தினமணி கொண்டாட்டம்

புத்தகங்கள் விரிக்கும் தனிமைச்சிறகுகள்

10th May 2020 07:50 PM | -பாரதிபாலன்

ADVERTISEMENT


இந்த கரோனா காலத்தனிமைப்படுத்துதலை நம் மனம் தாங்கமுடியாமல் தவிக்கிறது. தனிமை தான் மிகப் பெரிய தத்துவ ஞானி!. தனிமையில் இருப்பதும், தனிமைப்படுத்தித் தனிமையில் விடும்போதும் நாம் கற்றுக் கொள்வதும், உள்முகமாகப் பெற்றுக்கொள்வதும் ஏராளம். அந்த அனுபவங்களைப் பெற்று மீள்கின்றபோது நாம் எப்படி மனோபலம் கொண்டவர்களாக மாறுகிறோம் என்பதை உலகப் புகழ் பெற்ற புத்தகங்கள் சில நமக்குக் கற்றுத் தருகின்றன. வாழ்வில் நாம் கற்க வேண்டிய கல்வியாகவும் அது நிலைத்து விடுகிறது.

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் எழுதிய ஸ்பானிஷ் நாவல் "ஒன் ஹன்ட்ரெட் இயர்ஸ் சாலிடியூட்', இந்நாவலில் கொலம்பியாவில் மகோண்டோ என்ற கற்பனையான ஒரு கிராமத்தை உருவாக்கிக் காட்டுகிறார். அந்தக் கிராமம் வேறு எந்த நகரத்தோடும் கிராமத்தோடும் தொடர்பு இல்லாமல் பல நூற்றாண்டுகளாகத் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தப்பின்புலத்தில் அந்த கிராமத்தில் ஒரு குடும்பத்தில் ஏழு தலைமுறைகளாக நடக்கும் கதை தான் இந்த நாவல். தனிமையின் குரல் தான் இந்த நாவல் முழுவதும் ஓங்கி ஒலிக்கிறது.

இப்படித் தனிமையில் இருக்கும் அந்தக் கிராமம் கால ஓட்டத்தில் மெல்ல மெல்ல மற்ற கிராமங்களோடும் நகரங்களோடும் தொடர்பு கொள்கிறது. மக்கள் ஒன்றிணைகிறார்கள் . சிறிது காலத்திற்குள்ளே அவர்களுக்குள் பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன. அது பெரிதாகிறது . பின்பு அது உள்நாட்டுப் போராக வெடிக்கிறது. எதிர்பாராத அளவு உயிர் சேதங்கள் ஏற்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகிறார்கள். தப்பிப்பிழைத்த சிலர் மீண்டும் இந்த உலகத்துடனான தொடர்பை அறுத்துக் கொண்டு தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு வாழத் தொடங்குகிறார்கள் என்பது தான்1967-இல் வெளி வந்த இந்த நாவலின் கதை.

இந்த நாவல் எழுதுவதற்காக நாவலாசிரியர் நீண்ட காலம் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு இந்த நாவலை எழுதி இருக்கிறார். இவருக்கு 1982 -இல் நோபல் பரிசு கிடைத்தது, இவர்தான் மாயாஜால யதார்த்த வாதத்தைப் புனைவுக்குள் புகுத்திய முதல் நாவலாசிரியர், இவர் , 2014 -ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

ஆல்பர்ட் காம்யூ என்ற பிரெஞ்சு நாவலாசிரியர் எழுதிய நாவல்தான் " தி ஸ்ட்ரேஞ்சர்' என்ற நாவல். ,இந்த நாவலில் வருகின்ற "மியூர்சால்ட்' என்ற இளைஞன் எந்த உணர்வுக்கும் ஆட்படாமல் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு, உள்முகமாகவே வாழ்கிறான். அவனுடைய தாய் இறந்து விட்டதாகத் தகவல் வருகிறது . தாயின் இறந்த உடலுக்கு முன் வந்து நிற்கிறான். எந்த உணர்ச்சியும் இல்லாமல் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து பிடிக்கிறான் , பின்பு நகர்ந்து அதே இடத்தில் தேநீர் அருந்துகிறான் . அவ்வளவு தான்.! திரும்பிச் சென்று விடுகிறான்.

ADVERTISEMENT

இப்படியாக அவன் உணர்ச்சியற்றவனாக வாழ நேர்கிறது. இந்தச் சூழ்நிலையில் அவன் ஒருவிதமான மனநிலையில் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுகிறான், உடனே அவன் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகிறான், நீதிமன்றம் அவனுக்கு மரண தண்டனை வழங்குகிறது, அந்த மரண தண்டனையை ஊர் அறிய மக்களுக்கு நடுவிலே நடைமுறைப்படுத்த கோர்ட் உத்தரவிடுகிறது, மரண தண்டனைக்கு முதல் நாள் சிறைச்சாலையில் தன் அறையில் அவன் அதுகுறித்து நெடுநேரமாகச் சிந்திக்கின்றான், அப்போது தான் அவன் மனமுடிச்சு மெல்ல அவிழ்கிறது, அப்போது மெல்லத் தன் தனிமையிலிருந்து விடுபடுகிறான். அளவற்ற மகிழ்ச்சி அடைகிறான். நாளை நாம் கொல்லப்பட்டு விடுவோம் என்பதை விட பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்திக்கப் போகிறோம் என்ற உற்சாக உணர்வு அவனிடம் மேலோங்குகிறது, இந்த உலகத்தோடு அவன் இணைய முற்படுகின்றபோது, சட்டம் அவனைக் கொன்று விடுகிறது என்பதுதான் கதையின் மையம், இந்த நாவலாசிரியர் ஆல்பர்ட் காம்யூ அல்ஜீரியாவில் பிறந்தவர், அல்ஜீரிய நாடகக்குழுவில் தீவிரமாக இயங்கியவர், இவர் 1957- இல் இவருடைய 44 வயதில் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவர் , 1960- இல் மறைந்தார்.

"ஜேன் அயர்' என்பது சார்லோடி பிராண்ட் என்ற இங்கிலாந்துப் பெண் நாவலாசிரியர் சுயசரிதை போல எழுதிய நாவல். பெற்றோர் டைபாய்டு காய்ச்சலில் மரணமடைந்த பின்பு தன் அத்தையின் வளர்ப்பில் வளரும் ஜேன் அயர் என்ற இளம்பெண்ணின் துயர்மிகுந்த கதைதான் இது. ஆதரவற்றோர்கள் படிக்கும் பள்ளியில் ஜேன் அயரைச் சேர்த்துவிட்டு தனிமைப்படுத்துகிறாள் அவளுடைய அத்தை. பின்பு தன் வீட்டில் தன் கணவன்' இறந்த "சிகப்பு "அறை' என்ற ஒரு அறையில் ஜேன் அயரைப் பல ஆண்டுகள் அடைத்து வைத்துத் தனிமைப்படுத்தித் துன்புறுத்துகிறாள், அந்தத் தனிமையில்' பேய்' பயத்தில் அவள் மனம் அடைந்த துன்பமும் துயரமும் விவரிக்கமுடியாத உணர்வுகளும், பின்பு அந்த உணர்வுகளில் இருந்து அவள் எப்படி கடந்து வெளியேறினாள் என்பதுதான் இந்த கதை. தனிமைகொண்ட மனதின் விபரீத சித்திரங்களும் ஒவ்வொரு கணத்தையும் அது கடந்து வருவதும், அந்த ஆழமான தனிமையில் மனம் எவ்வாறு இயங்குகிறது என்பதையும் உளவியல் கண்ணோட்டத்தோடு தத்ரூபமாக விவரித்துக் காட்டுகிறார் ஆசிரியர்.

உலகப் புகழ் பெற்ற "கடலும் கிழவனும்' என்ற நாவலை எழுதிய எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய நாவல்தான் "எ மூவபிள் பீஸ்ட். "முதல் உலகப்போருக்கு பின்பு எர்னஸ்ட் ஹெமிங்வே பாரிஸில் வாழவேண்டிய நிலை ஏற்படுகிறது, அது அவருக்குப் பிடிக்கவில்லை, அவர் மனம் எதிலும் ஒட்டவில்லை , அந்த உலகில் இருந்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு வாழ்கிறார். அப்படி வாழ நேர்கின்ற ஒவ்வொரு தருணத்தையும் அவர் குறித்துக்கொள்கிறார் .

அவர் சந்தித்த மனிதர்கள், சூழல்கள், இடங்கள், எல்லாவற்றையும் குறித்துத் தினசரி ஒரு டீக்கடையில் உட்கார்ந்து எழுதுவார், அந்த தனது நீண்ட நெடிய தனிமை அனுபவங்களை சுயசரிதை போல் இந்த நூலில் எழுதி இருக்கிறார்,அவரின் இந்த மனச்சித்தரிப்பை உலகம் முழுவதுவும் கொண்டாடுகின்றது, இதேபோன்று இவருடைய "கடலும் கிழவனும்' என்ற நாவல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது, ஒரு மீனவக் கிழவன் திமிங்கலத்தோடு தனிமையில் நின்று நடத்தும் நீண்ட நெடிய போராட்டமும் அதன் வீரியமும், வெற்றியும் தான் "கடலும் கிழவனும்' நாவலின் மையம், எர்னஸ்ட் ஹெமிங்வே என்ற அமெரிக்க எழுத்தாளரை உலகம் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த எழுத்தாளர் என்று போற்றுகிறது, 1953 -இல் புலிட்சர் பரிசும் 1954 நோபல் பரிசும் இவருக்கு கிடைத்தன.

ஜே ஆஷர் 2007 -ஆம் ஆண்டு எழுதிய நாவல்தான் " தேர்டின் ரீசன்ஸ் ஒய்' இது ஒரு வித்தியாசமான நாவல், உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் " ஹேனா பேக்கர்' என்ற இளம்பெண்ணைத் தனிமைப்படுத்துகிறார்கள் .அவளுக்குப் பல பெரிய துரோகங்களை இழைக்கிறார்கள், அவளைத் தற்கொலை செய்துகொள்ளச் செய்யும் நோக்கில் அந்தத் தனிமைப்படுத்துதலைத் தீவிரப்படுத்துகிறார்கள். அவள் தனிமையில் இருக்கின்ற ஒவ்வொரு கணமும் வேறு துன்பமயமான உலகைக் கண்டடைகிறாள் .

அப்பொழுது உண்மையாக நம்மோடு இருப்பவர்கள் யார் என்ற சிந்தனையைச் செதுக்கிக்கொண்டிருக்கிறாள். இறுதியில் அவள் தற்கொலை செய்து கொள்வ
தற்கு காரணமான 13 சம்பவங்களைக்குறிப்பிட்டு அதை ஆடியோ டைரியாக ஒலிப்பதிவு செய்து தன்னுடைய உயிர்த்தோழியான "க்ளே ஜென்சன்' என்ற தோழிக்கு அனுப்பிவைத்து, தன் மரணத்துக்குக் காரணமானவர்களைச் சந்திக்கச் சொல்கிறாள். அது அவளுடைய நட்பு வட்டங்கள் முழுமைக்கும் பரப்பப்படுகிறது. முழுக்க முழுக்கத் தனிமையும் அது உருவாக்கும் மனநிலையின் உயிரோட்டமான பதிவும் தான் இந்த நாவல், இந்த நாவல் "ஆபிரகாம்லிங்கன் விருது,',' கலிபோர்னியா புக் விருது', உள்ளிட்ட 8 விருதுகளைப் பெற்றுள்ளது. நெட்பிளிக்ஸில் இக்கதை திரைப்படமாக வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்டீபன் சோபோஸ்கி என்ற அமெரிக்க எழுத்தாளர் எழுதிய " தி பர்க்ஸ் ஆப் பீயிங் எ வால்பிளவர் " தனிமைப்படுத்தப் பட்ட இளம் மனதின் தத்தளிப்பு தான் இந்த நாவல்! இந்த நாவலில் வருகிற சார்லி என்ற 15 வயது சிறுவன் தனிமையில் வாழ்பவன். எப்போதும் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் உள்முகச் சிந்தனையாளனாக இருக்கிறான். யாருடனும் தொடர்புகொள்ளாமல் தனிமையில் இருக்கும் இவன் கற்பனையான தன்னுடைய நண்பனுக்குத் தொடர்ந்து, தன் மனஓட்டங்களைக் கடிதங்களாக வடித்து அனுப்பக்கூடியவனாக இருக்கிறான்.

அந்தக் கடிதங்கள் சொல்லும் செய்திகளை எளிதில் எவராலும் புரிந்து கொள்ள
முடியவில்லை, இவனுடைய நிலையைப் பார்த்து இவனுடைய பெற்றோர் அவனை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார்கள் அங்கு சென்ற பின்புதான் இளம் வயதில் அவனுடைய அத்தையால் கொடுமைப்படுத்தப்பட்டு மனச்சிதைவுக்கு ஆளாகி உள்ளான் என்பது தெரியவருகிறது. பின்பு அவனை மெல்ல மெல்ல அந்த மனத்தனிமையிலிருந்து எவ்வாறு விடுவித்து இயல்பு நிலைக்குக் கொண்டு வருகிறார்கள் என்பது தான் இந்த நாவல். 2012-இல் இது திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது.

ஆண்டி வீர் என்ற இளம் அமெரிக்க எழுத்தாளரின் முதல் நாவல் தான்"தி மார்சியன்' இது ஒரு அறிவியல் புனைகதை . 2035 -ஆம் ஆண்டில் நடப்பதுபோல் எழுதப்பட்டுள்ளது .அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் வாட்னி என்ற விண்வெளி வீரன் செவ்வாய் கிரகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்படுகிறான். அங்கு அவன் திசைதவறி அனைத்துத் தொடர்புகளையும் இழந்து தனிமையில் மாட்டிக் கொள்கிறான். உயிரினங்களே இல்லாத அந்த செவ்வாய் கிரகத்தில் அந்தத் தனிமையை, அவன் எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பதுதான் இந்த நாவலின் மையக் கரு. அவனுக்கு அங்குப் பசிக்கிறது, பசியைப் போக்க உருளைக்கிழங்கு பயிரிடலாம் என நினைக்கிறான் .

அதற்குத் தண்ணீர் வேண்டும், என்ன செய்வது ட்ஹ்க்ழ்ர்ஷ்ஹ்க்ஷ்ண்ய்ங் என்ற வேதிப் பொருளை எரித்து அதைப் பயன்படுத்தி அவன் செயற்கைத் தண்ணீரை உருவாக்கி, உருளைக்கிழங்கைப் பயிரிட்டு, பசியைப் போக்கிக்கொள்ளும் சுவையான சம்பவத்தினை ஆசிரியர் விவரிப்பது விநோதமான கற்பனை.

இந்தச் சூழ்நிலையில், அவன் உயிரோடு தான் இருக்கிறான் என்பதை நாசா விஞ்ஞானிகள் ஆய்வுசெய்து கண்டுபிடிக்கிறார்கள். "நீ உயிரோடு எப்படித் தப்பித்துக்கொண்டாய்?' என்று கேட்கிறார்கள் அதற்கு அவன் "என் அபரிமிதமான நகைச்சுவை உணர்வால் தான் நான் உயிர் பிழைத்து இருக்கிறேன்' என்கிறான் இப்படியாகப் போகிறது இந்தக் கதை! இந்த நாவல் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த இளம் மாடல் - நடிகை அம்பர் ஸ்மித் எழுதிய "தி வே ஐ யூஸ்டு டு பி' ஈடன் என்பவள் மிகவும் அழகாக இருப்பாள். அவளை அவளது சகோதரனின் நண்பனொருவன் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டுப் போய்விடுகிறான். அதிலிருந்து அவளால் மீளவே முடியவில்லை. உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் அவள் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு, பயம், பதட்டம் , அவமானம், குற்றஉணர்வு போன்ற நெடுந்துயரில் உழன்று கொண்டிருக்கிறாள் அப்போதைய அவளுடைய மனநிலையைத் தத்ருபமாகப் படம் பிடித்துக் காட்டுவதுடன் அதில் இருந்து அவள் எப்படி மீள்கிறாள் என்பதுதான் 2011-இல் வெளியான இந்த நாவலின் மையம், தனிமைப்படுத்தப்படுவதையும் தனித்திருத்தலையும் மையப்படுத்தி எழுதப்பட்ட இந்தப் புத்தகங்கள் உலகஅளவில் மிகவும் புகழ்பெற்றவை.

ADVERTISEMENT
ADVERTISEMENT