தினமணி கொண்டாட்டம்

தீபாவளி மலர் 2020

தினமணி

கலைமகள் - பக்.180; ரூ.120/-

கலைமகளின் 89-ஆம் ஆண்டு தீபாவளி மலர். கடந்த 88 ஆண்டுகால தீபாவளி மலர்களில் வெளியான கட்டுரைகள், சிறுகதைகள் அணிவகுத்து நிற்கின்றன.

முகப்புக் கட்டுரையாக காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரர் எழுதிய "அன்பே கடவுள்' அவரது வண்ணப்படத்துடன் ஜொலிக்கிறது. உள்ளே மகா பெரியவரின் "ஞானி ஹனுமாரும் அவரது ஞான குருவும்' (பால்யத்தில் சூரியனும், வாலிபத்தில் ராமரும்) கட்டுரை அற்புதம்.

கலைமகளின் ஆரம்ப ஆசிரியர் உ.வே.சா, தொடர்ந்து வந்த கி.வா.ஜ.வின் கட்டுரைகள் மற்றும் வாரியார், மு.வ., கா.ஸ்ரீ.ஸ்ரீ., நா.மகாலிங்கம், சோ.சிவபாதசுந்தரம், தொ.மு.பாஸ்கர தொண்டைமான், சுப்புடு உள்ளிட்டோரின் கட்டுரைகள் போற்றிப் பாதுகாக்க வேண்டியவை. லக்ஷ்மியின் "வெளிச்சத்தைப் பார்த்தபோது', ஜெயகாந்தனின் "கோடுகளைத் தாண்டாத கோலங்கள்', அகிலனின் "படி அரிசி', நா.பா.வின் "முத்துப்பட்டியும் புதுடில்லியும்', விக்கிரமனின் "பச்சைக்கிளியின் சபதம்', சுஜாதாவின் "மறு' என்று ஒன்றையொன்று மிஞ்சக்கூடிய கதைகள். சுப்பு, கண்மணி, உமாபதி, ஜி.கே.மூர்த்தி உள்ளிட்ட ஓவியர்களின் அந்தக் கால ஓவியங்கள் பரவசத்தைத் தருகின்றன.

யசோதையின் மடியில் குழலூதும் கண்ணன் அமர்ந்திருக்கும் ஓவியர் தமிழின் அட்டைப்படம் சிறப்பு. 88 ஆண்டுகால தீபாவளி மலர்களின் அரிய தொகுப்பு-களஞ்சியம் என சொல்லிக்கொண்டே போகலாம் இதன் சிறப்பை!

ஆனந்த விகடன் - பக்.400; ரூ.150/-


தருமபுர ஆதீனத்தின் ஆசியுரையோடு தொடங்கும் "விகடன் தீபாவளி மலர் 2020' காலண்டர் ஓவியர் முருகக்கனி, பார்வையற்ற பனையேறி முருகாண்டி, மதன் கார்க்கி, மிருதங்க வித்துவான் திருவாரூர் பக்தவத்சலம் போன்றோரது நேர்காணல்களோடு சிறுகதைகள், கவிதைகள், சினிமா, சிறிய திரை, ஆன்மிகம், வரலாறு, சமையல் போன்றவையும் சேர்ந்து தஞ்சாவூர் கதம்பமாக மணம் வீசுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மணப்பேடு கிராமம் குறித்த செய்திகளும் மானாமதுரை "கடம்' தயாரிப்பு குறித்து தகவல்களும் பலரும் அறிந்திராதவை.
"சினிமா களஞ்சியம்' பகுதியில் தமிழ்த் திரையுலகம் குறித்த பல அரிய செய்திகள் இடம் பெற்றுள்ளன (எம்ஜிஆரின் நூறாவது படம் "ஒளி விளக்கு' அல்ல, "புதிய பூமி'. இளையராஜாவின் ஆயிரமாவது படம் "தாரை தப்பட்டை' அல்ல, "செந்தமிழ்செல்வன்'. "காளிதாஸ்' முதல் "வர்மா' வரை தமிழில் மொத்தம் 6,759 நேரடித் தமிழ்ப்படங்கள் வெளிவந்துள்ளன-இப்படி).
இந்த ஆண்டு நூற்றாண்டாக அமைந்திருக்கும் எழுத்தாளர் தி. ஜானகிராமன், கவிஞர்கள் மருதகாசி, கு.மா. பாலசுப்பிரமணியம் ஆகிய மூவரைப் பற்றிய கட்டுரைகளுமே மிகவும் சிறப்பு.

சினிமாவைக் கொஞ்சம் குறைத்து சிறுகதைகளைக் கூட்டியிருக்கலாம் ஏனோ இம்முறை மலரின் சைஸ் சற்று சிறுத்து விட்டது. ஆனாலும் நிறைவான மலர்.

அமுதசுரபி - பக்.252; ரூ.175/-

சீதா சுயம்வர ஓவியம் தாங்கிய அட்டைப் படத்துடன் அமுதசுரபி தீபாவளிச் சிறப்பிதழ் மலர்ந்துள்ளது.

சுவாமி கமலாத்மானந்தரின் "ஸ்ரீ ராமாயணச் சிந்தனைகள்' இந்த மலரின் திலகமாகத் திகழ்கிறது.

ஆன்மிகம், பழைய இலக்கியம், நவீன இலக்கியம், கவிதை, நேர்காணல் போன்ற அம்சங்களுடன் இதழியல் முன்னோடிகள் பகுதியில் "இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் பணிபுரிந்து, அரை நூற்றாண்டு காலம் சென்னையிலிருந்து ஆங்கில பத்திரிகையாளர்களைத் தயார் செய்த ஜாம்பவான், "மாஸ்டர்' என்று அழைக்கப்பட்ட சி.பி.சேஷாத்ரி, இதழியல் துறைக்கு அளித்த அர்ப்பணிப்பை நினைவூட்டும் கட்டுரை அருமை.
தோல்வியிலிருந்து மீண்ட தொழிலதிபர் கே.ஆர்.கோபிநாத் சுய முன்னேற்றச் சிந்தனையாக, வெற்றிக்கு எளிமையான 13 வழிகளைச் சொல்லித் தருகிறார்.
"பரிகாரத் தலங்களில் பழைமையானது திருப்பனந்தாள்' கட்டுரை ஆன்மிகர்களுக்குப் பயன் தருவது.

நினைவுகளை இலக்கியமாக்கும் எழுத்து நயத்துக்கு இந்திரா பார்த்தசாரதியின் "தரகு' சுவையான எழுத்துக்குச் சான்று.நிதி ஆலோசகர் சோம.வள்ளியப்பன், "தங்கம் வாங்க சில சிக்கலற்ற வழிகள்' என்றகட்டுரையில் சொல்லித் தருகிறார்.

எழுத்தாளர் லக்ஷ்மி பற்றிய கட்டுரை, நூற்றாண்டு காணவிருக்கும் அந்தப் பெண்ணிய இலக்கிய இமயத்துக்கு பொருத்தமான கெüரவம்.


கோபுர தரிசனம் - பக்.340; ரூ.150/-


மலரின் முதல் பகுதியில் மஹா பெரியவரின் அருள் தவழும் வண்ணப்படம், அவர் எழுதிய "எனக்குக் கனக தாரை' கட்டுரையுடன் இடம்பெற்றுள்ளது. ""கனகாபிஷேகம் பெறுவதற்கு சொந்த ஹோதாவில் எந்த லாயக்கும் இல்லை. பலர் காட்டுகின்ற அபிமானத்தைத் தட்ட முடியவில்லை; கட்டுப்பட வேண்டியதாயிற்று'' எனும் அவரது வார்த்தைகளில்தான் எத்தனை பணிவு!

கண்ணதாசனின் "இறைவனை எழுப்புங்கள்', வாலியின் "மீசை' கவிதைகள் ஆன்மிக சிலிர்ப்பு. சுப்ர.பாலனின் "சாதனை மனிதர் கல்கி ஸ்ரீசதாசிவம்', நல்லி குப்புசாமி செட்டியாரின் "முதன்முதலாக சில அனுபவங்கள்', யோகாவின் "கிரேக்கத்தின் ஏதென்ஸ்', ப்ரியனின் "நடிகையர் திலகம் சாவித்திரி முதல் குருவம்மா வரை' ஆகிய கட்டுரைகள் சிறப்பு.

ஆர்.எஸ்.எம். எழுதிய "தி.ஜானகிராமனின் கதை மாந்தர்கள்' கட்டுரை மலருக்கு மகுடம். "மோகமுள்' நாவலின் யமுனா, "உயிர்த்தேன்' செங்கம்மா-அனுசுயா, "மலர் மஞ்சம்' பாலி, "அன்பே ஆரமுதே' டொக்கி-ருக்மினி, "செம்பருத்தி' புவனா ஆகியோர் தி.ஜானகிராமனின் வாசகர்களது நெஞ்சத்தில் சம்மணம் போட்டமர்ந்திருப்பார்கள் என்ற கட்டுரையாளரின் பாராட்டு மிகையல்ல.

சீடன் மீது பொறாமை வயப்பட்ட குரு அதிலிருந்து எப்படி மீளுகிறார் என்பதை "மோர்த்துளி' சிறுகதை மூலம் யதார்த்தமாக தந்திருக்கிறார் ராஜாஜி.

அட்டையில் யசோதா கிருஷ்ணனின் வண்ண ஓவியம் ராஜாவின் கைவண்ணத்தில் மிளிர்கிறது. ஓவியர் பத்மவாசன், வேதா, துர்கா ஆகியோரும் தங்களது படைப்புகளை உயிரோவியமாக்கி மலரில் உலவ விட்டுள்ளனர்.

விஜயபாரதம் - பக். 276; ரூ.100/-

வாழ்வியல் கதம்பமாக வெளிவந்துள்ளது மலர். "கூப்பிட்ட குரலுக்கு வருவேன்' என்ற கண்ணனின் ஓவியத்துடனும், திருவண்ணாமலை ஸ்ரீ சாரதா ஆஸ்ரம தலைவர் யதீஸ்வரி கிருஷ்ணப்பிரியா அம்மாவின் ஆசியுடனும் வெளிவந்திருக்கிற விஜயபாரதம் தீபாவளி மலர், பாரத நாட்டின் தொன்மையான மறந்துபோன விஷயங்களை இம்மலர் மூலம் தூசி தட்டிப் புதுப்பித்திருக்கிறது.

பாரதத்தில் மறைந்து, மறந்து கொண்டிருக்கும் இந்து வாழ்வியல் முறைகளைக் கையிலெடுத்திருக்கிறது. பரந்துபட்ட பாரத தேசத்தின் இந்து வாழ்வியலில் மொழி, சடங்குகள், கலாசாரம், வழிபாட்டு சுதந்திரம், அரசாட்சி, அறிவியல் பின்னணி, ஆன்மிகக் கல்வி, பெண்களின் பங்கு, குடும்பம், ஜோதிடம், இசை, சுற்றுச்சூழல், சமத்துவம், மருத்துவம் என அனைத்துத் துறைகளிலும் பரவியிருந்த பண்பாடு சார்ந்த வாழ்க்கை முறையை பல பிரபலங்கள் மூலமாக தனித்தனி கட்டுரையாகத் தொகுத்து இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தரும் முயற்சியாக வெளிக்கொணர்ந்திருப்பது நல்ல முயற்சி.

சிதைந்து கொண்டிருக்கும் வாழ்க்கை முறையை, பழக்க வழக்கங்களை நினைவுபடுத்தி தூக்கி நிறுத்த தீபாவளி மலர் மூலம் எடுத்திருக்கும் முயற்சியை பாராட்டலாம்.


லேடீஸ் ஸ்பெஷல் - பக். 224; விலை:170/-

"ஆரோக்கியம்' என்ற "தீம்' அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கிறது இந்த ஆண்டின் லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்.

சிறுகதை சிறப்பிதழ் போன்று 23 சிறுகதைகள் இடம் பெற்றிருந்தாலும் அத்தனையும் அருமை. சிவசங்கரியின் "எனக்கு பயமா இருக்கு', திருப்பூர் கிருஷ்ணனின் "இப்படியும் ஒரு பிழைப்பு', பாமா கோபாலனின் "ஆரோக்ய அவஸ்தைகள்' மேலும், டாக்டர் ஷ்யாமா சுவாமிநாதன், சுப்ர பாலன், சாந்தா தத், கிரிஜா ராகவன், ஆண்டாள் பிரியதர்ஷினி, ரேவதி பாலு ஆகியோரின் சிறுகதைகள் எதார்த்தம்.

எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய "ரயில் பயணம்' என்ற சிறுகதை கௌரி கிருபானந்தனின் மொழிபெயர்ப்பில் வெளியிட்டது தனிச்சிறப்பு.
டாக்டர் ஜெ. பாஸ்கரின் எஸ்.பி.பி குறித்த வாதூலன் எழுதிய "காக்க காக்க உடல் நலம் காக்க' கட்டுரை சிறப்பு.

ஆருர் ஆர். சுப்பிரமணியன் எழுதிய "ஸ்ரீ கோவிந்த தீட்சிதர்' , வேணு. ராச நாராயணன் எழுதிய "அரங்கனின் அடியாரும் அல்லிக்கேணி அடியாரும்' ஆன்மிகக் கட்டுரைகள், கவிதைகள் அனைத்தும் ரசிக்க வைத்தன. மொத்தத்தில் தீபாவளி மலர் பல்சுவை விருந்தளிக்கிறது.

பேசும் புதிய சக்தி - பக்.244; ரூ.250.

திருவாரூரில் இருந்து வெளிவரும் "பேசும் புதிய சக்தி' மாத இதழின் தீபாவளி மலர் முற்றிலும் புதிய கோணத்தில் சிறப்பாக வெளிவந்திருக்கிறது. அமெரிக்க நாவலாசிரியை எமிலி ருஸ்கோவிச்சின் நேர்காணல், கவிஞர் மு.மேத்தாவின் நேர்காணல், எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனின் நேர்காணல் உள்ளிட்ட அனைத்தும் வித்தியாசமான கருத்துகளைத் தாங்கி வந்திருக்கின்றன.
சுகுமாரன், கலாப்ரியா, சமயவேல், நா.வே.அருள் உள்ளிட்ட 31 கவிஞர்களின் கவிதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.


குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களான நாஞ்சில்நாடன், பாவண்ணன், சுப்ரபாரதிமணியன், எஸ்.சங்கரநாராயணன், சுரேஷ்குமார இந்திரஜித் , சி.எம்.முத்து உள்ளிட்ட 20 எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குறித்த ரவிசுப்பிரமணியனின் கட்டுரை, நாளைய கவிதைகள் பற்றிய இந்திரன் கட்டுரை, தன்னுடைய ஒவ்வொரு படைப்பும் உருவான விதத்தை எடுத்துச் சொல்லும் ம.காமுத்துரையின் கட்டுரை, மகாகவி பாரதியாருக்கும், நாவலர் சோமசுந்தரபாரதிக்கும் இருந்த நட்பைப் பற்றி பேசும் இராம.குருநாதனின் கட்டுரை என இம்மலரில் இடம் பெற்றுள்ள 16 கட்டுரைகளும் பல்வேறு தளங்களில் பயணிக்கின்றன.

இந்த தீபாவளி மலர், தரமான பல்சுவை விருந்தாக தமிழ் மக்களின் முன் படைக்கப்பட்டிருக்கிறது.


அம்மன் தரிசனம் - பக்.224; ரூ.150/-

காசி ஸ்ரீ அன்னபூரணி தேவியின் அட்டைப் படத்துடன் வெளியாகியுள்ள அம்மன் தரிசனம் மலரில், முகப்புக் கட்டுரையாக பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மகாசுவாமிகளின் "அன்பே சிவம்' மலர்ந்துள்ளது. ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த மகா சுவாமிகளின் மகிமையை விளக்கும் சில சுவையான சம்பவங்கள் மற்றும் அவர் அருளிய அறிவூட்டும் சிறுகதைகள் சிறப்பாக அமைந்துள்ளன.

சாரதா ரமணனின் "விக்ன வினாசக விநாயகர்', கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் எழுதியுள்ள "அமுதம் ஈந்தான்', சுகி சிவம் எழுதிய "என் குறையா? நின் குறையா?', பிரேமா நந்தகுமாரின் "வேதாந்தத்திற்கோர் வெற்றிக்கொடி', மாலதி சந்திரசேகரின் "சந்த் ஸ்ரீ நாமதேவர்', கணபதி தாசனின் "திருமூலரின் திருமந்திர நெறிகள்', க.ஸூந்தர ராமமூர்த்தி எழுதிய "ஸ்ரீகிருஷ்ணன் ஏன் ஹரி ஆனான்?', விஜயா ராஜு எழுதிய "உத்தரகாண்ட் சுற்றுலா', அலமேலு க்ருஷ்ணன் எழுதிய "தள்ளபாக அன்னமாசார்யர்' உள்ளிட்ட கட்டுரைகள் கருத்தைக் கவர்கின்றன. பக்தர் வழங்கிய "ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி ஸ்தோத்ரம்' தமிழ் விளக்கத்துடன் தரப்பட்டிருப்பது சிறப்பு. ஆன்மிக மணம் கமழும் மலர்.



சிவ ஒளி - பக்.178; ரூ.200/-

தமிழும் சைவமும் வைணவமும் ஒன்றிணைந்த மலராக மலர்ந்திருக்கிறது "சிவ ஒளி தீபாவளி மலர் 2020'. தமிழறிஞர் தி.ந. இராமச்சந்திரன், திருத்தொண்டர் புராணம், தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், திவ்ய பிரபந்தம், அருணகிரிநாதர், பாரதியார் ஆகியோரின் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதியிருக்கும் "செம்மொழியின் உரைநடை' கட்டுரை தமிழர்களுக்கு ஒரு பொக்கிஷமாகும் (வடமொழி தேவபாஷைதான். ஆனால், தமிழ் மகாதேவ பாஷை).

"திரு.வி.க. காட்டும் கடவுள் நெறி' கட்டுரையில் "தமிழ், தமிழன் என்று உணர்ச்சிவசப்பட்டு கூச்சலிடுவதும், உரத்த குரலில் ஒலிப்பது மட்டுமே தமிழுக்குப் பெருமை சேர்த்திடாது. தமிழில் புதைந்து கிடக்கும் சித்தாந்த உண்மைகளைத் தெரிந்து தெளிவது தமிழுக்கு மட்டும் சேவையன்று. அது தமிழன் தம் உயிர்க்கும் செய்திடும் சேவையாகும்' என்று திரு.வி.க. கூறியது இன்றும் பொருந்துகிறது.

மதுரை சோமு, ஜி.என். பாலசுப்பிரமணியம், எம்.எஸ். சுப்புலட்சுமி, திருமருகல் நடேசப் பிள்ளை போன்ற இசை மேதைகள் குறித்து சுருக்கமாகவும் சிறப்பாகவும் பதிவு செய்திருக்கிறார் கவிஞர் நா. விச்வநாதன் (இசைபட வாழ்தல்).

சென்னிமலை தண்டபாணி எழுதியுள்ள "திருமூலர் காட்டும் வழி' கட்டுரை, திருமந்திரத்தின் சாரமாகவும் பிழிவாகவும் உள்ளது.

"கடல் கடந்த மண்ணில் தேவாரத் திருத்தலங்கள்' கட்டுரை (இரா. சுப்பராயலு) இலங்கை சென்று பாடல் பெற்ற இரு தலங்களைக் காண இயலாதவர்களின் மனக்குறையைப் போக்கும். அனைவருமே விரும்பும் வண்ணம் அமைந்துள்ளது இம் மலர்.


பொம்மி - பக்.164; விலை:250/-

அட! குழந்தைகளுக்கு என்று பிரத்தியேகமாக "பொம்மி' தீபாவளி மலர்! படித்தவர்கள் அனைவரின் சார்பாகவும் பொம்மி ஆசிரியர் குழுவிற்கு அனுமதித்தால் (கரோனா காலமாக இருப்பதால்...) முதுகில் சபாஷ் என்று சொல்லி தட்டிக் கொடுக்கலாம்!

ஏராளமான தகவல்கள்! உதாரணமாக விட்டில் எழுதிய "டைனோசர் காலம் முதல்...' என்ற கடித அமைப்பில் வந்த கட்டுரை மிக அருமை! வாலு சார் எழுதியிருக்கும் கேள்வி பதில் பகுதி மிக அருமை! உப்பு பற்றிய தகவல்களை அள்ளித் தந்திருக்கிறார் முனைவர் அறிவழகன்! சிதம்பரம் ரவிச்சந்திரனின் "இயற்பியலின் பின்னணியில் இயங்கும் உலகம்' கட்டுரை பயனுள்ளது!
ஏராளமான குழந்தைப் பாடல்கள், மற்றும் ஏராளமான கதைகள் உள்ளன.

வண்டார் குழலி எழுதிய டதவளைக்கண் மந்திரவாதி', உமையவனின் "தங்க அருவி ரகசியம்', துரை.அறிவழகனின் "தோகைமயில்' போன்றவை குறிப்பிடத்தக்கவை. ரஸ்கின் பாண்ட் எழுதிய "சீதாவும் ஆறும்' கதையை வல்லிக்கண்ணன் மொழி பெயர்த்திருக்கிறார். மிக அருமை! ஓவியர் ராம்கியும், ராஜேவும் படக்கதைகளைத் தந்து அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள்! ஏராளமான குழந்தைகளுக்கான விளையாட்டுகளும், புதிர்களும் மலரில் அழகாகப் பூத்திருக்கின்றன. நறுமணம் மிக்க இதழ்களைக் கொண்ட மிக நல்ல மலர்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: 12 போ் கைது

வள்ளலாா் பன்னாட்டு மையம்: அன்புமணி கோரிக்கை

கல்லூரி மாணவியை மிரட்டி பணம் பறிப்பு: ஐடி ஊழியரிடம் விசாரணை

ஜேஇஇ முதன்மை தோ்வு முடிவுகள் வெளியீடு: 56 மாணவா்கள் 100-க்கு 100

கல்லீரல் கொழுப்பு: இலவச மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT