தினமணி கொண்டாட்டம்

சனீஸ்வரன் வேடத்தில் சங்கரதாஸ் சுவாமிகள்

22nd Nov 2020 06:00 AM | -அ.யாழினி பர்வதம்

ADVERTISEMENT

சங்கரதாஸ் சுவாமிகளிடம் நாடகக் கம்பெனி உரிமையாளர் பழனிசாமி ""ஏழு வயது சிறுவனான டி.கே.சண்முகத்தை கதாநாயகனாக்க வேண்டும். அதற்கொரு கதாபாத்திரம் தயார் செய்யுங்கள்'' என்றார்.

""ஆகட்டும். புத்தக கடைக்குச் சென்று "அபிமன்யு சுந்தரி அம்மானை பாடல்' இருந்தால் ஒரு பிரதி வாங்கி வாருங்கள்'' என்றார் சுவாமிகள்.

நாடக உரிமையாளர் பழனிசாமியும் தேடிப்பிடித்து புத்தகத்தை வாங்கி வந்து கொடுத்தார். இரவு உணவை முடித்த பின், ஓர் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் நாடகத்தை எழுதத் தொடங்கினார் சுவாமிகள்.

பொழுது விடிந்த போது சங்கரதாஸ் சுவாமிகள் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தார். அவரது படுக்கை அருகே "அபிமன்யு' நாடகம் தயாராக இருந்தது. சுமார் 4 மணி நேரம் நடைபெறும் நாடகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள், வசனங்களுடன் ஒரே இரவில் ஒரே இடத்தில் அமர்ந்து அடித்தல், திருத்தல், இன்றி எழுதியிருந்தது எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. அந்த நாடகம் புதுவையில் நடந்த போது பாரதியார் கண்டுகளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

நாலாட்டின் புதூர் என்ற ஊரில் "நள தமயந்தி' நாடகம் நடந்து கொண்டிருந்தது. அந்த நாடகத்தில் சனீஸ்வரனாக சங்கரதாஸ் சுவாமிகள் நடித்தார். விடியற்காலை நாடகம் முடிந்து, வேடத்தைக் கலைக்க அருகிலுள்ள ஆற்றுக்கு சுவாமிகள் போனார். அந்த நேரத்தில் சலவைத் தொழிலாளி பெண் ஒருவர் அங்கே வந்தார். சனீஸ்வரன் வேடத்தில் இருந்தவரைக் கண்டு மயங்கி விழுந்தவர், அதிர்ச்சியில் மரணமடைந்தார்.

""என்னால் ஒரு அப்பாவிப் பெண் இறந்து போனாளே'' என்று கதறினார் சுவாமிகள். அந்த பாவம் தீர காசி, கயா என புண்ணிய தலங்களுக்குப் போனார். மனம் சாந்தி கொள்ளவில்லை. தன்னையே தண்டித்துக் கொள்ள கயா ஆற்றங்கரையில் தனக்குத் தானே கருமம் செய்து கொண்டார். "நான் இனி இல்லற வாழ்க்கையை ஏற்பதில்லை. காலம் முழுவதும் துறவியாகவே வாழ்வேன். அதுவே எனது பாவத்திற்கு நான் தேடும் பரிகாரம்' என்று முடிவு செய்தார். அதன்படியே வாழ்ந்தார். அதனால்தான் அவர் சுவாமிகள் என எல்லோராலும் அழைக்கப்பட்டார்.

அதுபோல "இனிமேல் நான் நாடகங்களில் நடிப்பதில்லை' என்றும் சபதம் எடுத்துக் கொண்டு நாடகங்கள் எழுதும் எழுத்தாளராகவும், நாடக நடிகர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும் மாறினார்.

Tags : தினமணி கொண்டாட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT