தினமணி கொண்டாட்டம்

ஜோ பைடன்! சில சுவாரசியங்கள்..!

22nd Nov 2020 06:00 AM | -ஜெ

ADVERTISEMENT

 

ஜோசப் ராபினட் பைடன் என்பதன் சுருக்கமே ஜோ பைடன். ஜோ பைடன் இதற்கு முன்பு 1988 மற்றும் 2008-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் தோல்வியுற்றார். தனது  மூன்றாவது முயற்சியில் இப்போது வெற்றி வாகை சூடியுள்ளார். அமெரிக்க வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் (29-ஆவது வயதில்) செனட்டராகத் தேர்வு செய்யப்பட்டவர் இவர்தான். தற்போது மிக அதிக வயதில் அதிபராகத் தேர்வு பெற்ற பெருமையும் பைடனுக்கு கிடைத்துள்ளது. அவருடைய வயது 77.

எளிய தேர்தல் பரப்புரை, மக்களைக் கவர்ந்திழுக்கும் வசீகர வார்த்தைகள், அனுதாப பார்வையுடன் அடித்தட்டு மக்களை அணுகும் போக்கு, ஜோ பைடனுக்கு அமெரிக்க வாழ் பிற நாட்டு வம்சாவளியினர் இடையே ஆதரவைப் பெருக்கியது. தாழ்மையுடன் நடந்து கொள்ளும் அவரது உயர் பண்பு, குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரும் தற்போதைய அதிபருமான டொனால்ட் டிரம்புக்கு நேர்மாறானது.

பொது நிகழ்ச்சிகளில் எல்லோரிடமும் எளிமையாகப் பழகும் குணம், அரவணைத்தல், நலம் விசாரித்தல் போன்ற அம்சங்கள், அவரை "மிடில் கிளாஸ் ஜோ' என்றே பலரும் அழைக்கக் காரணமாக அமைந்தது.

ADVERTISEMENT

சிறு வயதில் திக்கிப் பேசக்கூடியவராக இருந்த பைடனை அவரின் நண்பர்கள் பலரும் கிண்டல் செய்தனர். மிக நீண்ட கவிதைகள், கட்டுரைகளைச் சப்தமாகச் சொல்லிப் பார்த்து தன் திக்கிப்பேசும் பழக்கத்தைத் தானே மாற்றிக் கொண்டார் பைடன்.

அதிபராக ஆவதற்கு மட்டுமல்ல, தனது சொந்த வாழ்க்கையிலும் மனதோடும், உடலோடும் போராடியவர். பைடனின் மனைவி நெய்லியாவும், 13 மாத குழந்தையாக இருந்த மகள் கிறிஸ்டினாவும் சாலை விபத்தில் உயிரிழந்தனர். இதையடுத்து, மிகவும் சிறு வயதில் இருந்த 2 மகன்களையும் கவனித்துக் கொள்வதற்காக அரசியலில் இருந்து ஒதுங்கிய பைடன், 5 ஆண்டுகள் கழித்து ஆசிரியை ஒருவரை மறுமணம் செய்து கொண்டார். பின்னர், முதுகு வலி, கழுத்துவலி, முடக்குவாதம், மூளையில் அறுவை சிகிச்சை என நோய்களுடனும் போராடியவர் பைடன்.

"எத்தனை முறை கீழே விழுந்தாலும் எழக் கூடியவர் என் தந்தை' என்பதுதான் பைடன், தன் தந்தை குறித்து அடிக்கடி சொல்வது. தன் தந்தையிடமிருந்து தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் கற்றுக் கொண்டு வலிமையானவராக வளர்ந்தார் பைடன்.

ஜோ பைடனின் ஆசை மகன் ஜோசப்பியோ அரசு வழக்குரைஞராக பணியாற்றி வந்தார். தனது 46-ஆவது வயதில் மூளை புற்றுநோய் காரணமாக அவர் உயிரிழந்ததால், நிலைகுலைந்து போன ஜோ பைடன். இதனால் 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தார். 2008 முதல் 8 ஆண்டுகள் துணை அதிபராக இருந்த பைடன், அந்த காலகட்டத்தில் அதிபராக இருந்த ஒபாமாவின் நம்பிக்கைக்கு உரியவராகவும் விளங்கினார்.

ஒபாமா அதிபராக பதவி வகித்தபோது, பல்வேறு வெளிநாட்டு விவகாரங்களில் அமைதிக்கான தூதராக செயல்பட்டவர்  பைடன். 

இந்தியாவில் குழந்தைகள் தினமாக நவ.14 கொண்டாடப்படுகிறது. ஆனால் உலக குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுவது நவ.20-ஆம் தேதியாகும். இதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது; ஜோ பைடனின் பிறந்த நாளும் நவ.20 தான்!
இளம் வயதில் தனக்கு நெருக்கமானவர்கள் மரணம் அடைந்துவிட்டதால், அமெரிக்கர்களுடன் அவர் உறவைக் கொண்டாடுகிறார். தன்னுடைய அரசியல் அதிகாரம் மற்றும் சொத்துகள் பற்றி கருதாமல், தன்னைப் போன்ற துயரத்தை சந்தித்தவர்களைக் கண்டால் அவர்களுடன் சிறிது நேரம் கழிக்கிறார். 

அவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதும் ஆதரவற்ற பெண் ஒருவர் பைடனை கட்டியணைத்து "செல்பி உங்களுடன் நான் எடுக்க வேண்டும்' என்று தன்னுடைய பையில் செல்லிடப்பேசியைத் தேடுகிறார். நீண்ட நேரம் தேடியும் கிடைக்கவில்லை. அதுவரை பொறுமையாக இருந்து அந்தப் பெண் செல்லிடப்பேசியைத் தேடி எடுத்த பிறகு செல்பி எடுத்தார்.  அதன்பிறகு அப்பெண்ணுக்கு நன்றி தெரிவித்துவிட்டு கிளம்பினார் பைடன்.

Tags : தினமணி கொண்டாட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT