தினமணி கொண்டாட்டம்

ரோஜா மலரே! - 65: படப்பிடிப்பில் தேடி வந்த நாடக வாய்ப்பு! - குமாரி சச்சு

சலன்

என்னுடைய விழாவை சிறப்பாக நடத்த "பிரியா விஷன்' ராது (ராதாகிருஷ்ணன்) விரும்பினார். அதற்கு "ஸ்வீட் 55' என்றும் பெயர் வைத்தார். காமராஜர் அரங்கில் இந்த விழா விமரிசையாக நடைபெற்றது. புகழ் பெற்ற நடிகர், நடிகைகள் பலர் இந்த விழாவிற்கு வந்திருந்து வாழ்த்தினார்கள். ஒவ்வொருவரும் என்னிடம் உள்ள சிறப்பம்சங்களைப் பற்றிப் பேசினார்கள். எல்லோர் பேச்சும் சிறப்பு என்றாலும் அஞ்சலி தேவி என்னைப் பற்றிக் கூறியது இன்றும் என் நினைவை விட்டு அகலவில்லை. காரணம், என்னிடம் என்ன இருக்கிறதோ, அதை உள்ளது உள்ளபடியே கூறினார். “


""நீ சிறு வயதில் இருந்தே நடிக்கிறாய். கதாநாயகியாக வந்த பின்னர் நகைச்சுவை நடிகையாக மாறி தொடர்ந்து நடித்துக் கொண்டு இருக்கிறாய். கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல், அதையும் உனக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொண்டு நடிக்கிறாய். இதற்காக உன்னை மனதாரப் பாராட்டுகிறேன்'' என்று சொன்னார்.

லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆருக்கு உடல் நிலை சரியில்லையென்றாலும் என்னை வாழ்த்த வேண்டும் என்று வந்தார். இதை நான் அவர்கள் குடும்பத்தில் இருந்து தெரிந்து கொண்டேன். ""சச்சுவிற்கு விழா என்றால் அந்த விழாவில் நான் இருக்கணும்'' என்று வீட்டில் உள்ளவர்களிடம் அவர் சொன்னதாகப் பின்னர் தெரிந்து கொண்டேன்.

எஸ்.எஸ்.ஆர். வாழ்த்தியது எனக்கு மிகுந்த மன நிறைவைத் தந்தது. காரணம் எஸ்.எஸ்.ஆர். செய்த உதவிகள் பல வெளியுலகிற்குத் தெரியாது. நடிக்க வேண்டும் என்றால், நாடகத்தில் வேடம் கொடுத்து, அவர்கள் தங்குவதற்குச் சென்னையில் வீடு எடுத்துக் கொடுத்து, மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுத்து உதவி செய்வார். அவர் அவ்வளவு சிறந்த மனிதர். அவர் வந்து வாழ்த்தியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்தது.

"காதலிக்க நேரமில்லை' படத்தில் நடித்த பிறகும் கூட அவர் என்னை கதாநாயகி ஆக்கிவிட வேண்டும் என்று முயற்சி செய்தார். ஆனால் அன்று இருந்த தமிழ்த் திரை உலகம் வேறு. கதாநாயகி வேடத்தில் நடித்துப் புகழ் பெற்றால், அவர் தொடர்ந்து கதாநாயகி வேடத்தில் மட்டும் தான் நடிப்பார். நகைச்சுவை வேடம் ஏற்றார் என்றால், தொடர்ந்து நகைச்சுவை வேடங்கள்தான் கிடைக்கும். பின்னர் அந்தச் சூத்திரம் மாறிவிட்டது. இன்று யார் வேண்டுமானாலும் எந்த வேடம் ஏற்றும் நடிக்கலாம்.

சிறந்த மனிதர்களில் மற்றொருவர் டி.எஸ்.பாலையா. நான் சிறு வயதில் இருந்தே நடிக்கும் காரணத்தால் எனக்கு மட்டுமல்ல, என் அக்கா "மாடி' லட்சுமிக்கும், எங்கள் குடும்பத்திற்கும் அவரை நன்றாகத் தெரியும். மயிலாப்பூரில் உள்ள ஒரு நகைக்கடைக்கு வருவார். நாங்களும் அந்த நகைக்கடையில்தான் நகைகளைச் செய்யக் கொடுப்போம். அப்படி மயிலாப்பூருக்கு வரும் போதெல்லாம், எங்கள் வீட்டிற்கு வந்து எங்களுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுச் செல்வார்.

நானும் அவரும் பல படங்களில் சேர்ந்து நடித்துள்ளோம். அதில் ஒரு படம் “"எங்களுக்கும் காலம் வரும்'. இந்தப் படம் 1967-இல் எடுக்கப்பட்ட படம். அதற்குப் பிறகு இதே பெயரிலேயே ஒரு படம் 2001 -ஆம் ஆண்டு வந்தது. நான் சொல்வது பழைய படத்தைத்தான். அந்தப் படத்தின் படப்பிடிப்பு பரணி ஸ்டூடியோவில் நடந்து கொண்டு இருந்தது. நான் செட்டிற்கு வெளியே ஒரு நாற்காலியைப் போட்டு உட்கார்ந்து கொண்டிருந்தேன்.

அன்று நடந்த படப்பிடிப்பில் நான் மற்றும் நாகேஷ், பாலையா அண்ணன், ரவிச்சந்திரன், பத்மினி அம்மா ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டன. நான் ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தேன். எனக்கு நேர் எதிரே கொஞ்சம் தள்ளி பாலையா அண்ணன் உட்கார்ந்து இருந்தார். அவரைச் சுற்றி சில பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் நாவலாசிரியர் பி.வி.ஆர். அவருடன் இருந்தவர்கள் நாடக நடிகர்கள், எனக்கு அவர்களைத் தெரியாது.

ஒரு நாடகத்தைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று காதில் பட்ட அளவில் தெரிந்தது. ஒரு கதையைப் பற்றி விலாவாரியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கதை "கல்கி' பத்திரிகையில் “"நீரோட்டம்'” என்ற தலைப்பில் பிரசுரமானது. அந்தக் கதையில் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். பாலையா அண்ணன் அவருக்கு ஜோடியாக எஸ்.டி.சுப்புலட்சுமி நடிக்கிறார் என்றும் ஒரு கதாபாத்திரத்தில் எஸ்.வி.ரமணன் நடிக்கிறார் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்த நாடகத்தின் கதாநாயகி யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. பலரைக் கேட்டிருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அதற்குள் ஒருவர், ""இந்தக் கதாபாத்திரம் கொஞ்சம் கனமான, நடிப்பை வர வழைக்கும் பாத்திரம். நன்றாக நடிக்கத் தெரிந்த ஒருவர் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தால், அவர்களுக்கு மிகவும் புகழ் கிடைக்கும்'' என்று சொன்னார்.

அப்பொழுது என்னைப் பார்த்தார் பாலையா அண்ணன். ஏன் என்னைப் பார்க்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. என்னைப் பார்த்த சில நொடிகளில் ""இங்கே வா'' என்று என்னை அழைத்தார். என்னை அழைப்பதன் நோக்கம் எனக்குப் புரியவில்லை. யோசித்துக் கொண்டே எழுந்தேன். அதுவரை நான் நாடகத்தில் நடித்தில்லை. மேடை என்றால் எனக்குப் பயம் எல்லாம் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் மேடை எனக்குப் பழக்கமானதுதான். அதில் நான் நடனம் ஆடி விட்டு வந்து விடுவேன். சிறு வயதில் இருந்தே மேடையில் நான் நடனம் ஆடுவதால் மேடை எனக்குத் தாய் வீடு மாதிரி. அதனால் மேடையைப் பற்றி எனக்குப் பயம் கிடையாது, மாறாக, அதன் மேல் பாசம் தான் அதிகம்.

அவருடன் இருந்தவர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார் பாலையா அண்ணன். ""இவர் தான் நாவலாசிரியர் பி.வி.ஆர். இவர் எழுதின கதை தான் "நீரோட்டம்'. அதை இவர்கள் நாடகமாக நடத்தப் போகிறார்கள். அதைப் பற்றித்தான் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். சிறப்பான கதை அது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் எங்களுக்குச் சரியான நடிகர் கிடைத்துவிட்டார்கள். நான் இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்த நாடகத்தின் கதாநாயகி பாத்திரத்திற்குச் சரியான நடிகை கிடைக்கவில்லை. காரணம் கனமான கதாபாத்திரம். உன்னைப் பார்த்தப் பிறகு நீ அந்த வேடத்திற்குப் பொருத்தமாக இருப்பாய் என்று நான் நினைக்கிறேன். அதனால் தான் நான் உன்னை அழைத்தேன்'' என்றார்.

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. மேடை நாடகத்தில் நடிப்பதா? என்னால் முடியுமா? வசனங்களை மறக்காமல் பேசி நடிக்க முடியுமா? யோசித்தபடி அவர்கள் முன்னால் நின்றேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT