தினமணி கொண்டாட்டம்

எப்போதுமே இசைதான் எனக்கு! 

DIN

எனக்கு மொழி பிரச்னை இல்லை. சினிமாதான் முக்கியம். எதுவாக இருந்தாலும்  கற்றுக் கொள்ள வேண்டியதுதான். இந்த தைரியம்தான் மொழி, எல்லை தாண்டி என்னைப் பயணிக்க வைக்கிறது. மலையாளத்தில்  "மகேஷிண்டே பிரதிகாரம்', தமிழில் "எட்டு தோட்டாக்கள்',  சர்வம் தாள மயம்', இப்போது "சூரரைப் போற்று' என எல்லாமே எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள். எல்லாமும் மக்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.  "சூரரைப் போற்று' சினிமாவை ஏற்றுக் கொண்ட மக்களுக்கு நன்றி. என்னை "பொம்மி'யாக ஏற்றுக் கொண்டதற்கும் நன்றி. இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி!

தெளிவாகப் பேச ஆரம்பித்தார் அபர்ணா பாலமுரளி. 

கதை தேர்வில் நிதானமாக இருக்கீங்க...

எனக்குத் தமிழ் சரியாகத் தெரியாது. என்னுடைய  முதல் தமிழ்ப் படத்தில் ஏதோ செய்து சமாளித்து விட்டேன்.  ஆனால், சர்வம் தாள மயம், இப்போது சூரரைப் போற்று என இரண்டு படங்களிலும்  லைவ் ரெக்கார்ட்டிங் செய்தார்கள். அதனால், நடிக்கும் போதே நான் சரியான தமிழில் பேசி நடிக்க வேண்டும். அது சவாலாகவும் அதே சமயத்தில் கொஞ்சம் கஷ்டமாகவும் இருந்தது. 

இருந்தாலும், ராஜீவ் மேனன் சாரின்  உதவியால் சர்வம் தாள மயம் படத்தில் நல்லபடியாக நடித்து முடித்தேன். ஆடிஷனில் இருந்து படம் முடிகிற வரைக்கும் அவர் உதவியாக இருந்தார்.  அது போல்தான் சுதா மேடமும்.  எனக்கு பெரும் உதவியாக  இருந்தார். பொதுவாக ஒரு படத்தின்  ஆடிஷனுக்குப் போனால் அங்கே இயக்குநர் இருக்க மாட்டார். அவரோட உதவியாளர்கள்தான் நமக்கு ஸ்கீரின் டெஸ்ட் எடுப்பார்கள். ஆனால், இந்தப் படத்தின்  ஆடிஷனில் சுதா மேடம் கூடவே இருந்து  ஸ்கீரின் டெஸ்ட் செய்தார்.  என் கேரக்டருக்கு மட்டுமல்ல; எல்லா கேரக்டருக்கும் இப்படித்தான் ஆடிஷன் செய்திருக்கிறார். இப்படி ஆரம்பத்திலிருந்தே சூரரைப் போற்று  படம் எனக்கு ரொம்ப நெருக்கமான படமாக  மாற ஆரம்பித்து விட்டது. 

சூர்யா மாதிரி நட்சத்திர அந்தஸ்தில் இருக்கிற நடிகரோடு நடிப்பது கொஞ்சம் சவாலானது... இதை உணர்ந்திருப்பீங்க...

நிச்சயமாக, இது என் முதல் அனுபவம். இதுவரை நடித்த படங்களில் நீங்கள் சொல்கிற நட்சத்திர அந்தஸ்து நடிகர்கள் இல்லைதான். ஆனால், எல்லாவற்றுக்கும் திட்டமிடல் இருந்தது. எங்கே போகிறோம், எங்கே தங்கப் போகிறோம், நம்மை பற்றி படக்குழு என்ன நினைக்கிறது என எல்லாமும்தான் அதில் அடக்கம். சுதா மேடம் மாதிரி ஓர் ஆளுமை கூடவே இருந்ததால், அது சாத்தியமானது. சூர்யா சாரும் பெரும் உதவி செய்தார். எனக்கு என்ன வருமோ, அதை நான் செய்து காட்டினேன். அது எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. அவ்வளவுதான். சினிமா எவ்வளவு சிம்பிள் !

மலையாள சினிமா வேறு... கதை, களம் எல்லாமே தமிழில் மாறுபடும்... அதற்காக நிறைய தமிழ்ப் படங்களைப் பார்ப்பீர்களா....

ரஜினி சாரில் இருந்து  சூர்யா  வரைக்கும் எல்லோரின் படங்களும் கேரளத்துக்கு வந்து விடும.  தமிழ்நாட்டில்  இருக்கிற மாதிரிதான் கேரளாவிலும் ஒரே கொண்டாட்டமாக இருக்கும். "ராட்சசன்',  "96',  "பரியேறும் பெருமாள்' போன்ற படங்களுக்கும் இங்கே (கேரளா) நல்ல வரவேற்பு.  அதனால் தமிழ் சினிமா மிஸ் செய்ய முடியாதது. 

தமிழ் சினிமா - மலையாள சினிமா; வேறுபாடு உணர்கிறீர்களா....

மலையாளம்; எனக்குத் தெரிந்த மொழி, எனக்கு பரிச்சயமான மனிதர்கள் என எல்லாரும் எனக்கு தெரிந்தவர்களாக இருப்பதால் இணக்கமான சூழல் அங்கே இருக்கும்.  ராஜீவ் மேனன் சாரோடு  வேலை பார்த்த போது கூட நிறைய மலையாளிகள் இருந்தார்கள்.  அதனால்,  பெரிதாக  ஒரு வித்தியாசமும் தெரியலை. இப்போது "சூரரைப் போற்று' படப்பிடிப்பு தளம் வேறு மாதிரியான அனுபவத்தைத் தந்தது. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக  அனுபவம். எல்லாமே புதுமுகம். ஆனாலும் பெரிதாக நான் வித்தியாசத்தை உணரவில்லை. வித்தியாசம் சொல்கிற அளவுக்கு நான் இன்னும் அதிக படங்கள் தமிழில் நடிக்கவில்லை.

எல்லைத் தாண்டும் போது மொழி அவசியம்..... ஆனால், அதைத் தாண்டி சினிமாவுக்காக என்னென்ன விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்...

மலையாளப் படங்களில் நடிக்கும் போது நான் எவ்வளவு குண்டாக, பப்ளியாக இருந்தாலும் அதைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன்;  இயக்குநர்களும் அதைப் பற்றி எதுவும் சொல்வது இல்லை. ஆனால், நான் தமிழ்ப் படங்களிலோ அல்லது வேறு மொழிப் படங்களிலோ நடிக்கிற சூழல் வரும் போது,  நான் உடம்பைக் குறைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இயல்பாகவே எனக்கு குண்டு உடம்பு. அதற்காகத்தான்  இப்போது ஜிம்முக்குப்  போய் உடம்பை குறைத்துக் கொண்டிருக்கிறேன்.  இதை வெளிப்படையாகப் பேசுவது எனக்கு பிடித்திருக்கிறது.  அந்தந்த மொழியைக் கற்றுக் கொள்வதைத் தாண்டி நான் செய்கிற விஷயம் இதுதான்.

பின்னணி பாடகியாக உங்களுக்கு நல்ல பெயர் இருக்கிறது...

பாடுவது எனக்கு பிடிக்கும். மலையாளத்தில் நிறைய பாடல்கள் பாடியிருக்கிறேன். தமிழில் "எட்டு தோட்டாக்கள்' படத்தில் கூட பாடியிருக்கிறேன். அப்பா, அம்மா இரண்டு பேருமே இசைக்கலைஞர்கள். அதனால் சின்ன வயதில் இருந்தே இசை ஆர்வம் எனக்கு உண்டு. எதிர்பாராமல்தான் நடிக்க வந்தேன். எப்போதுமே இசைதான் எனக்கு.

தமிழில் இருந்து நிறைய இயக்குநர்கள் வாழ்த்து சொல்லிப் பேசியிருப்பார்கள்...

நிறைய பேர் வாழ்த்து சொன்னார்கள். வெற்றிமாறன், பாலா இரண்டு பேரின் வாழ்த்தும் முக்கியமானது. தமிழில் நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என்பது ஆசைதான். ஆனால், இப்போதைக்கு மலையாளத்தில் "ஆடுஜிவிட்டம்' என்ற படத்தை முடிக்க வேண்டும். அதை முடித்து விட்டுத்தான் தமிழுக்கு வர வேண்டும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT