தினமணி கொண்டாட்டம்

தடைகளைத் தாண்டினால் வெற்றி உறுதி!

விஷ்ணு


வீரர்கள் பிறப்பதில்லை. அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் இணைந்து அவர்களை வடிவமைக்கிறார்கள். அதற்கு உதாரணம்தான் ஐபிஎல் வீரர் நடராஜ்.

கரோனாவின் நோய்த்தொற்றுக்கு மத்தியில் நடக்கும் இந்த ஆண்டு ஐபிஎல் ஆட்டத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருப்பவர் தான் இந்த நடராஜ். "நட்டு' என்று இவரைச் செல்லமாக ரசிகர்கள் அழைக்கிறார்கள். உலக கிரிக்கெட் பந்து வீச்சாளர்களின் கனவு விக்கெட்டான இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியை வீழ்த்தியதன் மூலம் அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம் ஒன்றில் பிறந்து கிரிக்கெட்டில் இந்த நிலையை அடைய பல்வேறு சவால்களை எதிர்கொண்டவர்.

""அடிப்படையில், என் குடும்பத்துக்கு கிரிக்கெட் பத்தி எதுவும் தெரியாது. குடும்பம் மிகவும் ஏழ்மையானது. சேலத்திலிருந்து 36 கி.மீ. தொலைவில் இருக்கும் சின்னப்பம்பட்டியில் அப்பா நெசவுத் தொழில் செய்கிறார். அம்மா தெருவோரத்தில் கடை வைத்திருக்கிறார். நான் தான் வீட்டில் மூத்தவன், மூன்று சகோதரிகள், ஒரு தம்பி. கிரிக்கெட்டில் இந்த நிலைக்கு வந்ததை நினைக்கும் போது பெருமையாக உள்ளது. ஆனால் இதற்குப் பின்னணியில் நான் பட்ட வலி வேதனைகள் ஏராளம். அரசுப்பள்ளியில் படித்தேன். அந்த சமயத்தில் என்னுடைய சகோதரர் தான் என்னுடைய பலமாக இருந்தவர். 5-ஆவது படிக்கும் போது கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன்.

போராட்டம் நிறைந்த வாழ்க்கை

என்னோட 20 வயதில் தான் நான் நிஜமான கிரிக்கெட் பந்தைப் பார்த்தேன். சென்னையில் ஃபோர்த் டிவிஷன் விளையாடினேன். அங்கு இருந்து தான் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. கிரிக்கெட் விளையாடணும்னா ஷூ வாங்கணும், டிரஸ் வாங்கணும். எங்கயாச்சும் மேட்ச்சுல விளையாட கூப்பிட்டாங்கனா, அங்க போறதுக்குக்கூட என் கிட்ட காசு இருக்காது. அந்தநேரத்தில், போட்டிகளில் ஜெயிக்கிற காசை வச்சு தேவைப்படுறதை வாங்கிட்டு, போக்குவரத்து செலவைப் பாத்துக்குவேன். நிறைய போராட்டம் இருந்தது. நான் பௌலர் என்பதால், எனக்கு ஷூ தான் முக்கியமான தேவையா இருந்தது. எந்த டீமுக்கு விளையாடப் போறனோ, அவங்களே ஷூவை ஸ்பான்சர் பண்ணுவாங்க. அந்த ஒரு ஷூவை ஒரு வருஷம் பத்திரமாக வைத்துப் பயன்படுத்துவேன்.

தமிழ்நாட்டு அணி சார்பில் ரஞ்சிக் கோப்பை விளையாடவேண்டும் என்பது தான் என்னுடைய இலக்காக இருந்தது. மற்ற வீரர்கள் போன்று இல்லாமல் நான் மாநில அளவிலான எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் நேரடியாக ரஞ்சிக் கோப்பையில் விளையாடினேன்.

2014-ஆம் ஆண்டு ரஞ்சியில் நேரடியாக விளையாடியதன் விளைவு என்னோட பந்து வீசும் முறை விதிகளுக்கு மாறாக இருக்கிறது என்று தடை பண்ணிட்டாங்க. என்னால் அதை மறக்கமுடியாது. மீண்டும் விளையாட வர்றதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டேன்.

என் மீதிருந்த தடை நீங்கி நான் கம்பேக் கொடுத்த வருஷம், டிஎன்பிஎல் நடந்ததனால் தான் நடராஜை யாருனே தெரியவந்தது. அந்த ஆண்டு ஐ.பி.எல்.லில் பஞ்சாப் அணி ஏலம் எடுத்தாங்க.

ஆனா, ரொம்ப பெரிய தொகையில் ஏலம் எடுத்ததில் எனக்கு அழுத்தம் அதிகமாக இருந்தது. ஷேவாக் சார் இப்ப வரை "அவனை சீக்கிரம் ஹிந்தி கத்துக்கச் சொல்லு'னு சொல்லுவாரு. அதற்கு அடுத்த வருஷம் ரஞ்சிக்கோப்பை விளையாடுறதுக்கு முன்னாடி முழங்கையில் பிரச்னை வந்துவிட்டது. அறுவை சிகிச்சை செய்திருந்தேன். மறுபடியும் ஒரு வருஷம் இப்படியாகிருச்சேனு நினைச்சேன்.

அப்போதான் எஸ்.ஆர்.எச். டீம் ஏலம் எடுத்தாங்க. அதுவும் நம்ம டீமில் நிறைய பவுலர்கள் இருந்தாங்க. அனுபவம் வாய்ந்த புவனேஷ்வர்குமார் போன்ற பௌலர்கள் இருக்கும் டீமில் ஏலம் எடுத்ததால், சந்தோஷமாக இருந்தேன். ஆனா, விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கல. பந்துவீச்சு பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் சாரும் நிறைய சொல்லிக் கொடுத்தாரு.

கிரிக்கெட் பந்தில் பயிற்சி எடுக்கும்போது பேட்ஸ்மேனுடன் தான் பயிற்சி எடுத்துக்கொள்வேன். பேட்ஸ்மேனுக்கு பதிலா ஷூ வைத்தோ, கோன் வைத்தோ பந்து வீச எனக்கு சத்தியமா வராது. யாராச்சும் பேட்ஸ்மேன் நின்னாங்கன்னா, 6 பந்தில் 6 யாக்கர் போட முடியும். என்னுடைய சீக்ரெட் பெருசா எதுவுமில்லை, டென்னிஸ் பந்து தான்... இதைவிட ஒரு பெரிய சந்தோஷத்தை எங்க அப்பா, அம்மாவுக்கு கொடுக்க முடியுமானு தெரியாது. அவங்களே, இதை எதிர்பார்த்திருக்கமாட்டாங்க.

கிரிக்கெட் அகாதெமி

எங்க அண்ணாவுக்கும் எனக்கும் கிரிக்கெட் அகாதெமி ஆரம்பிக்கணும்னு ஓர் ஆசை. எங்க ஊர் மக்களுக்கும் எங்க கிராமத்தைச் சுத்தியுள்ள மக்களுக்கும் கிரிக்கெட்னா என்னனு தெரியப்படுத்தணும்னு தான் நாங்க ஊரிலே கிரிக்கெட் அகாதெமி ஆரம்பிச்சோம்.

50 முதல் 60 பசங்க கோச்சிங் வர்றாங்க. எல்லோருக்கும் இலவச கோச்சிங் தான். அங்கிருந்து நிறைய பேரு சென்னை லீக் போட்டியில் விளையாடுறாங்க. டி.என்.பி.எல்.லில் விளையாட 3 பேர் செலக்ட் ஆகியிருக்காங்க. இன்னும் நிறைய பேரை அடையாளம் கண்டுபிடித்துக் கொண்டு வரணும்.

நான் தமிழ்நாட்டுக்காக விளையாடணும்னு சின்னதா ஓர் இலக்கை வைத்தேன். இலக்கை சிறிதாக வையுங்கள். அந்த இலக்கை அடைந்து வெற்றி பெறுங்கள். அடுத்து தானாக, பெரிய இலக்கு உங்களைத் தேடி வரும். வெற்றிக்கு முக்கியமான இன்னொரு விஷயம் ஒன்று இருக்கிறது. வாழ்க்கையில் சில நேரங்கள் ரிஸ்க் எடுத்துத்தான் ஆக வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் தாக்குதல்: உலக நாடுகளின் அறிவுறுத்தலை மீறி இஸ்ரேல் பதிலடி கொடுக்குமா?

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்யும்!

அழகு.. மிளிர்.. கம்பீரம்!

இனி வரும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதி: ஆர்சிபி பயிற்சியாளர்

SCROLL FOR NEXT