தினமணி கொண்டாட்டம்

குப்பைத் தொட்டியில்  வைடூரியம்!

ராஜன்

வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்குத் தனித்தனி அனுபவங்களைக் கொடுக்கும்.  அஸ்ஸாமை சேர்ந்த தள்ளுவண்டி காய்கறி வியாபாரி சோபரன். இவருடைய வாழ்க்கையில் நடந்த  சம்பவம் சினிமாவை மிஞ்சிவிடும். இவருடைய ஒரே மகள் ஜோதி. சோபரனுக்குத் துணை கிடையாது. காய்கறி விற்று கிடைக்கும் சொற்ப வருமானத்தில் ஜோதியை கஷ்டப்பட்டுப் படிக்க வைத்தார். அம்மாவின் அரவணைப்பு இல்லையொன்றாலும் படிப்பில் என்றுமே ஜோதி முதலிடம் தான். அவளுடைய ஆர்வத்தால் மேற்படிப்புக்காக கல்லூரியில் சேர்த்தார் சோபரன்.  கடந்த 2013- ஆம் ஆண்டு கணினி அறிவியல் இளங்கலை பட்டமும் வாங்கியாயிற்று.

படிக்கும்போதே அப்பாவிற்கு வியாபாரத்தில் உறுதுணையாக இருப்பாள்.  மிகவும் இளம் வயதில் குடும்பக் கஷ்டத்தைக் கருத்தில் கொண்டு பேட்டித் தேர்வு எழுதினாள். அஸ்ஸாம் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்றார். தற்போது வணிகவரித் துறையில் உதவி ஆணையராகப் பணியாற்றி வருகிறார்.

இவர்கள் இருவரது வாழ்க்கையை 22 ஆண்டுகள்  பின்நோக்கி நகர்த்தினால் ஒரு கதை இருக்கிறது.

ஒரு நாள் வியாபாரம் முடித்து விட்டு தன்னுடைய குடிசைக்கு வந்து கொண்டிருக்கிறார் சோபரன். குப்பைத்தொட்டி ஒன்றிலிருந்து  குழந்தை அழும் சத்தம் கேட்டது. எட்டிப்பார்த்தார். புதரில் அழகான பச்சிளம் பெண் குழந்தை. பசியால் கதறிக்கொண்டிருந்தது. குழந்தையை அங்கேயே விட்டு விட்டு வர மனமில்லை. அதை வீட்டிற்கு எடுத்து வருகிறார். யாராவது குழந்தையைத் தேடி வருவார்களா என்று எதிர்பார்த்தார். ஆனால் யாரும் வரவில்லை.

குழந்தையைத் தானே வளர்ப்பது என்று முடிவு செய்தார். தன்னந்தனி ஆளாக, தன் வியாபாரத்தையும் கவனித்துக்கொண்டு, அந்தக் குழந்தையை கண்ணும் கருத்துமாக வளர்த்தார். அரசு பள்ளியில் படித்து உயர் பதவியை அடைந்தார். அவர் தான் இந்த ஜோதி.

வேலைக்குச் சென்ற பின்பும் ஜோதியின் எளிமை குறையவில்லை. ""எனக்காக உங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்திருக்கிறீர்கள் அப்பா, நான் ஒரு நல்ல வேலைக்கு வந்து விட்டேன். நீங்கள் ஓய்வெடுக்கலாமே, வியாபாரத்தை விட்டுவிடுங்கள்'' என்றார்.

""இல்லை ஜோதி! இந்தத் தள்ளுவண்டிதான் இத்தனை நாளும் உனக்கும், எனக்கும் சோறு போட்டது. என்னால் முடிந்தவரை செய்கிறேன், எனக்கென்று வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை'' என்றார் சோபரன்.

ஜோதியைப் பற்றி, யாராவது அவருக்கு நினைவுபடுத்தினால் கோபப்படாமல் சொல்வாராம்... ""குப்பைத் தொட்டியில் குப்பைதான் இருக்கும் என்று யார் சொன்னது..? சில சமயம் வைடூரியமும் கிடைக்கும். எனக்குக் கிடைத்த வைடூரியம்தான் ஜோதி. இறைவன் எனக்களித்த பொக்கிஷம்!'' என்று கண் கலங்கச் சொல்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT