தினமணி கொண்டாட்டம்

தினமணியும் நானும்: 1934-2019

10th May 2020 07:58 PM

ADVERTISEMENT

 

தலைமுறைகள் கடந்தாலும் தரம் குறையாத தினமணி 

நான் 1983-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து தினமணி வாசிக்கிறேன் என்று சொல்வதை விட சுவாசிக்கிறேன் என்று சொல்வது தான் பொருந்தும்.

நறுக்குத் தெரித்தாற் போன்ற தலையங்கம் , பல்துறை அறிஞர்களின் நடுப்பக்கக் கட்டுரைகள் வாசகர்களின் கேள்விக்கு வாசகர்களே பதில் தரும் விவாதமேடை , ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறள் இவை தினமணி இதழின் அக்மார்க் பக்கங்கள்.

ADVERTISEMENT

ஆன்லைன், நிறைய பதிப்புகள் இல்லாத அன்றைய காலகட்டங்களில் ஊரில் இல்லாத நாட்களில் ... ஊருக்குத் திரும்பியவுடன் அத்தனை நாட்களின் இதழ்களையும் சேர்த்து ஒரு வரி விடாமல் படித்த நினைவு இன்றும் பசுமையாய் மனதில் பதிந்திருக்கிறது.

வாசகனாய் இருந்து இன்று இதில் கட்டுரையும் எழுதும் வாய்ப்புப் பெற்றது நான் செய்த பேறு தானே?

இலக்கிய அன்பர்கள் சார்பில் ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். ஞாயிறு தோறும் மலரும் ஒரு பக்க இலக்கிய மணத்தை தினந்தோறும் - இலக்கிய மணி என்ற தலைப்பில் ஒரு பக்கம் தரக்கூடாதா?

தலைமுறைகள் தாண்டியும் தரம் குறையாத தினமணியின் தமிழ்த் தொண்டை தலை வணங்கிப் போற்றுகிறேன்.

-உதயம் ராம், சென்னை 


வாழ்வின் ஓர் அங்கம் 


காலையில் சூடான காபியுடன் வீட்டின் முன் பகுதியில் டீபாய் மீது வந்து சலவை செய்து மடிக்கப்பட்ட சட்டைத் துணி போல விழும் தினமணி வாசிப்புடன் தான் என் அப்பாவின் காலை பொழுது தொடங்கும். 

இது எனக்கு விவரம் தெரிந்து நாள் முதல் நடப்பது. இப்போது எனக்கு வயது 52. அரசு பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர். என் குடும்பத்திற்கும், தினமணிக்கும் உள்ள தொடர்பு 50 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. 

என் சிறுவயதில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தினமணி வாசிப்பு தான் பாடப் புத்தகம் தாண்டி அந்த சிறு வயதிலேயே தமிழ், அரசியல், பொது அறிவு, நாட்டுபற்று, உலக நடப்புகள் என என்னை வளப்படுத்த உதவியது.

கட்சி சார்பில்லாது, பண்பானவர்கள், படித்தவர்கள் அறிவு ஜீவிகளிள் பத்திரிகை என்பதால் அக்கம்பக்கம் இருப்பவர்களின் மரியாதையை வாசகர்களுக்கு பெற்று தரும் பத்திரிகை தினமணி.

ஆசிரியர் ஏ.என்.எஸ் பொருளாதாரக் கட்டுரைகள் மேனிலை வகுப்பில் கணிதம் பயின்ற என்னை கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படிக்கத் தூண்டியது. 

ஈழப் போராளிக் குழுக்களைப் பற்றிய அவரது கட்டுரைகள் அவர்களின் ஆரம்பம் மற்றும் வளர்ச்சியை தெரிந்து கொள்ள உதவியதோடு, ஈழப் போராட்டத்தின்  அனைத்து பரிமாணங்களையும் புரிந்து கொள்ள வகை செய்தது.

பொருளியல் ஆசிரியரான எனக்கு தினமணியின் தலையங்கம், கட்டுரைகள், 
வர்த்தக மணியின் கட்டுரைகள், பொருளாதார வணிகச் செய்திகள், கற்பித்தலின் போது  மேற்கோள் காட்ட அவை அள்ளித்தரும் புள்ளி விவரங்கள் நடப்பு நிலவரங்களை மாணவர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க உதவியாக உள்ளது.

-க.முருகன், முதுகலை ஆசிரியர், 
திருநெல்வேலி


பேருந்து பிரச்னைக்கு தீர்வு


அஞ்சல் துறையில் 40 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற என்னுடைய இளமைக் காலம்  முதல் தினமணி படித்து வருகிறேன். தரமான செய்திகளை தினமணி வழங்கி வருகிறது. நல்லச் செய்திகளை படித்த திருப்தி ஏற்படுகிறது. 
தினமணியில் ஆராய்ச்சி மணி  பகுதி மூலம் வாணியம்பாடி மக்களின் பல்வேறு பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளேன். 

முன்பெல்லாம் வாணியம்பாடியில் இருந்து பெங்களூரு போக வேண்டும் என்றால் வேலூரில் இருந்து வரும் பேருந்தில்தான் ஏற வேண்டும்.  கூட்டம் நிரம்பி வழிந்து வரும் பேருந்தில் நின்றபடியே பெங்களூரு போக வேண்டும். 

அதே போல பெங்களூருவில் இருந்து வாணியம்பாடி திரும்பும் போது முதலில் வேலூர் போகிறவர்களை மட்டும் ஏற்றுவார்கள். பேருந்து புறப்படும் போது வாணியம்பாடி செல்பவர்களை ஏற்றுவார்கள். இடம் இல்லாததால் நின்றபடியே தான் வாணியம்பாடி திரும்ப வேண்டும். 

ஆக போகும் போதும் திரும்பும் போதும் நின்றபடியே தான் செல்ல வேண்டும். 
வாணியம்பாடியில் இருந்து பெங்களூருக்கு இரு பேருந்துகள் விடுமாறு தினமணி ஆராய்ச்சி மணியில் எழுதி இருந்தேன். 

என் கோரிக்கையினை ஏற்று வாணியம்பாடியில் இருந்து பெங்களூருக்கு இரு பேருந்துகளை அரசு இயக்கியது. இதே போல் 50-க்கும் மேற்பட்ட வாணியம்பாடி பிரச்னைகளை தினமணி மூலம் தீர்த்துள்ளேன். 

-இராதா கிருஷ்ணன், 
வாணியம்பாடி
 

ADVERTISEMENT
ADVERTISEMENT