தினமணி கொண்டாட்டம்

பாதுகாப்போம் பறவைகளை..!

ஆர். ஆதித்தன்

இயற்கைச் சூழலை பாதுகாப்பதிலும், வேளாண் தொழிலுக்கு உற்ற தோழனாக இருப்பதிலும் பறவைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது. அண்மையில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பைக் கண்டு அதிர்ந்து போன சம்பவமே இதற்கு சிறந்த உதாரணம்.

இந்தியாவைப் பொருத்தவரை உலகளவில் 13 சதவீத பறவை இனங்களைக் கொண்டு, பல்லுயிர் தன்மை காக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 535 பறவை இனங்கள் உள்ளன. இதில் சேலம் மாவட்டத்தில் மட்டும் 322 பறவை இனங்கள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

நம்மைச் சுற்றி பறவை இனங்கள் உள்ளன. மனிதனின் வாழ்வியலிலும், இயற்கையின் சூழலுக்கு உயிர்ப்போடு இருக்கவும் பறவைகள் முக்கியம் என்பதை உணராமல் இருக்கிறோம். 

மக்கள் அறிவியல் திட்டம் மூலம் பறவைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்கிறார் சேலம் பறவையியல் கழகத்தின் இயக்குநர் சு.வே.கணேஷ்வர் (25).

இவர் சேலம் அஸ்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர். அட்வான்ஸ்டு விலங்கியல் பட்டப் படிப்பை முடித்துவிட்டு, சிறு வயது முதல் பறவைகளின் மீது ஆர்வ மிகுதியால் சேலம் பறவையியல் கழகத்தை 2017 -இல் உருவாக்கி பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வை பொதுமக்கள், மாணவ, மாணவிகளிடம் ஏற்படுத்தி வருகிறார்.

சேலம் மாவட்ட வனத்துறையுடன் இணைந்து கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் வாழும் பறவைகளைப் பதிவு செய்து "சேலம் மாவட்டப் பறவைகள்' என்ற கையேட்டை உருவாக்கி ஆவணப்படுத்தி வருகிறார். 

இதுகுறித்து சு.வே.கணேஷ்வர் கூறியது:

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்து பறவைகள் மீது ஆர்வம் ஏற்பட்டது. கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்துவிட்டு முழு நேரமாக பறவைகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். 2017 -இல் சேலம் பறவையியல் கழகம் (ஜ்ஜ்ஜ்.ள்ர்ச்-ப்ண்ச்ங்.ர்ழ்ஞ்) தொடங்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 322 பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 165 பொதுப் பறவைகள் அடையாளம் காணப்பட்டு குறுங்கையேட்டில் தரப்பட்டுள்ளது.

இதில் நீர்ப் பறவைகள் (வாத்துகள், நீர்க்காகங்கள், கொக்கு, நாரை), இரை கொல்லிப் பறவைகள் (கழுகு, பருந்து, ஆந்தை), தரைவாழ் பறவைகள் (மயில், காட்டுக்கோழி, கவுதாரி, புறாக்கள்), மரம்வாழ் பறவைகள் (பூஞ்சிட்டு முதல் பெரிய இருவாச்சி), வான்வெளிப் பறவைகள் (தகைவிலான்கள், உழவாரன்கள்), இரவாடிப் பறவைகள் (ஆந்தைகள், இராப்பாடி) என 6 வகையாகப் பிரித்துள்ளோம்.

சேலத்தில் மூக்கனேரி, பவளத்தானூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஏரிகள் மற்றும் மேட்டூர் பண்ணவாடி, ஏற்காடு மலை பகுதிகளில் பறவைகளைக் கணக்கெடுத்து வருகிறோம்.

வெளிநாட்டு வலசை பறவைகள் மேட்டூர் பண்ணவாடி பகுதிக்கு வருகின்றன. சுமார் 180 பறவை இனங்கள் அங்குள்ளன. ஆர்டிக் பகுதியில் வாழும் பொன்னிற உப்புக் கொத்தி, ஐரோப்பிய நாடுகளில் உள்ள பஞ்சுருட்டான் ஆகிய பறவைகள் வலசை வருகின்றன.

கிழக்கு தொடர்ச்சி மலையில் 220 பறவை இனங்கள் உள்ளன. இதில் வெண் கன்னக் குக்குறுவான், பாறை சுண்டங்கோழி, மலை பூஞ்சிட்டு, சீகாரப் பூங்குருவி உள்ளிட்ட 15 ஓரிட வாழ் பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன.

வெண்பிடரி பட்டாணி குருவி, மஞ்சள் தொண்டை சின்னான், சின்ன மின் சிட்டு, பெரிய குயில் கீச்சான் ஆகிய 16 வகை பறவை இனங்கள் அருகி வரும் நிலையில் உள்ளன. 

மக்கள் அறிவியல் திட்டத்தின் மூலம் பறவைகள் அதிகம் நிறைந்து காணப்படும் பகுதிகளில் வாழும் கிராமப்புற மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் பறவைகள் இயற்கைச் சூழலுக்கு உதவி வரும் நிலை குறித்தும், பறவைகளைப் பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

இதில், சேலம் பறவையியல் கழகத்தில் ஏஞ்சலின், பள்ளி ஆசிரியர்களான செந்தில்குமார், வடிவுக்கரசி, கலைச்செல்வன், ராஜாங்கம், பிரதீபா, கவிதா ராம்குமார், தாரிணி, சக்தி சின்னக்கண்ணு, சுகுணா ராமமூர்த்தி, வெங்கடேஷ் ஜெயமுருகன், சுப்பிரமணிய சிவா ஆகியோர் முக்கியப் பங்களித்து வருகின்றனர்.

மேட்டூர் பண்ணவாடி பகுதியானது 180-க்கும் மேற்பட்ட பறவை இனங்களின் வாழிடமாக உள்ளது. 

அந்தப் பகுதியில் ஆண்டுக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வந்து செல்கின்றன. அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT