாடச் செய்திகள் என வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் ஒலிபரப்புவார்கள். இதனால் அங்கு வாழும் தமிழர்களுக்கு வானொலி வெறும் பொழுதுபோக்கு அல்ல. உலகத்துடன் தமிழர்களைத் தொடர்புபடுத்தும் மையமாக வானொலி அங்கே இருக்கிறது.

வேலைக்காக வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு நம்நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள், விழாக்கள் பற்றிய நினைவு எப்போதும் நெஞ்சில் கனத்திருக்கும். எங்கள் வானொலி யுனெட்டெட் அரபு எமிரேட்ஸ் நாடுகளில் வாழும் தமிழர்களுக்காக எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுகிறது. பொங்கல் அன்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை ஒரே இடத்தில் கூடச் செய்து, பொங்கல் விழாவின் பல்வேறு நிகழ்ச்சிகளையும் - உறியடிப்பது முதல் பொங்கல் வைப்பது வரை - நடத்துகிறது. அதேபோன்று தீபாவளியை துபாயில் உள்ள "எட்டிசிலாட் அகாதெமி'யின் பெரிய மைதானத்தில் கொண்டாடுகிறது. 15 ஆயிரம் பேருக்கும் மேல் அதில் கலந்து கொள்வார்கள். அப்போது பல தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளையும் நடத்துகிறாôர்கள்.

நவராத்திரியின் போது கொலு வைத்திருக்கும் வீடுகளுக்குச் சென்று அங்கு வைக்கப்பட்டிருக்கும் கொலு பொம்மைகளைப் பற்றி வானொலியில் கூறி, கொலு வைத்திருப்பவர்களுக்குப் பரிசளிக்கும் நிகழ்ச்சியையும் நடத்துகிறார்கள். இப்படி மக்களின் வாழ்க்கையோடு ஒன்றி, அவர்களோடு இணைந்து வானொலி அங்கே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நாடு விட்டு நாடு சென்று வாழ்பவர்களுக்கு இவையெல்லாம் மிக மிக முக்கியமானவை.

கரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து அங்கே நிறைய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பல நிறுவனங்களில் வேலையிலிருந்து பலரை நீக்கிவிட்டார்கள். சம்பளத்தில் 20 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை குறைத்துவிட்டார்கள். கட்டுமானத் தொழிலில் ஈடுபட்ட பலர் வேலையிழந்துவிட்டார்கள். தங்குமிடத்துக்கான வாடகை, உணவுக்கான செலவு ஆகியவற்றைக் கொடுக்க முடியாமல் பல தமிழர்கள் தவித்தார்கள். சொந்த நாட்டுக்குத் திரும்ப விமானத்துக்கான கட்டணம் இல்லாத நிலையில் பலர் சிரமப்பட்டார்கள்.

89.4 தமிழ் பண்பலையில் நான் ஆர்ஜேவாக உள்ள இளையராஜா இசையமைத்த பாடல்களை ஒலிபரப்பும் "மேஸ்ட்ராலஜி' நிகழ்ச்சியில் "இப்படிக்கு இதயம்' என்ற ஒரு பகுதி உள்ளது. அந்த நிகழ்ச்சி, உதவி தேவைப்படுபவர்களுக்கும், உதவி செய்யக் காத்திருப்பவர்களுக்கும் தொடர்பு ஏற்படுத்தித் தரும் நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான தமிழர்கள் பயன் அடைந்தார்கள். ஒரு மாதத்துக்குத் தேவையான உணவுப் பொருள்களை ஒருவருக்கு வாங்கிக் கொடுத்தார் ஒருவர். சொந்த ஊருக்குத் திரும்புவதற்கான விமான டிக்கெட்டை ஒருவருக்கு இலவசமாக வாங்கிக் கொடுத்தார் இன்னொருவர்.

அரபு அமீரகத்தில் வாழும் தமிழர்களின் வாழ்க்கையில் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக அங்கே வானொலி இருக்கிறது. அதில் நான் பணிபுரிந்தேன் என்பதில் உண்மையில் எனக்குப் பெருமை'' என்கிறார் நாகா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT