தினமணி கொண்டாட்டம்

குறைவான வருமானம் நிறைவான வாழ்க்கை

1st Nov 2020 06:22 PM | -ஜெ

ADVERTISEMENT

நிறைவான வாழ்க்கைமாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றம் மட்டும்தான் நிரந்தரம் என்கிறார்கள் மதுரையைச் சேர்ந்த சரவணன்-நிஷாந்தி தம்பதிகள். கரோனா இவர்களின் வாழ்க்கையை உச்சத்தில் இருந்து கீழே கொண்டு வந்தாலும் மனம் தளராமல் புதுத் தொழில் தொடங்கி வெற்றிப் பெற போராடி வருகிறார்கள்.

அமெரிக்காவில் பத்து ஆண்டுகளாக கப்பல் ஒன்றில் உணவு தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தவர் சரவணன். அவருடைய மனைவி நிஷாந்தி மதுரையிலுள்ள புகழ்பெற்ற நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார். கரோனா ஏற்படுத்திய தாக்கம் இருவருக்கும் வேலை இல்லாமல் போனது. மாதம்தோறும் லட்சங்களில் வந்து கொண்டிருந்த வருமானம் ஒரு கட்டத்தில் ஒன்றுமே இல்லாமல் போனது. வயதான அப்பாவின் மருத்துவச் செலவு, குடும்பச் செலவு என வைத்திருந்த சேமிப்பு கரைந்து போனது. வாழ வழி தெரியாமல் தவித்தவர்களுக்குக் கை கொடுத்திருப்பது கரும்புசாறு விற்பனை. மதுரை கே.கே. நகர் பகுதியில் நடமாடும் கரும்புசாறு கடை நடத்தி வருகிறார்கள், கரோனா கால அனுபவங்களை
நம்மிடம் விவரித்தனர்:


""கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்க கப்பல் ஒன்றில் உணவு தயாரிப்புப் பிரிவில் பணியாற்றி வந்தேன். அதன் மூலம் 2,400 டாலர் வருமானமாக கிடைத்தது. இந்திய ரூபாய் மதிப்பில் இது ஒன்றரை லட்சமாகும். கடந்த ஜனவரி மாதம் சொந்த ஊரான மதுரை வந்தேன். மார்ச் 31-ஆம் தேதி நான் மீண்டும் அமெரிக்கா செல்வதற்கான விமான டிக்கெட் தயாராக இருந்தது. ஆனால் மார்ச் 23-ஆம் தேதி பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.

மார்ச் 31-ஆம் தேதி நான் அமெரிக்கா திரும்பச் செல்ல முடியவில்லை. காரணம் அமெரிக்காவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. நான் பணியாற்றிக் கொண்டு இருந்த கப்பல் நிறுவனம் என்னை மீண்டும் அழைக்கவில்லை. என்னுடைய மனைவி நிஷாந்தி வேலை பார்த்துக் கொண்டிருந்த நட்சத்திர ஹோட்டல் மூடப்பட்டது. இருவரும் வேலையிழந்தோம்.

ADVERTISEMENT

கையில் இருந்த சேமிப்பு கரைய ஆரம்பித்தது. அப்போது என் மனைவியின் தோழி சந்தியா என்பவர் திருச்சியில் ஆட்டோவில் கரும்புசாறு தயாரித்து விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வந்தார். அவரிடம் உதவி கேட்டதும் அவரே பணம் கடனாகக் கொடுத்து ஆட்டோவையும் கொடுத்தார்கள்.

ஜுன் 14- ஆம் தேதி இந்த கரும்புசாறு வியாபாரத்தைத் தொடங்கினோம். தொழில் தொடங்க எனக்கு ஆரம்பத்தில் பயமாகத்தான் இருந்தது. ஆனால் என் மனைவி "முயற்சி செய்து பார்ப்போம். நல்லதே நடக்கும்' என தைரியம் அளித்தார். அவர் சொன்னது போல் தொழில் வெற்றியடைய ஆரம்பித்தது.

கே.கே நகர் பகுதியில் எங்களது நடமாடும் கரும்பு சாறு விற்பனை நிலையம் உள்ளது. இந்தப் பகுதியில் அரசு அலுவலகங்கள் அதிகம் என்பதால் வேலை நாள்களில் மக்கள் கூட்டம் அதிகம். புதினா, எலுமிச்சை, கொய்யா, நெல்லிக்காய், இஞ்சி என 14 வகை சுவையில், உயர்தரத்தில் ஐஸ்கட்டிகளைப் பயன்படுத்தாமல் கரும்புசாறு தயாரித்து வழங்குவதால் எங்களுக்கென வாடிக்கையாளர்கள் அதிகம்.

ஒரு முறை வந்தவர்கள் மீண்டும் எங்கள் கடைக்கு வந்து செல்லாமல் இருக்கமாட்டார்கள். மேலும் நாட்டுச் சக்கரை, ரவா லட்டு போன்றவைகளை என் மனைவி தயாரித்துத் தருவதையும் விற்பனை செய்கிறோம். வண்டியை நானே இயக்குவதால் டிரைவர் சம்பளம் கொடுக்க வேண்டிய தேவையில்லை. கரும்பு சீவுவதற்கு மட்டுமே ஆள்களை வைத்துள்ளோம். முன்பு நான் சம்பாதித்ததை விட வருமானம் மிகவும் குறைவு தான்.

ஆனால் மன நிம்மதியுடன் மனைவி, குழந்தைகளுடன் நேரத்தை செலவு செய்ய முடிகிறது. இனி அமெரிக்காவில் இருந்து அழைப்பு வருமா என்பது தெரியவில்லை. ஆனால் இந்தத் தொழிலை மேம்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன்.

என்னைப் பார்த்த தேனியைச் சேர்ந்த ஒருவர், கோவையைச் சேர்ந்த ஒருவர் இந்த நடமாடும் கரும்பு சாறு விற்பனை நிலையத்தைத் தொடங்கி வெற்றியடைந்துள்ளனர். கடவுள் எல்லோருக்கும் சாப்பாடு வைத்திருக்கிறார் என்பதை கரோனா உணர்த்தியிருக்கிறது'' என்கிறார் சரவணன்.

""இருவரும் சம்பாதித்து வசதியான நிலையில் இருந்தோம். இன்று சாலையோரத்தில் கரும்புசாறு விற்பனைச் செய்கிறோம் என்பதை நினைத்து வருத்தப்படவில்லை. யாரையும் கையேந்தி நிற்கக்கூடாது இது தான் எங்கள் நோக்கம்.

மார்ச் மாதம் தொடங்கியது பொது முடக்கம். செலவு போக சேமிப்பு கொஞ்சம் தான் இருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்த போது மதுரையில் உணவு விற்பனை என்பது கட்டாயம் வெற்றியடையும். அதுவும் கரும்புசாறு என்பது விலை அதிகமானதும் இல்லை. அனைத்துத் தரப்பினரும் விரும்பி சாப்பிடும் ஜுஸ். அதனால் துணிச்சலாக ஆரம்பித்தோம்.

இப்போது எல்லா செலவும் போக 30 சதவிகித லாபம் கிடைக்கிறது. நான் இந்தத் தொழில் தொடங்கப் போகிறோம் என்றதும் பலரும் எங்களை வேண்டாம் என்று தான் சொன்னார்கள். ஆனால் அவர்கள் யாரும் எந்தப் பண உதவியும் செய்யவில்லை. ஆனால் என் மனதில் ஒரு விஷயம் மட்டும் நெருடலாக இருந்தது. என் கணவர் கப்பலில்பணியாற்றியவர்.

ஆனால் அவர் சாலையோரத்தில் கரும்பு சாறு விற்பனை செய்வதை எப்படி எடுத்துக்கொள்வாரோ என்று நினைத்தேன். ஆனால் அதையும் அவர் நல்ல விஷயமாகத்தான் பார்த்தார். அதனால் தான் இன்று குறைவான வருமானத்தில் நிறைவான நிம்மதியுடன் இருக்கிறோம்'' என்கிறார் நிஷாந்தி.

ADVERTISEMENT
ADVERTISEMENT