தினமணி கொண்டாட்டம்

வன மேம்பாட்டுக்கு நிதி

1st Nov 2020 07:45 PM

ADVERTISEMENT

 

ஆந்திர மாநிலம் டண்டிகா அருகில் சுமார் 1650 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் காஜிபள்ளி நகர்ப்புற வன மேம்பாட்டுப் பணிகளுக்காக நடிகர் பிரபாஸ் ரூ. 2 கோடி நிதி வழங்கியுள்ளார். "பசுமை இந்தியா சவால்' திட்டத்தின் கீழ் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதியின் மூலம் உருவாக்கப்பட இருக்கும் சுற்றுச் சூழல் பூங்காவுக்கு பிரபாஸின் தந்தையின் பெயரான யூ.வி.எஸ்.ராஜுவின் பெயர் சூட்டப்படவுள்ளது. பிரபாஸ் தத்தெடுத்திருக்கும் இந்த வனப் பகுதி, ஹைதராபாத் அவுட்டர் ரிங் சாலையில், ஹைதராபாத்துக்கு 20 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது. நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சந்தோஷ்குமார், தெலங்கானா மாநில சட்டம் அமைச்சர் இந்திராகரன் ரெட்டி அல்லோலா ஆகியோருடன் இதற்கான அடிக்கல்லை, பிரபாஸ் நாட்டினார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் அந்த வனப் பகுதியை, தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கோபுரம் ஒன்றிலிருந்து மூவரும் பார்வையிட்டனர். பின்னர் வனப் பகுதியில் மரக்கன்றுகளும் நட்டனர். இந்த வனப்பகுதியில் ஒரு சிறுபகுதி நகர்ப்புற வனப் பூங்காவாக மாற்றப்படும் எனவும், மூன்று தொகுதிகளாக விரிந்திருக்கும் எஞ்சிய பகுதிகள் அரிய வகை மூலிகைகள் மற்றும் தாவரங்களைக் கொண்டன என்றும் அவை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக இருக்கும் எனவும் வனத்துறை அறிவித்துள்ளது. நடைபாதைகள் உருவாக்குவது, பார்வைக் கோபுரங்கள் அமைப்பது, பூங்காவினுள் அமரும் கூடாரங்கள் ஏற்படுத்துவது மற்றும் மூலிகைப் பண்ணை அமைப்பது ஆகிய பணிகள் முதற் கட்டத்தில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT